
ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு, இன்று முதல் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.
ஆளும் கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, கடந்த மாதம் 30-ம் தேதி ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்,
ஜெகன்மோகன் ரெட்டி. பதவி ஏற்ற நாளிலிருந்து பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி, ஆந்திர மக்கள் மட்டுமின்றி, மற்ற மாநில மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அம்மாநிலத்தில், ஐந்து துணை முதல்வர்களை நியமித்து, இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கினார்.
அதிலும் நான்கு பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து, `ரையத் பரோசா’ திட்டம்மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு 12,500 ரூபாய் பலன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து விநியோகிக்கப்படும், போக்குவரத்துக் கழகத்தை அரசு நடத்தும்’மதுவிலக்கு’ என அதிரடித் திட்டங்களால் அசத்திவருகிறார்.
அதேபோல ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறையளிக்க வேண்டும் என்றும் திட்டம் தீட்டினார்.
இதற்காக சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 19 மாடல் விடுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது ஒன்றை அந்த யூனிட் அதிகாரிகள் தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த விடுமுறையை அடிப்படை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்று முதல், இந்த வார விடுமுறை அமலுக்குவருகிறது. முதல்வரின் இந்த ஜாக்பாட் அறிவிப்பால் காவலர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



