
பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.
இது பொதுமக்கள் மற்றும் சக பயணிகளிடையே அச்சத்தையும், அருவெருப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில்
இதனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல.
இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடங்கியவுடன் கல்லூரிகள் திறந்ததும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள்.
ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் சென்று கொண்டிருந்த பேருந்தைச் சிறைப்பிடித்தனர்.
பின்னர், பேருந்து மேற்கூரையின் மீது ஏறிக் கோஷமிட்டவாறு வந்து கொண்டிருந்தனர்.
பேருந்தின் முன்னாலும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட்டது.
இதனால், திடீரென்று டிரைவர் பிரேக் அடிக்க பஸ்சின் மேற் கூரையில் இருந்தவர்கள் சீட்டுக் கட்டு போலச் சரிந்து கீழே விழுந்தனர்.
ஒருவர் மேல் ஒருவர் விழுந்து `அய்யோ அம்மா’ன்னு கதறியபடி ஓடினர். மக்களுக்குத் தொல்லை தரும் மாணவர்கள் விழுந்து அடிபட்டதற்காக பொதுமக்களோ, சகபயணிகளே யாரும் வருத்தப்படவில்லை.
மாறாக, இவர்களுக்கு இது காணாது இன்னும் நன்றாக வேண்டும்' ,காயமடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது’ பெற்றவர்களின் நிலையை எண்ணிப் பார்க்காதவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மாணவர்களைத் திட்டி வந்தனா்.
வருடம் முழுவதும் தங்களை கல்லூரிக்குச் சுமந்து செல்லும் பேருந்துக்கும் அதன் ஓட்டுநர், நடத்துநருக்கு நன்றி சொல்வதுதானே பஸ்டே என்பதாகும்.
.ஆனால் என்றைக்காவது நம் மாணவர்கள் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் நன்றி தெரிவித்திருப்பார்களா? மாறாகத் தினம் தினம் அவர்களிடத்தில் சண்டை போட்டுக்கொண்டுதான் செல்வார்கள்.
பஸ் டே என்ற பெயரில் பேருந்தையும் சேதப்படுத்துகின்றனர். ஆனால், கேரளத்தில் பஸ் டே கொண்டாடப்படும் தினத்தில் தாங்கள் பயணிக்கும் பேருந்தை சுத்தமாகக் கழுவும் பணியினை மாணவர்களே மேற்கொள்கின்றனர்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மானசிகமாக நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
நம் மாணவர்களிடத்திலும் இது போன்ற மாற்றம் எப்போது வருமோ?



