இளைஞர்களின் புதுமுயற்சி ! ஆல்டர் ஆகும் அங்கன்வாடி பள்ளிகள்!

அரசுப்பள்ளிகள் மேன்மை அடையும்.இ

பராமரிப்பின்றிக் கிடக்கும் அரசு அங்கன்வாடி பள்ளிகளை  வண்ணம் பூசி, குழந்தைகளுக்குச் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றை இலவசமாக வழங்கி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியமைத்து வருகிறார்கள் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

இந்த இளைஞர் குழுவுக்குத் தலைமையேற்றுள்ள பிரதீப்பிடம் பேசினோம்:
அரசுப்பள்ளிகளில் மரக்கன்றுகளை நாங்கள் நடச் சென்றோம். அப்போது  அங்குக் கழிவறை வசதி கூட இல்லாமால் குழந்தைகள் கஷ்டப்படுவது தெரியவந்தது.  சேலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 25 க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் விவரமும் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்குக் காரணம் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லாததே என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

சேலத்தில் இயங்கும் 36 அங்கன்வாடி மையங்களை புதுப்பித்து  அதனை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.நாங்கள் முதலில் சீரமைக்க நினைத்தது சின்னம்மாபேட்டை அங்கன்வாடி பள்ளி. இது இடியும் நிலையில் இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்த போது, பள்ளியை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை என்றார்கள். உடன் நாங்கள் எங்கள் கையிலுள்ள சிறுத் தொகையை சேகரித்து இடியும் நிலையில் இருந்த கட்டடத்தை முதலில் சீரமைத்தோம்.

குழந்தைகள் பாதுகாப்பான சூழ்நிலையை உணர்ந்தார்கள். முழுக்க வெள்ளை அடித்துக் கொடுத்தோம். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி கொடுத்தோம். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்கள் தானாக கொண்டு வந்து சேர்த்தார்கள்.அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அம்மாபேட்டையிலுள்ள அங்கன்வாடி பள்ளியை மாற்றினோம். பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் சீருடை, அடையாள அட்டை தயார் செய்து வழங்கினோம். பள்ளி முழுக்க வண்ண மயம் ஆக்கினோம். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எங்களுக்குப் பெரிதும் உதவி செய்தார்கள்.

மொத்தமாகப் பள்ளியை சீரமைக்க 1 லட்சத்து 40 ஆயிரம் செலவானது. இதில் பெரும் பங்கு அந்தப்பகுதி மக்கள் கொடுத்து உதவினார்கள். மேலும் எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை, பிளம்பிங், கொத்தனார் வேலை, வெள்ளை அடிப்பது போன்றவை தெரியும் என்பதால்  கூலி என்ற செலவு கிடையாது.

நாங்கள் அம்மாபேட்டை பள்ளியை தயார் செய்து கொடுத்ததற்கு பல தரப்பினரும் இடமிருந்து பாராட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது அல்லிக்குட்டை அங்கன்வாடி பள்ளியை சீரமைத்துத் தருமாறு அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர்.  இந்த ஆண்டு அரசு பல அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்ந்தியுள்ளது. உடனே அந்தப்பள்ளிக்கு சென்று அனைத்து விஷயங்களையும் மாற்றினோம்.

இப்போது அங்கன்வாடி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக விளங்குகிறது. நாங்கள் பணி மேற்கொண்ட மூன்று பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை நூறு சதவிகிதம் எட்டிவிட்டது. எங்கள் முயற்சி வீண் போகவில்லை. அந்தப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பலரும் முன் வந்து இருக்கிறார்கள். ஆனால் பள்ளியில் இடமில்லை. அடுத்த மாதம் மற்றொரு பள்ளியில் பராமரிப்பு பணிகளைச் செய்ய இருக்கிறோம்” என்கிறார் பிரதீப்.

இது போன்று தமிழகதிலுள்ள மற்றைய இளைஞர்களும் நினைத்து செயல்பட்டால் பல அரசுப்பள்ளிகள் மேன்மை அடையும்.

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...