மக்கள் போற்றும் மகராசி ராணி ருத்ரமா!


‘எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே ஐஸ்வர்யம் தாண்டவமாடும்’ என்று கூறுவர் நம் முன்னோர். பஞ்ச பூதங்களையே ஆணையிட்டு அடக்கிய வீர மாதரசிகளின் வரலாறுகளை நம் புராணங்கள் எழுதிச் சென்றுள்ளன. தைரிய சாகசத்திற்கும் விசாலமான கண்ணோடத்திற்கும் பெயர் பெற்று விளங்கிய வீர வனிதைகள் மகாராணிகளாக அரசாண்ட கதைகளை நாடறியும்.

அவர்களுள் ராணி ருத்ரமாதேவி மகளிருள் மாணிக்கமாகத் திகழ்கிறாள். இவள் பெண் தானே! இவளால் என்ன செய்துவிட முடியும்? என்று எள்ளி நகையாடிய எதிரிகளை ருத்ரமாதேவி நையப் புடைத்து புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி கொண்ட கதைகளை காகதீய வம்ச சரித்திரத்தில் காண்கிறோம்.

ஆந்திர தேசத்தை இக்ஷ்வாகு, சாதவாஹனர், சாளுக்கியர், சோழர், காகதீயர் முதலான அரச வம்சத்தினர் பரிபாலம் செய்துள்ளனர். இவர்களுள் காகதீய வம்ச அரசாட்சி ஆந்திர தேசத்தின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. ஆந்திர தேசத்தை அரசாண்ட காகதீய அரசர்களுள் துருவ நட்சத்திரம் போல் விளங்கியவள் ராணி ருத்ரமா தேவி.

காக்தீய வம்சம்:-

காகதீய அரசர்கள் ஆந்திர தேசத்தை 1000 முதல் 1323 வரை முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளனர். காகதீயர்கள் சைவ மதத்தினர். இவர்கள் ஆட்சியில் பிரம்மாண்டமான சிவன் கோயில்களைக் கட்டி வழிபாடு செய்தனர். அக்காலங்களில் ஜைன மதத்தவர் தம் கொள்கைகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தனர். அரசர்கள் சிவபக்தர்களாக இருப்பது அவர்களுக்கு எடுப்பாக இல்லை. நிறைய கலகங்களை விளைவித்தனர்.

முதலில் தெலங்காணா பிரதேசம் மட்டுமே காகதீயர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் சிறிது சிறிதாக தம் ஆட்சியை விஸ்தரித்து வந்தனர்.

காகதீய அரசர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், இன்றும் பாதுகாக்கப்பட்டு அவர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஹனுமகொண்டா, பாலம்பேட்டை, பில்லலமர்ரி போன்ற இடங்களில் இவர்கள் சிவாலயங்கள் நிறுவி உள்ளனர். பாகாலசெருவு, தர்மசாகரம் போன்ற நீர் நிலைகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொண்டு செய்துள்ளனர்.

மார்கோ போலோ என்ற இத்தாலிய யாத்திரிகர் அந்நாளில் ஆந்திர நாட்டில் பயணித்து தான் பார்த்ததையும் கேட்டதையும் எழுதி வைத்துச் சென்றுள்ளார். கோட்டுப்பள்ளி என்ற கப்பல் துறையிலிருந்து காகதீயர்கள் கடல் வியாபாரம் செய்துள்ளதைப் பற்றியும் விவரித்துள்ளார்.

ஓருகல்லு, ஏகசிலா நகரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட வரங்கல் நகரம் காகதீயர்களின் தலைநகராக விளங்கியது. இந்நகரம் சிற்பக் கலைகளின் நிலையமாக விளங்குகிறது. பழங்கால கோவில்களும் வரங்கல் கோட்டையும் இன்று சிதிலமாக தோற்றமளித்தாலும் அன்றைய ஆந்திர நாட்டின் வைபவங்களைப் பேசும் சின்னங்களாக மிகுந்துள்ளன. வரங்கல் கோட்டையின் விஸ்தீரணம், நிர்மாணம், சிம்ம துவாரம், அதிலுள்ள ஆலயம், மண்டபம், தோரணம் ஒவ்வொன்றும் ஒரு கலைப் பொக்கிஷம். முகலாயர்களின் படையெடுப்பில் தப்பி பிழைத்த இந்திய அரச வம்ச கோட்டைகளுள் வரங்கல் கோட்டை பிரதானமானது.

காகதீயர்களின் சிற்பக் கலைக்கு மற்றுமொரு சான்று பாலம்பேட்டை நகரில் உள்ள ராமப்பா தேவாலயம். இக்கோயிலை ஒவ்வொரு இந்தியனும் பார்த்துப் பரவசமடைய வேண்டும், இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியங்களாகத் திகழ்கின்றன. இக்கோகோயிலின் அருகில் ராமப்பா செருவு உள்ளது. இக்குளத்து நீர் இன்றைக்கும் விவசாயத்திற்குப் பயன்படுவது இதன் சிறப்பு.

ராணி ருத்ரமாதேவி;-

ராணி ருத்ரமாதேவியின் தந்தை கணபதி தேவ மகாராஜா. இவர் 1199 முதல் 1261 வரை நீண்ட காலம் அரசாண்டார். இவருக்கு எட்டு மனைவியர் இருந்தும் யாருக்கும் ஆண் வாரிசு உருவாகவில்லை. பட்டத்து அரசியான சோமம்மாவுக்கு ருத்ரமாம்பா, கணமாம்பா என்று இரு புதல்விகள்.

ருத்ரமாம்பா 1220ல் பிறந்தார். ஆண்பிள்ளை இல்லாத காரணத்தால் கணபதி தேவர் தன் மூத்த மகளான ருத்ரமாம்பாவை ருத்ரதேவர் என்று பெயர் சூட்டி ஆண் மகவு போலவே வளர்க்கலானார். சிறு பிராயம் முதலே குதிரையேற்றம், வாட் பயிற்சி, விற்பயிற்சி போன்றவற்றில் தேர்ந்து ருத்ரமா தேவி சிறந்த வீரனைப் போல் திகழ்ந்தாள்.

அரசாட்சி விவகாரங்களை தந்தை கணபதி தேவரிடமிருந்து நன்கு கற்றறிந்த ருத்ரமாதேவி திருமண வயதை எட்டினாள். சாளுக்கிய அரசன் இந்துசேகரனின் புதல்வன் சாளுக்கிய வீரபத்ரனுடன் மகளின் திருமணத்தை முடித்தார் கணபதி தேவர். அதன் மூலம் சாளுக்கிய ராஜ்யத்துடன் உறவும் பாதுகாப்பும் கிட்டியது.

ருத்ரமா தேவிக்கும் ஆண் வாரிசு உருவாகவில்லை. அவள் கணவன் தன் மற்றொரு மனைவிக்குப் பிறந்த மகனை இளவரசனாக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ருத்ரமா, தன் மகள் வயிற்றுப் பேரன் பிரதாப ருத்ரனை தத்து எடுத்து அவனை இளவரசனாக்க முடிவு செய்தாள். அதை விரும்பாத ருத்ரமாவின் கணவன் அவளுக்கு விரோதியானான்.

வயது முதிர்ந்து வந்த கணபதி தேவர் மகள் ருத்ரமா தேவியை அரச சிம்மாசனத்தில் ஏற்றிப் பார்க்கத் துடித்தார். ஆனால் அவர் தம்பிமார்களும் சில மந்திரிகளும் ஒரு பெண்ணை அரியணையில் அமர்த்தி அவள் கட்டளைக்கு அடி பணிவதை விரும்பவில்லை.

இது தான் சமயம் என்று ஜைன மதத்தினர் கலவரத்தைத் தூண்டினர். கிராம கரணம் வேலை பார்த்தவர்களுள் பலர் ஜைன மத்தவராக இருந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் வசூலித்த தொகையை அரசு பொக்கிஷத்திற்கு அனுப்பாமல் ஏமாற்றினர். அதுவரை வம்ச பாரம்பர்யமாக வந்தது கரணம் பணி. அதற்கான கணக்கு வழக்குகளை சொல்லிக் கொடுக்கும் பள்ளிக் கூடங்களை ருத்ரமாதேவி கிராமங்களில் நிறுவியதோடு பொதுமக்களை அதில் பயில்வித்து அவர்களை கரணம் பணிகளில் நியமித்து பெரும் புரட்சி செய்தாள். அதன் மூலம் மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றாள்.

ருத்ரமா தேவி மகாராணியாக அரியணை ஏறுவதை விரும்பாமல் கூடவே இருந்து குழி பறித்த ஹரி ஹர தேவர், முராரி தேவர் போன்றவர்களின் கொட்டாதை அடக்கி அவர்களைத் துரத்தியடித்தார் கணபதி தேவர். பின்னர், ருத்ராம்பாவுக்கு 1261ல் ருத்ர மகாராஜா என்று பட்டப் பெயரோடு பட்டாபிஷேகம் செய்வித்தார் கணபதி தேவர்.

1266ல் ருத்ரமாவின் கணவன் மரணமடைந்தான். அடுத்த ஆண்டே தந்தையும் கண் மூடினார். அதோடு உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளோடு எந்நேரமும் போராட வேண்டியிருந்தது. ராணி ருத்ரமா அவை அனைத்தையும் தன் வீரத்தாலும் சமயோஜித புத்தியாலும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற்றாள்.

‘மொகலிசர்ல’ என்ற ஊர்லிருந்த தன் குல தெய்வம் ஏகவீர தேவி ஆலயத்திற்கு ருத்ரமா தேவி வழிபாட்டிற்குச் சென்றிருந்த போது அதற்காகவே காத்திருந்த ஹரிஹர தேவர், முராரி தேவர் இருவரும் மீண்டும் சூழ்ச்சி செய்ய முற்பட்டனர். தாம் ரகசியமாகச் சேர்த்த படையுடன் வந்து காவலர்களைக் கொன்று கோட்டைக்குள் புகுந்து கதவைச் சாத்தினர்.

ஆலயத்திலிருந்து திரும்பிய ருத்ரமாவுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இயல்பாகவே தைரிய சாகசம் நிரம்பிய ராணி ருத்ரமா அஞ்சவில்லை. கோவிலுக்குத் தம்மோடு வந்த படை வீரர்கள் அளவில் குறைவு. மொத்த படையும் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. என்ன செய்வதென்று ஆலோசித்து உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். பொது மக்களிடம் செய்தி தெரிவிக்கும்படி ஆணையிட்டாள்.

மக்களனைவரும் தம் அரசிக்கு அநியாயம் நேர்கிறதென்று அறிந்து உடனே கைக்குக் கிடைத்த ஆயுதங்களோடு கிளம்பி ராணிக்குத் துணையாக அணிவகுத்து நின்றனர். சமுத்திரம் போல் அலை அலையாகக் கிளம்பி வந்த ஜனத்திரளுக்கு முன் கோட்டைச் சுவரும் எதிரிப் படையும் நிற்க இயலவில்லை. பொது மக்களுக்கு ராணி ருத்ரமா தேவி மேலுள்ள விசுவாசத்தைக் கண்டு எதிரிகள் அஞ்சி ஒளிந்தனர். ஆனால் இம்முறை ருத்ரமா அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்களைக் கொன்று போட்டு கோட்டையைக் கைப்பற்றினாள்.

உள் நாட்டுப் போர் முடிவுற்றதென்று சற்று ஆசுவாசப்பட்டாள் ருத்ரமா. ஆனால் அவள் பெண் தானே! என்று ஏளனத்தோடு வெளி நாட்டு அரசர்கள் அவளைத் துச்சமாகக் கருதி நாட்டைக் கைப்பற்ற திட்டமிட்டனர். கலிங்கர்களும் தேவகிரி யாதவ அரசனான மகாதேவனும் அவளோடு யுத்தத்திற்குக் கிளம்பினர். ஜைனர்களை உடன் சேர்த்துக் கொண்டு எட்டு லட்சம் வீரர்களோடு வந்த மகாதேவன் வரங்கல் கோட்டையை முற்றுகை இட்டான். தைரியமாக முன்னின்று யுத்தம் செய்தாள் ருத்ரமாதேவி.

பதினைந்து நாட்கள் நடந்த கடின யுத்தத்தில் ருத்ரமாவின் கையே ஓங்கியிருந்தது. எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். யாதவ அரசின் கோட்டை வரை அவர்களைத் துரத்திச் சென்றனர் ருத்ரமாவின் வீரர்கள். ருத்ரமாவின் நாட்டின் மீது போர் தொடுத்தற்கு நஷ்ட ஈடாக மூன்று கோடி தங்க நாணயங்களைக் காணிக்கை செலுத்தி ருத்ரமாவோடு நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டான் மகாதேவன். உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் அந்த நாணயங்களைப் பகிர்ந்து கொடுத்துப் பாராட்டினாள் ராணி ருத்ரமா.

அதன் பின்னர் அம்பதேவன் என்பவன் அவளை நிம்மதியாக அரச பரிபாலனம் செய்ய விடாமல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அம்பதேவன் ருத்ரமா தேவியின் தந்தையிடம் அமைச்சராக இருந்தவரின் பேரன். எதிரி அரசர்களோடு கை கோர்த்தான். ருத்ரமா அவனையும் வென்று அடக்கினாள். ஆனால் அவனுடைய பாட்டனை நினைத்து அவனைக் கொல்லாமல் உயிரோடு நாட்டை விட்டு துரத்தினாள்.

இன்னும் சோழ, பல்லவ மன்னர்களைக் கூட வென்று ‘ராய கஜ கேசரி’ என்ற தன் தந்தையின் விருதுக்குத் தானும் தகுதி பெற்றாள். ராணி ருத்ரமா தேவி தன் அரசாட்சியில் தெற்கே காஞ்சி முதல் வடக்கே சட்டிஸ்கர் வரை மேற்கே பெடத நாடு முதல் கிழக்கே சமுத்திரம் வரை காகதீய சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரித்தாள்

மக்களின் சுக துக்கங்களை தானே நேரில் சென்றறிந்து குறை தீர்த்தாள் ராணி ருத்ரமா. மாறு வேடத்தில் சென்று நாட்டையும் மக்களையும் பெற்ற பிள்ளைகளைப் போல் காத்தாள். பல ஏரிகளைத் தோண்டி விவசாயத்திர்கு நீர் தடையின்றிக் கிடைக்க வழி செய்தாள். எந்தத் தாயும் பிரசவ காலத்தின் போது மரணமடையக் கூடாதென்று நாட்டில் எல்லா கிராமங்களிலும் பிரசவ வைத்திய சாலைகளைத் தோற்றுவித்தாள் ருத்ரமா.

தன் அரசாட்சியில் பெண்களைப் பேணிக் காத்ததோடு அவர்களுக்கும் யுத்தப் பயிற்சி அளித்து அரச பதவிகளில் அமர்த்தி கௌரவித்தாள். ருத்ரமாதேவி 1295 வரை அரசாட்சி செய்த பின் தன் பேரன் பிரதாபருத்ரனை அரியணையில் அமர்த்தினாள். மக்கள் போற்றும் மகராசியாக அரசாண்ட ராணி ருத்ரமா தேவி 1296ல் மரணமடைந்தாள்.

-ராஜி ரகுநாதன்,

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...