
சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
21. சோம்பலே எதிரி!
ஸ்லோகம்:
ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹான் ரிபு: |
நாஸ்த்யுத்யமஸமோ பந்து : க்ருத்வா யம் நாவசீததி ||
-ஆரிய தர்மம்.
பொருள்:
நம் உடலில் வசிக்கும் பெரிய எதிரி நம் சோம்பேறித்தனமே! உடலை வருத்திப் பணிபுரியும் இயல்பை விடச் சிறந்த உறவு வேறொன்றுமில்லை. முயற்சி உடையவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளமாட்டார்.
விளக்கம்:
மாணவன் ஆனாலும் தினக்கூலி செய்யும் பணியாளர் ஆனாலும் எப்போதும் சுறுசுறுப்போடு பணிபுரிந்து வர வேண்டும். இருக்கும் இடத்திலேயே சும்மா இருப்பது மிகப்பெரிய நோய். சோம்பலை எதிர்த்துக் கூறிய சுபாஷிதம் இது.
மகாபாரதத்தில் பீஷ்மர் சோம்பல் குறித்து சிறிய கதை ஒன்று கூறுகிறார். ஒரு ஒட்டகம் தன் கழுத்தை தேவையான அளவு நீட்டிக் கொள்ளும் வரத்தை இறைவனிடமிருந்து பெற்றது. உட்கார்ந்த இடத்திலிருந்து நகராமல் உணவு தேடிக் கொண்டு காலம் கழித்தது.
ஒரு நாள் மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு குகைக்குள் தன் தலையை நுழைத்தது. அங்கிருந்த நரிகள் அதன் கழுத்தைக் கடித்து தின்று விட்டன. ஒட்டகம் தன் சோம்பலால் உயிரை இழந்தது.
சோம்பல் குணம் மிகப்பெரிய பகைவன். முயற்சியோடு உழைக்கும் குணமே நம் உறவினன் என்று கூறும் சுபாஷிதங்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தில் நிறைய உள்ளன.