
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
92. விட வேண்டியதும், விடக் கூடாததும்!
ஸ்லோகம்:
1.ஷட் தோஷா: புருஷேணேஹ ஹாதவ்யா: பூதிமிச்சதா |
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்க சூத்ரதா ||
2.ஷடைவைதே குணா: பும்சா ந ஹாதவ்யா: கதாசன |
சத்யம் தானம் அநாலஸ்யம் அனசூயா க்ஷமா த்ருதி: ||
– ஹிதோபதேசம்.
பொருள்:
ஐஸ்வர்யம் கோருபவர்கள் உறக்கம், தூங்கி வழிவது, அச்சம், கோபம், சோம்பேறித்தனம், வேலைகளை ஒத்திப்போடுவது என்ற ஆறு குணங்களையும் விட்டுவிடவேண்டும்.
உண்மை பேசுவது, தானம், சுறுசுறுப்பு, யாரிடமும் பொறாமை கொள்ளாமல் இருப்பது, மன்னிக்கும் குணம், தீரம் இந்த ஆறு நற்குணங்களையும் எப்போதும் விடாமல் இருக்க வேண்டும்.
விளக்கம்:
ஆறு தீய குணங்களை விட்டு விடவேண்டும். ஆறு நல்ல குணங்களை விடக்கூடாது என்று இந்த இரண்டு ஸ்லோகங்களும் எடுத்துரைக்கின்றன.
நற்குணங்கள் மனிதனின் வெற்றிக்கு அடிப்படை. இவ்வாறு மனிதன் விடவேண்டியவை, விடக்கூடாதவை எந்தெந்த குணங்கள் என்று சிந்தித்து முன்னேற்றப் பாதையில் நடக்க வேண்டும் என்பது ரிஷிகளின் விருப்பம்.
இவை இன்றைய சூழலிலும் பலனளிக்கும் சூத்திரங்கள்.