“இது,சங்கரம்!”
(முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர், சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.)
முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!
தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சதாராவில் முகாம். மகாப் பெரியவாளின் குருவுக்கு
ஆராதனை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன.
பரம நாஸ்திகராக இருந்து பெரியவாளின் முதல்
பார்வையிலேயே பரம பக்தனாக மாறிய அன்பர்.
பெல்காமைச் சேர்ந்த தாராப்பூர் துரைசாமி என்பவர்
தரிசனத்துக்கு வந்திருந்தார்.
ஸ்ரீமடத்தின் தொண்டர்களுக்கெல்லாம் நல்ல
நண்பராகியிருந்தார் அவர்.
தரிசனத்துக்கு வந்தபோது மிகவும் பண நெருக்கடி
அவருக்கு. உடனடியாக பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நண்பர்களான தொண்டர்களிடம் மனம் திறந்து பேசினார். யாராவது பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்,கூடிய
விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறினார்.
எந்தத் தொண்டரிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்கும்? துரைசாமிக்கு உதவி செய்வதும் முக்கியம் தான்.
மேட்டூர் ராஜகோபாலன் என்று ஓர் அணுக்கத் தொண்டர், (உயர்ந்த பதவியைத் துறந்து,மகாப் பெரியவாளால் ஆட்கொள்ளப்பட்டு பின் துறவியாகி விட்டவர்.) அவருக்கு துரைசாமியிடம் இரக்கம் தோன்றியது.
பெரியவாளிடம் சென்று, கை கட்டி நின்றார்.
“என்ன?” என்று ஒரு பார்வை.
“குரு ஆராதனைக்காக வந்த பணத்தில் மீதமிருக்கு.
தாராப்பூர் துரைசாமி ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கார். அதிலிருந்து துரைசாமிக்குப் பணம் கொடுத்து உதவலாமா?” என்று பணிவு தோன்ற விண்ணப்பித்துக் கொண்டார்.
பெரியவா ஒப்புக் கொள்ளவில்லை.
“எதை உத்தேசித்துப் பணம் வாங்கப்பட்டதோ அந்தக்
காரியத்தைத் தவிர,மற்ற வேலைகளுக்குச் சிலவு
செய்வது தர்ம விரோதம்” என்றார்கள் பெரியவா.
இருந்த போதிலும் துரைசாமியிடம் அன்பு இருந்தது.
ஸ்ரீ மடத்தின் பல காரியங்களில் – வியாஸ பூஜை,குரு ஆராதனை போன்றவற்றில் – அலுப்புச் சலிப்பு இல்லாமல் உழைத்திருக்கிறார்.பணச் சிலவும் செய்திருக்கிறார். கஷ்டம் என்பது தற்போது வந்த விவகாரம்.
பெரியவாள் தருமமூர்த்தி, தரும நெறியை வெறும்
வார்த்தைகளாகக் கொள்ளாமல்,மனிதாபிமான நோக்கில், நன்றி உணர்வில்,பாராட்டும் வகையில் பேராண்மை அவர்களிடம் இருந்தது. முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர்,
சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.
முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!



