Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் காட்டுக்குள்ளே திருவிழா: தெலங்காணாவின் கும்பமேளா (பிப்.5-8)

காட்டுக்குள்ளே திருவிழா: தெலங்காணாவின் கும்பமேளா (பிப்.5-8)

0

காட்டுக்குள்ளே திருவிழா – தெலங்காணாவின் கும்பமேளா (பிப்ரவரி 5 முதல் 8 வரை)

சம்மக்கா சாரலம்மா மேடாரம் ஜாத்ரா

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆதிவாசி பண்டிகையாக மேடாரம் ஜாத்ரா புகழ்பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. தெலங்காணா மாநிலம் வாரங்கல் அருகில் முலுகு மாவட்டத்தில் ‘தாட்வாய்’ பகுதியைச் சேர்ந்த அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் மேடாரம் என்ற குக்கிராமம் உள்ளது. மேடாரம் என்பது தண்டகாரண்யத்தில் ஒரு பகுதி. இது தக்காணப் பீடபூமியில் உள்ள மிகப்பெரிய உயிர்வாழ் காட்டின் ஒரு பகுதியாகும்

இந்த உற்சவம் நீதியற்ற அடக்குமுறையை எதிர்த்து சம்மக்கா என்ற அன்னையும், சாரலம்மா (சாரக்கா) என்ற மகளும் நடத்திய போர் மற்றும் தியாகத்தின் நினைவாக நிகழ்த்தப் பெறுகிறது. அலஹாபாதில் நடக்கும் கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக மேடாரம் ஜாத்ரா மிக அதிகளவு எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்க்கும் பண்டிகையாக உள்ளது.

ஒரு குண்டூசி போடக் கூட இடமில்லாத அளவு மக்கள் கூட்டம் கூடி இத்திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். மலைவாழ் மக்கள் கூடாரம் அமைத்து தங்குவதும் ‘சாமி’ வந்து ஆடுவதுமாக உற்சவம் களைகட்டுகிறது. 2018 ம் ஆண்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

வன தெய்வங்கள் ஆதிவாசி மக்களிடம் எழுந்தருளி அருள்புரிய வரும் காலத்தைக் கணக்கிட்டு இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.. 2020ம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 8 வரை நான்கு நாட்கள் நடைபெற்றுவரும் இந்த திருவிழாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

சம்மக்காவின் அற்புத சக்திகளைப் பற்றி பல பழங்கதைகள் வழக்கத்தில் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட ‘கத்தெலு’ எனப்படும் மேடையில் கொலுவீற்றிருக்கும் சம்மக்கா, சாரலம்மா உள்ளிட்ட தெய்வங்களை தரிசிப்பதற்கு தெலங்காணா, ஆந்திராவில் இருந்து மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகள் மிகப்பெரிய அளவில் வந்து கூடுகிறார்கள். வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.

தெலங்காணா மாநிலம் அமைக்கப்பட்ட பின் நடைபெறும் மூன்றாவது மேடாரம் ஜாத்ரா என்பதால் மிகப்பெரிய அளவில் அரசாங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மலைவாழ் பூசாரிகள் பண்டிகை தினங்களை எட்டு மாதங்களுக்கு முன்பே கணக்கிட்டு அறிவித்துவிட்டனர்.

யார் இந்த சம்மக்கா, சாரலம்மா?

இவர்களின் பிறப்பு, இவர்கள் வன தேவதைகளாக வழிபடப்படும் காரணம் போன்றவை கதைகளாக நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மலைவாசி பூசாரிகளும் வயதில் பெரியவர்களும் கூறிய கூற்றுகளின்படி பன்னிரண்டாம் நூற்றாண்டில் காகதீயர்களின் ஆட்சி காலத்திற்கு முன் இந்தப் பிரதேசங்களில் மலைவாழ் ஆதிவாசி மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர்.

காகதீயர்கள் வாரங்கலை (ஓருகல்லு) தலைநகராகக் கொண்டு ஆந்திரா, தெலங்காணா இணைந்த இந்த பிரதேசத்தை கிபி 1000 முதல் 1380 வரை அரசாண்டார்கள். அடர்ந்த காடுகளின் நடுவில் உள்ள மேடாரம் கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘பய்யக்காபேட்டை’ யைச் சேர்ந்த ஆதிவாசிகள் எப்போதும் போல் கிழங்குகள் சேகரிக்க காட்டிற்குள் சென்றனர்.

குரூர மிருகங்களான புலிகள் நடமாட்டமுள்ள வனத்தின் மத்தியில் ஒரு புற்றின் அருகே ஒளிவீசும் முகத்துடன் ஒரு அழகிய பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு வியந்தனர். அதனை தங்கள் குடிசைக்கு எடுத்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவன் காட்டுதுரை ‘மேடராஜு’ அந்த குழந்தைக்கு மாக மாதம் பௌர்ணமியன்று சம்மக்கா என்று பெயரிட்டு காட்டு இளவரசி போல் வளர்க்கத் தொடங்கினான். காகதீய அரசன் முதலாம் பிரதாபருத்திரனின் கீழ் பணிபுரிந்த தன் சகோதரி மகன் ‘பகிடித்தராஜு’ வுக்கு சம்மக்காவை மணம் முடித்து வைத்தான் மேடராஜு.

இந்த தம்பதியினருக்கு சாரலம்மா, நாகுலம்மா என்ற இரண்டு பெண்களும் ஜம்பன்னா என்ற மகனும் பிறந்தனர். ஒரு முறை கடுமையான வறட்சியின் காரணமாக பகிடித்தராஜுவால் அரசனுக்கு கப்பம் கட்ட இயலவில்லை. அதனால் வெகுண்ட பிரதாபருத்ரன் ஒரு படையை காட்டிற்குள் அனுப்பி பழங்குடி மக்களை அடக்கி கப்பம் வசூல் செய்ய முயன்றான்.

பகிடித்தராஜுவுக்கும் காகதீயப் படைக்கும் இடையே காட்டுப்பகுதியில் பாயும் கோதாவரியின் கிளைநதியான ‘சம்பங்கிவாகு’ என்ற ஆற்றின் கரையில் பெரும் யுத்தம் நடந்தது. ‘கோயா’ இனத்தைச் சேர்ந்த இந்த ஆதிவாசி மக்கள் மிகுந்த வீரத்துடன் போராடியும் படைபலம் பொருந்திய காகதீயர்களை வெற்றிகொள்ள இயலவில்லை.

கொரில்லா முறையில் போர் புரிந்த பகிடித்தராஜுவும் அவன் பெண்கள் சாரலம்மா நாகுலம்மா மற்றும் சாரலம்மாவின் கணவன் கோவிந்தராஜு அனைவரும் வீரமரணம் எய்தினர். ஜம்பன்னா, தோல்வியால் அவமானம் தாங்காமல் ஜம்பங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான். அவன் செய்த வீரப்போர் மற்றும் தியாகத்தின் நினைவாக இந்த சிற்றாறு ஜம்பன்னா வாகு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

தம்மக்கள் இறந்ததை கேள்வியுற்ற சம்மக்கா போரில் இறங்கி காகதீய படைகளுக்கு பெரும் சேதம் விளைவித்தாள். அவள் வீரசாகசத்தையும் தைரியத்தையும் பார்த்து வியந்த காகதீய முதன்மந்திரி அவளை பழங்குடி மக்களின் ராணியாக்குவதாக சமாதானம் பேச முன்வந்தான். ஆனால் அவள் உடன்படாமல் தொடர்ந்து போராடினாள்.

போரில் படுகாயமுற்ற நிலையில் போர்க்களத்திலிருந்து விலகி, இரத்தம் சிந்த ‘சிலகலகுட்ட’ என்ற மலை மீது ஏறி பாதி தூரத்தில் மறைந்து போனாள். அவளைப் பின் தொடர்ந்து சென்ற ஆதிவாசிகள் அவளைக் காணாமல் திகைத்தனர்.

ஆனால் அங்கு ஓரிடத்தில் ஒரு புற்றின் அருகில் மஞ்சள் குங்குமம் நிறைந்த குங்குமச்சிமிழை கண்டனர். அதன் அருகில் அவளுடைய வளையல்களும் பெண் புலியின் கால் தடயங்களும் காணப்பட்டன. அதே இடத்தில்தான் முன்பு அவள் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டாள்.

அன்று முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சம்மக்கா திருவிழாவை பக்தி சிரத்தையுடன் நடத்தி அந்த குங்குமச்சிமிழை சம்மக்காவாக வழிபட்டு வருகின்றனர். எந்த ஒரு விக்கிரக ஆராதனையும் மந்திரங்களும் இடம்பெறாதது இந்த பண்டிகையின் சிறப்பம்சம். மூங்கில் கம்புகளும் ஒரு குங்குமச்சிமிழுமே இந்த வன தேவதைகளின் சின்னங்களாக வழிபடப்படுகின்றன.

சுமார் 900 ஆண்டு கால வரலாற்றுப் பழமை கொண்ட இந்த உற்சவம் 1940 வரை சிலகலகுட்ட மலைமீதே நிகழ்ந்து வந்தது. அப்போது அந்த மலைவாழ் ஆதிவாசி மக்கள் மட்டுமே அதில் பங்கு கொண்டனர். ஆனால் 1940 க்குப் பின் தெலங்காணா மக்கள் அனைவரும் இந்த பண்டிகையை கொண்டாட ஆரம்பிக்கவே மலையின் கீழே மேடாரம் என்ற கிராமத்தில் சம்மக்கா சாரலம்மா உற்சவம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருவிழா எவ்வாறு நிகழ்கிறது?

இந்த பண்டிகையில் வழிபடப்படும் தேவதைகளுக்கு உருவம் கிடையாது. மலைவாழ் ஆதிவாசிகளின் சம்பிரதாயப்படி மூங்கில் கம்புகளை நட்டு அவற்றுக்கு புடவை, வேட்டி அணிவித்து மாலையிட்டு மஞ்சள் குங்குமம் பூசி ஆராதனை நடத்தப்படுகிறது.

ஜம்பன்னாவாகு என்ற நதியில் நீராடி வனதேவதைகளை தரிசிப்பதன் மூலம் தங்கள் கோரிக்கைகள் ஈடேறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்த நதிநீர் இன்றைக்கும் சிவப்பு நிறமாக உள்ளது. இது ஜம்பன்னாவின் இரத்தம் கலந்ததால் ஏற்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள செம்மண் பூமியால் இந்நிறம் ஏற்பட்டிருப்பதாக அறிவியலாளர் கருத்து.

ஜமபன்னாவாகு ஆற்றில் மூழ்கி நீராடுவதன் மூலம் தங்கள் தெய்வங்கள் செய்த தியாகத்தை மக்கள் நினைவு கூறுகிறார்கள். மேலும் தங்களுக்கு தைரியமும் பாதுகாப்பும் இந்த நதி நீராடல் அளிப்பதாக பழங்குடி மக்கள் நம்புகிறார்கள். இந்த நதியின் மேல் தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது.

கத்தெலு எனப்படும் மேடை:

மேடாரம் கிராமத்தில் காடுகளின் நடுவில் ஓர் இடத்தை சுத்தம் செய்து கத்தெலு என்றழைக்கப்படும் மேடையை நிர்மாணித்து சுற்றிலும் வேலியிட்டு அலங்காரம் செய்து உற்சவத்தின்போது வனதேவதைகளை கொலுவீற்றிருக்கச் செய்கிறார்கள்.

இரண்டு மீட்டர் விஸ்தீரணத்தில் வட்டமாக அமைக்கப்படும் இந்த மேடையின் நடுவில் மரக் கம்புகளை நட்டு உள்ளார்கள். ‘வனம்’ எனப்படும் மூங்கில் கம்புகளை மேடைக்குக் கொண்டு வரும் சடங்கோடு திருவிழா தொடங்குகிறது.

உற்சவத்தின் முதல் நாள் விடியற்காலை ‘வனம்’ கொண்டுவரும் சடங்கு தொடங்குகிறது. அதற்கு முன் ஆதிவாசி பூஜாரி வீட்டுப் பெண்கள் விரதமிருந்து மேடையைச் சுத்தம் செய்து கோலமிட்டு அலங்கரித்து வைப்பர். திருவிழாவின் முக்கிய கட்டம் சம்மக்கா, சாரலம்மாவின் வருகையே. இதனைக் கண்டு தரிசிப்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் மேடாரத்தை வந்தடைகின்றனர்.

சாரலம்மா என்ற சாரக்காவின் வருகை:-

சம்மாக்காவின் மகள் சாரலம்மாவை அருகில் உள்ள ‘கன்னேபல்லி’ என்ற கிராமத்திலிருந்து மேடைக்கு அழைத்து வருகிறார்கள். இதுவே முதல் நாள் உற்சவம். கன்னேபல்லியில் உள்ள சாரலம்மா கோவிலில் பரம்பரையாக பூஜை செய்யும் பழங்குடியினர் உள்ளனர். சாரலம்மாவை மேடைக்கு எடுத்து வரும்போது மேடையில் இருந்து வெகுதூரம் வரை பக்தர்கள் குளித்த ஈர உடையுடன் குப்புறப்படுத்து இருப்பர்.

சாரலம்மாவை மூங்கில் கூடையில் வைத்து எடுத்து வரும் பூஜாரிகள் இவர்களைத் தாண்டித் தாண்டி வருவர். இவ்விதம் செய்வதன் மூலம் நோயுற்றோருக்கு ஆரோக்கியமும் குழந்தை இல்லாதோர்க்கு சந்தான பாக்கியமும் கிடைக்கும் என்று நம்பிக்கை. அதே நாளில் அடுத்துள்ள கிராமங்களிலிருந்து பகிடித்தராஜுவையும் கோவிந்தராஜுவையும் மூங்கில் கம்பு ரூபமாக மாட்டு வண்டிகளில் அழைத்து வருகின்றனர்.

சம்ம்மக்கா வருகை:

உற்சவத்தின் இரண்டாம் நாள் சிலகலகுட்ட மலைமீதிருந்து குங்கும பரணி உருவில் உள்ள சம்மக்காவை மேடாரம் கிராம மேடைக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி மிகவும் ஆரவாரத்தோடு உணர்ச்சிபூர்வமாக பக்தர்களால் எதிர்கொள்ளப்படுகிறது. மலைமீது ஏறி ஆதிவாசி பூஜாரிகள் பூஜை செய்தபின் சம்மக்கா சொரூபமான குங்குமச் சிமிழை எடுத்து வருகையில் மலையடிவாரத்தில் பக்தர்கள் ஆர்வத்தோடு குழுமி இருப்பர். அம்மனை கீழே கொண்டு வருகையில் கொம்பு ஊதி தாரை தப்பட்டை அடித்து வரவேற்பர். மாவட்ட கலெக்டர் முன்னிலையில் காவல் படையினர் வானை நோக்கி துப்பாக்கி குண்டு வெடித்து வரவேற்பர்.

சம்மக்காவை எடுத்து வரும் போது ஆடு கோழிகள் பலி இடப்படுகின்றன. பக்தர்கள் சாமி வந்து ஆடுகிறார்கள். குங்குமச்சிமிழ் உருவில் சம்மக்கா வந்து மேடையில் அமர்ந்தவுடன் ஜாத்ராவின் பிரதான கட்டம் முடிவடைகிறது.

மூன்றாம் நாள் மேடையின் மேல் வன தேவதைகளான சம்மக்கா, சாரலம்மா, பகடித்தராஜு, கோவிந்தராஜு – இவர்கள் அனைவரும் ஒருசேர கொலுவீற்றிருப்பதால் அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.

நான்காம் நாள் வன தேவதைகள் திரும்பி ‘வனப்பிரவேசம்’ செய்வதோடு பண்டிகை நிறைவு பெறுகிறது. ஆயினும் பின்னர் நடைபெறும் ‘திருகுவாரம்’ என்றழைக்கப்படும் ‘அபராத க்ஷமாபணை’ அதாவது தவறுகளை மன்னிக்கக் கோரும் நிகழ்ச்சி நடத்திய பின்னரே ஜாத்ரா நிறைவேறியதாக கருதப்படுகிறது.

பலியிடுதல்:-

பண்டிகையின் பாகமாக வனதேவதைகளை திருப்திப்படுத்துவதற்கு பலி கொடுப்பதும் மது அருந்துவதும் இங்கு சம்பிரதாயமாக உள்ளது. இவ்விதம் பலியிடப்பட்ட மாமிசத்தை சமைத்து உண்பதும் மது அருந்துவதுமாக நான்கு நாள் பண்டிகையை கழிக்கின்றனர் மலைவாழ் பழங்குடியினர்.

பங்காரம் காணிக்கை சமர்பித்தல்:

பண்டிகையின் முக்கியமான அம்சம் பங்காரம் சமர்ப்பித்தல் எனப்படும் ‘வெல்லம் காணிக்கை’ செலுத்துவதாகும். இந்த உற்சவத்தின்போது வெல்லத்தை ‘தங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். கோரிக்கைகள் தீரவேண்டும் என்று சிலரும் கோரிக்கை பூர்த்தியானதால் பலரும் தங்கள் எடைக்கு எடை வெல்லத்தை பிரார்த்தனையாக செலுத்தி அம்மனுக்கு படைக்கிறார்கள்.

இதனால் பூஜை மேடை முழுவதும் டன்டன்னாக வெல்லக் கட்டிகளால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் மடிஅரிசி, வளையல், புடவை, ரவிக்கைத் துணி இவைகளை சக்தி வடிவ சம்மக்கா தேவிக்கு சமர்ப்பிக்கிறார்கள். அம்மனின் பிரசாதமாக சிறிது வெல்லமும் மஞ்சள் குங்குமமும் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

பிரசவம்:

ஜாத்ரா சமயத்தில் மேடாரத்தில் பிரசவம் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஏராளமான நிறைமாத கர்ப்பிணிகள் இங்கு வந்து சேருகிறார்கள். ஆண் குழந்தை பிறந்தால் சம்மய்யா, சாரய்யா என்றும் பெண் குழந்தையானால் சம்மக்கா, சாரம்மா என்றும் பெயரிட்டு மகிழ்கிறார்கள்.

கும்பமேளா:

ஜமபன்னா வாகுவில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீராடும் காட்சி கும்பமேளாவை நினைவூட்டுகிறது. ஜாத்ரா சமயத்தில் மேடாரம் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் சுமார் 80 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் விடுதி அமைத்து தங்குகிறார்கள்.

இந்த பண்டிகைக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசாங்கம் செலவு செய்து ஏற்பாடுகளை செய்கிறது. படுக்கைவசதிகள் கொண்ட மருத்துவமனை, மொபைல் அறுவை சிகிச்சை முகாம்களைக் கூட ஏற்பாடு செய்கிறார்கள். ஹைவேயில் 60 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசல் நீளுகிறது. 1998 வரை மேடாரம் போவதற்கு மாட்டு வண்டிப் பாதையே இருந்தது. 1998ல் அரசாங்கம் நிலையான பேருந்துப் பாதை வசதிகளை ஏற்படுத்தியது.

தற்போது ஹெலிகாப்டர் வசதி கூட வந்துவிட்டது. மேடாரம் திருவிழாவுக்காக சுற்றுலாத்துறை அமைச்சர் வி ஸ்ரீனிவாச கௌட் ஹெலிகாப்டர் சர்வீசை ஹைதராபாதில் 2020 பிப்ரவரி 2ம் தேதி ஞாயிறன்று துவங்கி வைத்தார். பக்தர்கள் இனி ரூ 1.80 லட்சம் செலவில் ஹெலிகாப்டரில் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து மேடாரம் சென்று திரும்பலாம்.

வானிலிருந்து மேடாரம் ஜாத்ராவைப் பார்க்க விரும்புவோர்களுக்கு ரூபாய் 3000 ல் அந்த வசதியும் ஹெலிகாப்டர் மூலம் செய்து தரப்படுகிறது.

9400399999 என்ற மொபைல் நம்பரில் இதற்காக தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பக்தர்கள் வசதியாக தங்குவதற்காக முலுகு மாவட்டத்தில் முதல் ‘ஹரித’ ரிசார்ட்டையும் சுற்றுலாத்துறை துவங்கி வைத்தது.

உலகிலேயே மலைவாழ் பழங்குடி மக்களான ஆதிவாசிகள் ஒன்று கூடி கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக பெயர் பெற்றுள்ளது மேடாரம் ஜாத்ரா. சிறிது சிறிதாக பழங்குடி சடங்குகளில் இதர சம்பிரதாயங்கள் புகுவதாக மலைவாசிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இத்தனை பெரிய பண்டிகை எந்த இடைஞ்சலும் இல்லாமல் நடைபெறுவது அம்மனின் அருளாலேயே என்பது அவர்களின் திடமான நம்பிக்கை. மலைவாழ் மக்களின் கலாச்சாரம் இயற்கையோடு இயைந்து வளர்வது. செய்யும் விவசாயப் பணிகளில் கூட விதை பண்டிகை என்றும் அறுவடைப் பண்டிகை என்றும் அவர்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளையும் விட வனதேவதைகளுக்கு நன்றி கூறி ஆராதிக்கும் இந்த சம்மக்கா சாரலம்மா ஜாத்ரா ஒரு அற்புதமான அனுபவம்.

வனதேவதைகளை மகிழ்விப்பதற்காக நடத்தும் இந்த நான்கு நாள் பண்டிகையில் வனதேவதைகள் உண்மையாகவே தம்மிடம் வந்து தம்மை அருள் புரிகிறார்கள் என்ற அனுபவத்தை இந்த ஆதிவாசி பக்தர்கள் பெறுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

மேடம் கிராமம் வரங்கல் நகரிலிருந்து 110 கிலோமீட்டர் காட்டு மத்தியில் உள்ளது. வரங்கல் நகரம் ஹைதராபாத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here