spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்இம்மாதத்தின் சிறப்புக்கள், விழாக்கள்!

இம்மாதத்தின் சிறப்புக்கள், விழாக்கள்!

- Advertisement -

மாசி மாத சிறப்புகள் !

மாசி மாதத்தில் மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

சிவராத்திரி

சிவராத்திரி இறைவனான சிவப்பரம்பொருளை நினைத்து ஆராதனை செய்து வழிபாடு நடத்த மிக உயர்ந்த நாளாகும். இவ்வழிபாடு மாசிமாதத்தில் அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசியில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நாளில் பகல் இரவு வேளைகளில் விரத முறையினை மேற்கொண்டு சிவபெருமானை குறித்த பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விரத முறையினை மேற்கொள்வதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி பிறவாமை என்கிற மோட்சம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரி நாளன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

மாசி மகம்

இவ்விழா மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் நடத்தப்படுகின்றது. இவ்விழாவின் போது மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர்.

கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியானது தீர்த்தவாரி என்றழைக்கப்படுகிறது.

புனிதநீராட்டு வழிபாடு மூலம் மக்கள் தங்களின் பாவங்கள் நீங்கப் பெறுவதாகவும், வாழ்வின் எல்லா வளங்களும் கிடைக்கப் பெறுவதாகவும் கருதுகின்றனர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.

பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.

ஹோலிப்பண்டிகை

ஹோலிப்பண்டிகை மாசிமாதப் பௌர்ணமி தினத்தில் வடஇந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் போது பலவண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர்மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியாக ஆடிப்பாடி மகிழ்வர்.

திருமாலின் பக்தனான பிரகலாதனை அவனின் தந்தை இரணிய கசிபு கொல்ல பலவழிகளில் முயன்றான். ஆனாலும் அவனால் பிரகலாதனை கொல்ல முடியவில்லை.

இந்நிலையில் தீயினால் அழிவில்லாத கொடிய குணம் படைத்த ஹோலிகா என்ற ராட்சசியின் மூலம் கொல்ல நினைத்தான். அதன்படி பிரகாலாதனை தன் மடியில் இருத்திக் கொண்டு தீயினுள் ஹோலிகா புகுந்தாள்.

அப்போது இறைவனின் திருவருளால் பிரகலாதனை தீ ஒன்றும் செய்யாது ஹோலிகாவை எரித்து சாம்பலாக்கியது. இந்நிகழ்ச்சி மாசிப் பௌர்ணமி அன்று நிகழ்ந்தது.

ஹோலிகாவின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற மக்கள் பலவண்ணப் பொடிகளை தூவி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இது ஹோலிப்பண்டிகைக் கொண்டாடக் காரணமாகும்.

எவ்வளவு பெரிய சக்திசாலியானாலும் தீமை குணம் நிறைந்தவர்களின் முடிவு என்ன என்பதை ஹோலிப்பண்டிகை மூலம் அறியலாம்.

மகாவிஷ்ணு வழிபாடு

மாசிமாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதம் ஆகும். எனவே இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

மாசி சங்கடஹர சதுர்த்தி

மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபட எல்லா தோசங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம். சங்கடஹர விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைப்பிடித்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறலாம்.

ஷட்திலா ஏகாதசி

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) ஏகாதசி ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு திலா என்றால் எள் என்பது பொருளாகும்.

இத்தினத்தில் எள்ளினை உண்பது, தானமளிப்பது, ஹோமத்தில் பயன்படுத்துவது என ஆறு விதங்களில் எள்ளினை உபயோகிக்க வேண்டும்.

இந்த ஏகாகாதசி விரத்தினைப் பின்பற்றினால் பசித்துயரம் நீங்கும். உணவு பஞ்சம் ஏற்படாது. அன்னதானத்தின் சிறப்பினை இந்த ஏகாகாதசி உணர்த்துகிறது.

பசுவைக் கொன்ற பாவம், பிறர் பொருட்களை திருடிய பாவம், பிரம்ம‌ஹத்தி தோசம் போன்ற பாவங்களையும் ஷட்திலா ஏகாதசி விரதத்தினைப் பின்பற்றி இறைவழிபாட்டினை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம்.

ஜயா ஏகாதசி

மாசி மாதத்தில் வரும் வளர்பிறை (சுக்லபட்சம்) ஏகாதசி ஜயா ஏகாதசி ஆகும். இந்த ஏகாகாதசி தினத்தன்று இந்திரனின் சாபத்தின் காரணமாக பேய்களாக திரிந்த புஷ்பவந்தி, மால்யவன் ஆகிய கந்தவர்கள் தங்களையும் அறியாமல் இரவு விழிந்திருந்து இறைவனை வழிபட்டு மீண்டும் கந்தவர்களாயினர்.

ஆகையால் இவ்ஏகாதசி விரதத்தினை அனைவரும் பின்பற்றி இறையருள் மூலம் நற்கதியினைப் பெறலாம்.

மாசிப்பௌர்ணமி

மாசிப்பௌர்ணமி அன்றுதான் அன்னை உமையவள் காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவ‌பக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள்.

எனவே மாசிபௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.

வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசிபௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார்.

அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் இன்றும் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு

வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.

கார் காலத்தில் விளைந்த நெல்லையும், காராமணியையும் கொண்டு உணவினைத் தயார் செய்து விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டதால் இது காரடையான் நோன்பு என்றழைக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், கன்னிப் பெண்கள் நல்ல திருமணப்பேற்றினையும் வேண்டி இவ்விரத முறையை பின்பற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.

இந்நோன்பு மாசி கடைநாளில் ஆரம்பிக்கப்பட்டு பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.

புனித நீராடல்

மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மாசி மாதம் முழுவதும் கோவில்களைச் சார்ந்த நீர்நிலைகளில் புனித நீராடல் மேற்கொள்ளப்படுகிறது.

புனித நீராடல் மூலம் தங்களின் இப்பிறப்பு பாவங்கள் நீங்குவதாக மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் காவிரியில் நீராடி சோமஸ்கந்த ஸ்தலங்களான ஐயர் மலை, கடம்பமலை, ஈங்கோய் மலை ஆகிய இடங்களை தரிசித்து வழிபாடு மேற்கொள்ள சிறந்தாகக் கருதப்படுகிறது.

கலைமகள் வழிபாடு

மாசிமாத வளர்பிறை (சுக்லபட்சம்) பஞ்சமி அன்று மணமுள்ள மலர்களால் கலைவாணியை அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள கல்வியில் சிறந்து விளங்கலாம்.

நிறைந்த திருமணம் வாழ்வினைப் பெற

இந்து திருமணம்
இம்மாதத்தில் சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர்.

இதனை மாசிக்கயிறு பாசி படியும் என்ற பழமொழி மூலம் உணரலாம்.

திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக் கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர்.

இம்மாதத்தில் புதுமனைப் புகுவிழாவினை மேற்கொண்டால் அந்த வீட்டில் நிறைய நாட்கள் சந்தோசமாக இருப்பர். அவர்களின் வசந்தம் வீசும்.

இம்மாதம் மந்திர உபதேசம் பெற, உபநயனம் செய்ய, கலைகளில் தேர்ச்சி பெற, புதிய கலைகளைக் கற்க இம்மாதம் சிறப்பு வாய்ந்தது.

மாசி மாதத்தினைச் சிறப்புறச் செய்தவர்கள்

குலசேகர ஆழ்வார்
காரி நாயனார், எறிபத்த நாயனார், கோசெங்கட்சோழ நாயனார் ஆகியோர்களின் குருபூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இம்மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் தோன்றினார்.

மகத்துவங்கள் நிறைந்த மாசி மாதத்தின் விரதங்களை மேற்கொண்டு, இறைவனைப் போற்றி, மகிழ்வுடன் வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe