ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?
(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.’ஹிந்துமதம்’ என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே எடுத்து போதித்தார்கள். ஆகையால்தான் ‘மத ஸ்தாபகர்’ என்று ஆதிசங்கரரைக்கூட குறிப்பிடுவது சரியாகாது)
(பேருண்மையை விளக்கிய பெரியவா)
கட்டுரையாளர்- ஐராவதம் மகாதேவன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
1943 அல்லது 1944-ல் அன்றைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், எங்கள் ஊராகிய திருச்சிராப்பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் இருந்த சின்னக்கடை வீதிக்கு மிக அருகில், இரட்டைமால் தெருவில், தெருவையே வளைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். வாசலில் பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது; பந்தலுக்கு வெளியே ஆனை,குதிரைஒட்டகம் கட்டப்பட்டிருந்தன. அன்று பள்ளி விடுமுறை நாள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று நானும் சில பள்ளி நண்பர்களும் அங்கு போனோம்.
நாங்கள் போனபோது பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் உள்ளே சென்று சுவாமிகளை நமஸ்கரித்துவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த எங்கள் குடும்ப நண்பர் என்னை, ஸ்வாமிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இவனுக்கு ஸம்ஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி உண்டு; சுலோகங்கள் கூட கவனம் செய்வான்” என்று சொல்லி வைத்தார்.
ஆசார்ய சுவாமிகள், என்னைக் கூர்ந்து கவனித்து விட்டு, “எங்கே,இப்போ ஒரு சுலோகம் சொல்லு, பார்க்கலாம்” என்றார்.எனக்குப் பயமாக இருந்தது. ‘சொல்ல வரவில்லை’ என்று கூறித் தப்பித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் , அப்படிச் செய்திருந்தால் நான் இப்பொழுது கூறப்போகும் சுவையான சம்பவம் நிகழ்ந்திராதே!
ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, கணீரென்ற குரலில் பின்வரும் சுலோகத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.
வந்தே (அ) ஹம் சங்கராசார்யம்
அத்வைத மத ஸ்தாபகம்….
முதலிரண்டு அடிகளை நான் சொன்னவுடனேயே, சுவாமிகள் ‘போதும்’ என்று கையால் சமிக்ஞை செய்து விட்டு . “நீ சொல்லுவதில் தப்பு இருக்கே” என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரிய இடத்தில் இந்தமாதிரியான அதிகப்ரசங்கித்தனம் செய்திருக்கக்கூடாது என்று தோன்றியது. கட்டியிருந்த கைகளை அவசரமாகப் பிரித்து முதுகுக்குப் பின்புறம் கொண்டு போய் வைத்துக்கொண்டு போய் நான் சொல்லிய சுலோகத்தில் அக்ஷரங்கள் சரியாக உள்ளனவா என்று விரல் விட்டு எண்ணிப் பார்த்தேன். எழுத்துப் பிழை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்
நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனித்துவிட்ட சுவாமிகள் சிரித்துக்கொண்டே,” நான் அக்ஷரங்களைப் பற்றிச் சொல்லல்லே; உன் சுலோகத்தில் உள்ள அர்த்தம் தப்பா இருக்கு” என்று மீண்டும் கூறினார்.
எனக்கு வெலவெலத்துப் போய் வியர்த்துவிட்டது.ஏன் இந்த ‘வம்பில்’.மாட்டிக்கொண்டோம் என்று தோன்றியது.
என் திகைப்பைப் புரிந்துகொண்ட சுவாமிகள், புன்முறுவலுடன் கையை அசைத்து என்னை உட்காரச் சொன்னார்.நான் அமர்ந்தவுடன் என்னிடம் கேட்டார். “நீ கிறிஸ்துவப் பள்ளியில்தானே படிக்கிறாய்?”
‘ஆமாம்’ என்ற குறிப்பில் பெருமாள் மாடு மாதிரி தலையை மட்டும் மேலும்,கீழுமாக அசைத்தேன். திடீரென்று சுவாமிகள், ஏன் எதையோ கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை
சுவாமிகள் மேலும் தொடர்ந்தார்; “கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் யார்?”
அந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரிந்ததால் சற்று தெம்பு பிறந்தது. “ஏசுநாதர்” என்றேன்.
“ரொம்ப சரி; இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்தவர் யார்?”
“நபிகள் நாயகம்”
“அதுவும் சரி; இப்போ சொல்லு பார்க்கலாம்; நம்ம ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?”
சுவாமிகளுடைய இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. தலையை மட்டும் ‘தெரியாது’ என்ற குறிப்பில் பக்கவாட்டில் அசைத்தேன்.
“நான் சொல்கிறேன் கேள்” என்று சுவாமிகள் தொடர்ந்தார். அவர் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறார் என்பதை உணர்ந்து, கலைந்து போய்க் கொண்டிருந்த பக்தகோடிகள் அவரவர் இடத்தில் மீண்டும் அமர்ந்துவிட்டனர். நிசப்தம் நிலவியது. அப்பொழுது நிகழ்த்திய உரையை எனக்கு நினைவிலுள்ள வரை இங்கு சுருக்கிக் கூறுகிறேன்.
“ராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களை பகவான் எடுத்தார்; ஆனால் இந்த அவதார புருஷர்கள் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்கவில்லை. நம் தேசத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல ஆசாரியர்கள் தோன்றி தர்மத்தை வளர்த்தார்கள்; ஆனால் அந்த ஆசாரியர்களும் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்கவில்லை.நம் தமிழ் நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி பக்தி வெள்ளத்தைப் பரப்பினார்கள். ஆனால் அந்த சமயக் குரவர்களும், ஹிந்து மதத்தின் ஸ்தாபகர்கள் அல்லர்.
“வாஸ்தவத்தில் நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான் இதற்கு சநாதன தர்மம் என்று பெயர். ‘ஹிந்துமதம்’ என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது. நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும், ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே எடுத்து போதித்தார்கள். ஆகையால்தான், ‘மத ஸ்தாபகர்’ என்று ஆதிசங்கரரைக்கூட குறிப்பிடுவது சரியாகாது.”
உரை முடிவுற்றது. அனைவரும் எழுந்து கலைந்து போகத் தொடங்கினார்கள். நானும் புறப்படத் தயாராக எழுந்து நின்றேன்.அப்பொழுது என்னை அருகில் வரும்படி, ஆசாரிய சுவாமிகள் சமிக்ஞை செய்தார்; அருகில் போய் நின்று கொண்டேன்.
“பரவாயில்லை, உன்னுடைய சுலோகத்தில்,’ஸ்தாபக’ என்பதை எடுத்துவிட்டு, ‘போதக’ என்று போட்டுவிட்டால் அக்ஷரங்களும் சரியாகிவிடும்;அர்த்தமும் சரியாகிவிடும்” என்று புன்முறுவலுடன் கூறினார்.என்னுடைய மனக்குழப்பம் தீர்ந்து அமைதியடைந்தேன்.
வந்தே (அ)ஹம் சங்கராசார்யம்
அத்வைத மத போதகம்……
என்ற அந்த இரண்டு அடிகள் அரை நூற்றாண்டுக்குப் பிறகும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும் இரண்டு அடிகளை இயற்றி அந்த சுலோகத்தைப் பூர்த்தி செய்தேனா என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை. அது முக்கியமும் இல்லை.
விவரம் தெரியாத சிறுபிள்ளையாக இருந்த என்னை வியாஜமாகக் கொண்டு, மக்களுக்கு ஒரு பேருண்மையை அன்று, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உபதேசித்தருளியது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.