
தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute
“சுத்தம் சோறு போடும்” என்பது முதுமொழி. சுத்தம், சுகாதாரம் இதை வலியுறுத்தியே அரசாங்கமும் பல திட்டங்களை முன்னெடுக்கிறது. “தூய்மை இந்தியா “ எனும் மாபெரும் சிந்தனையின் செயல்பாடுகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆரோக்யமான வாழ்க்கைக்கு “சுத்தம்” அதாவது “ஆசாரம் “ மிகவும் இன்றியமையாததாகிறது.
ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுலில் உள்ள நிலையிலும் மருத்துவம், காவல், தூய்மை பணியாளர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளையும் ஊடகங்களில் காண்கிறோம். தன்னலமற்ற தொண்டாற்றும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது மிகையல்ல.
தூய்மைப் பணியாளர்களை பாராட்டி மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், பாத பூஜை செய்தும், மக்கள் கொண்டாடி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போன்று நாம் அனுதினமும், ஏன் ஒவ்வொரு கணமும் மாலையிட்டு, மலர்தூவி, பாதபூஜை செய்து கொண்டாட வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் பெருமையைக் காணலாம்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பெரிய கோட்பாடான “சரணாகதி” என்பதை விளக்கி சுவாமி வேதாந்த தேசிகன் “ரகசியத்ரயசாரம்” எனும் ஒரு நூல் இயற்றியுள்ளார். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் நற்கதி அடையலாம் என்பதே இதன் தத்துவம். இந்த நூலின் முகவுரையில் “தூய்மை பணியாளர்களைப் போற்றி பின்னர் நூலினை எழுதத் தொடங்குகிறார். அவர்கள் யார்? என்ன செய்கின்றனர்?” என்று பார்க்கலாம்.
தூய்மைப் பணியாளர்களின் காரியம் என்ன? நகரத்தையும் சாலைகளையும் துப்புரவாக வைப்பது. அதாவது குப்பைகள், கற்கள், முட்கள், படுகுழிகள் என பல வகையான இடையூறுகள் பயணிக்கும் பாதையில் இருந்தது என்றால் அதனை சீர் செய்வது. அதாவது குப்பைகளை ஒதுக்கி அப்புறப்படுத்துவது. அதே போன்று சாலைகளையும் செப்பனிடுவது.
அப்போது தானே பயணம் எளிதாகவும், சுகமாகவும் செய்ய முடியும். இதிலிருந்தே புரிகிறதே தூய்மைப்பணி மகத்தானது மட்டுமல்ல சவாலானது. ஏனெனில் ஒரு புறம் தூய்மைப்படுத்தப்படும்போது, மற்றொரு புறம் எவராது அதன் தூய்மையைக் கெடுக்கலாம் அல்லவா! இவ்வாறு நிகழாவண்ணம் வேலிபோட்டு, அனைத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, திறமையாகத் தூய்மைப்பணி செய்பவர்கள் நம் ஆசார்யர்கள் .
போச்சுடா! மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா? என அலுத்துக்கொள்ளலாம். ஆனாலும் மேலே படியுங்கள். எம்பெருமான் வேதம் எனும் ராஜ மார்கத்தில் (Express Highway) பயணம் செய்கிறான். ஆம். அதுதான் அவனது ராஜவீதி. “அதாவது வேதத்தில் உறைபவன் இறைவன்” என்பது பொருள். அப்போது சில வீணர்கள் (வீணர்கள் என்றால் விதண்டா வாதம் செய்பவர்கள். தேவையான விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தேவையற்ற பதிவுகளை இடையே நுழைத்து கர்வப்படுபவர்கள். குறிப்பாக எதுவும் தெரியாமல், புரியாமலேயே எல்லாம் தெரிந்ததாகத் தங்களை நினைத்துக் கொண்டு இறுமாப்புடன் திரிபவர்கள். மொத்தத்தில் பயனற்ற காரியங்களைச் செய்வதையே தங்களின் பிறவிப் பயனாக எண்ணுபவர்கள்) வேதத்தின் உண்மை நிலை அறியாமல் எதிர்வாதம் செய்திடுவர். அது மட்டுமல்ல, வேதத்தின் உள்ளம் அறியாமல் நேர் எதிராக, தவறாக, விபரீதமாகப் பொருள் கூறுவர்.
சுத்தமாக வைத்திருக்கும் தெருவில் வேண்டுமென்றே குப்பைகளைக்கொட்டுவது, பள்ளம் தோண்டுவது, கல்லும், முள்ளும் கொண்டு கொட்டி பாழ்படுத்துவது என அதர்மமான கார்யங்களைச் செய்பவர்கள் உண்டல்லவா! அதேபோன்று வேத மார்கத்தையும் சிதைகின்றனர் சிற்றறிவாளர்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமவர்கள் நமது ஆசார்யர்கள். அதாவது “வைதீக தர்மத்துக்கு கேடு விளைப்பவர்களை களையெடுப்பவர்கள்”. “ஆரணநூல் வழிச் செவ்வை அழிப்பவர்” என்கிறார் சுவாமி தேசிகன்.
அழகிய வழிதனை ஆபாஸம் செய்பவர்கள் என்று பொருள். இப்படி இவர்களை அடக்கி, வேதத்தின் தூய்மையை நிலைநாட்டுமவர்களே “ஸ்ரீமத் வேதமார்க ப்ரதிஷ்டாபனாசார்யர்” என அழைக்கப் படுகின்றனர்.
பெருமாளுக்கு உத்ஸவம் என்றால் முதல்நாள் சேனை முதலியார் எழுந்தருளி நகர சோதனை செய்வதுண்டே, நம் ஆசார்யர்களும் நகரத்தை (வேத மார்கத்தை) சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்கள். தேவாதிராஜனாம் வரதனின் ராஜவீதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து காக்குமவர்கள்.
அத்தகைய மஹாத்மாக்களை போற்றியுகந்து, மலர்தூவி, மாலை அணிவித்து, பாதபூஜை செய்து வழிபடுவது என்றுமே நமது கடமையாகும்.
-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.
07/04/2020