
பகவத்கீதையானது நாம் எல்லோரும் மிகுந்த கெளரவம் கொடுக்கக்கூடிய நூல், ஏனென்றால், பகவத்கீதையை சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே அனுக்ரஹம் செய்தார்.
கீத ஸுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரவிஸ்தரை: I
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத்விநிஸ்ஸ்ருதா II
என்று கீதையின் பெருமையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பகவான் உபதேசம் செய்த இத்தகைய பகவத்கீதையை ஒருவன் நன்கு வாசித்தாலே போதும். இதை விட்டு வேறு பல புத்தகங்களைப் படிப்பதனால் என்ன பயன்?

கீதையில் பகவான் மக்களுக்குப் பல உபதேசங்களைச் செய்தார். அவற்றில் ஏதாவது ஓர் உபதேசத்தையாவது நாம் நம் வாழ்வில் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தால் கூட அது மிகுந்த பயனைத் தரும்.
எல்லோரும் தினந்தோறும் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களைப் பற்றி ஆதிசங்கரபகவத்பாதாள் கூறும் போது,
கேயம் கீதாநாமஸஹஸ்ரம்
“தினந்தோறும் பகவத்கீதையைப் படியுங்கள், பகவானுடைய ஆயிரம் நாமங்களை ஜபியுங்கள்” என்றார். பகவத்கீதாவின் சுலோகங்களின் அர்த்தம் பலருக்கும் தெரியாது.
ஆயினும், கீதையை தினந்தோறும் பாராயணம் செய்துகொண்டு வந்தால், அதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தானாகவே நமக்கு ஏற்பட்டுவிடும். சுலோகங்களின் பொருளைத் தெரிந்துகொண்டால் மிகுந்த சந்தோஷம் ஏற்படும். அதன் மூலம் ஞானம் அடைந்து ஸ்ரேயஸை பெறலாம்.