~ கட்டுரை: சுஜாதா தேசிகன் ~
ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் கடைக்குட்டியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் 1370 – 1443 முதல் ). ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான் தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்)
சிக்கில் என்ற ஊரில் அவருடைய தாய் மாமாவுடைய இல்லத்தில் வேத பாடங்கள் படித்து வந்த அதே காலத்தில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை எம்பெருமானார் தரிசனம் என்ற ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பிரகாசிக்க செய்ய ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார்.
சிக்கிலில் படித்துக்கொண்டு இருந்த ஸ்ரீ அழகிய மணவாளன் திருவாய்மொழிப் பிள்ளையின் ஞானத்தை அறிந்து சிக்கிலிலிருந்து கிளம்பி தன் பிறந்த இடமான ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டு அங்கே திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைப் பற்றினார்.
அவருடைய வாழ்கை வரலாற்றில் பல சுவாரசியமான சம்பவங்கள் இருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறேன். முதலில் எப்படிச் சந்நியாசம் மேற்கொண்டார் என்று பார்த்துவிடலாம்.
மணவாள மாமுனிகளின் குடும்பம் பெரியது, அடிக்கடி யாராவது பரம்பதம் அடைவதால் கோயிலினுள் செல்ல முடியாதபடி தீட்டு ஏற்பட்டுவந்தது. உடையவர் போல் இவரும் ஸ்ரீரங்கத்தில் நித்தியவாசமாய் பெரியபெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும் போது இவர் கைங்கரியத்துக்கு இந்தத் தீட்டினால் தடை ஏற்பட, அவர் ஸ்ரீசடகோப ஜீயரிடம் சன்னியாசம் மேற்கொண்டார். அரங்கனின் கைங்கரியத்துக்காக !
வியாக்கியானச் சக்கரவர்த்தி’என்று போற்றப்படும் பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்துக்கும் உரை எழுதியவர். ஆனால் காலப் போக்கில் பெரியாழ்வார்
திருமொழியில் ஐந்தாம் பத்தில் தொடங்கும்
“வாக்குத் தூய்மை இலாமையினாலே
மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் ..”
என்ற திருமொழிக்கு பிறகு உரையைக் கரையான் அரித்துவிட்டது. மணவாள மாமுனிகள் பெரியாழ்வார் திருமொழி கடைசியிலிருந்து உரை எழுதி வாக்கு தூய்மை என்ற இடம் வந்த உடன் அதை நிறைவு செய்தார். காணாமல் போன உரைக்கு அவர் புத்துயிர் கொடுத்தார்.
உடையவர் சமிஸ்கிரத வேதங்களுக்குச் சிறந்த உரைகளை எழுதி சம்பிரதாயத்தை வளர்த்தார். ஸ்ரீராமானுஜர் தன்னுடைய காலட்சேபத்தில் (சொற்பொழிவில்) நிறையத் தமிழ் பிரபந்தங்களைக் கூறி அதிலேயே பேசி மகிழ்ந்தார். ஆனால் எந்தத் தமிழ் பிரபந்தங்களுக்கும் அவர் காலத்தில் உரை எழுதவில்லை. அந்தக் குறையை ஸ்வாமி மணவாள மாமுனிகள் பூர்த்தி செய்தார் என்றால் மிகையாகாது.
சுவையான சம்பவம் ஒன்று இருக்கிறது. இவருடைய ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை, பெயருக்கு ஏற்றார் போல் திருவாய்மொழியில் மிகுந்த பற்றிக்கொண்டவர். இவர் தான் மணவாள மாமுனிக்கு எல்லா விஷேச அர்த்தங்களை உபதேசம் செய்தவர். அவர் ஸ்வாமி மணவாள மாமுனியிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார். அது வடமொழியில் ஸ்ரீராமானுஜர் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யத்தை ஒரு முறை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் அதற்குப் பிறகு ஆழ்வாருடைய பாசுரங்களையே எடுத்துரைக்க வேண்டும் என்பது தான்! அதனால் தன் வாழ்நாளில் நாலாயிர திவ்யபிரபந்தத்தை பிரச்சாரம் செய்வதையே குறிக்கோளாக ஏற்றுக்கொண்டார்.
”மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே”
என்று சொல்லுவர் அதாவது மணவாள மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால் இன்று தமிழ் பிரபந்தங்கள் ஆற்றிலே கரைத்த புளியாய் போயிருக்கும்.
நம்பிள்ளையின் திருவாய்மொழி 36000 படி ஈட்டை உள் அர்த்தங்களை அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர்.
இவருடைய காலட்சேபத்தில் மயங்கி இவரைக்கொண்டு திருவாய்மொழிக்கு அர்த்தங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீரங்கத்துப் பெரிய பெருமாள்! அவரை அழைத்து ஓர் ஆண்டு தன்னுடைய உற்சவங்களை எல்லாம் நிறுத்தி நம்பெருமாள் பகவத் விஷயத்தை தனக்கும் விரித்து உரைக்க நியமித்தார். மணவாள மாமுனிகளும் அதை செவ்வனே செய்து முடித்து சாற்றுமுறை தினம் ( கடைசி நாள் ) அன்று
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
என்று நம்பெருமாளே ஸ்ரீரங்கநாயகம் என்று பெயர் கொண்ட ஐந்து வயது அர்ச்சக குமாரனாக இந்தத் தனியன் ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதனாலேயா ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள். மணவாள மாமுனிகள் எங்கே எழுந்தருளியிருந்தாலும் ஆதிசேஷனில் இருப்பதைக் காணலாம். அவருக்கு அந்த சேஷ பீடத்தை அருளியவரும் நம்பெருமாளே.
மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் 16-2-1444 (மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக(ஸ்ரார்த்த உற்சவம்) தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது.
தந்தைக்கு எப்படி தன் மகன் காரியங்களை செய்வாரோ அதே போல ஓர் ஆசாரியனுக்குச் சிஷ்யன் செய்ய வேண்டும். ( பஞ்சமஸ்காரம் செய்த ஆசாரியன் பரமபதித்தால் அந்தச் சிஷ்யனுக்குத் தீட்டு உண்டு ) ஸ்வாமி மணவாள மாமுனிக்கு சிஷ்யன் நம்பெருமாள் அதனால் அவர் பரமபதித்த நாள் முதல் இன்றும் நம்பெருமாளே இந்தக் கைங்கரியத்தை நடத்தி வைக்கிறார். நம்பெருமாள் பிரசாதங்களைக் கொடுத்து மரியாதை செய்கிறார்.
இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்குஉத்திரவீதியில் உள்ள,மணவாள மாமுனிகளின் மடத்தில் திருவடி இருக்கிறது. இன்றும் பக்தர்களுக்கு அந்த திருவடி தினமும் சாதிக்கப்படுகிறது…இதற்கு இன்னொரு அழகான பெயர் இருக்கிறது “பொன்னடியாம் செங்கமலம்” அடுத்த முறை செல்லும் போது “பொன்னடி சாத்துங்கோ” என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
மாமுனிகள் எம்பெருமானாரை போற்றி “யதிராஜ விம்சதி” என்கிற வடமொழி நூல், பிள்ளைலோகாசாரியாரின் ஸ்ரீ வசன பூஷணம், தத்வத்ரயம், முமுக்ஷுப்படி ஆகிய நூல்களுக்கு உரை, அதே போல் அழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் “ஆசார்ய ஹ்ருதயம்”, இராமானுச நூற்றந்தாதிக்கு உரை, திருவாய்மொழியில் சாரத்தை சொல்லும் “திருவாய்மொழி நூற்றந்தாதி” என்று பல நூல்களை அருளியுள்ளார்.
ஸ்ரீராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் 120வது வயதில் வைகுந்தம் சென்றதால் மீதமுள்ள 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள், ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரே மாமுனிகளாக அவதாரம் எடுத்தார் என்பது பூர்வர்களின் வாக்கு.
ஒவ்வொரு ஐப்பசி மாதத்தில் எந்தத் தேதியில் மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம் வருகிறதோ, அடுத்த சித்திரை மாதத்தில் அதே தேதியில் ஸ்ரீராமானுஜருடைய அவதார திருநட்சத்திரம் திருவாதிரை வரும்! அதே போல மாமுனிகளின் உற்சவம் ஆரம்பித்தால் மழையும் உடன் வரும் அதனால் மணவாள மாமுனிகள் உற்சவத்தை ‘மழைச்சாமி உற்சவம்’ என்று கூறுவர்.( இன்றைய செய்திகளே இதற்கு சாட்சி ! )
உபதேசரத்தின மாலை என்ற பொக்கிஷத்தை நமக்கு அருளிச்செய்த மாமுனிகளின் திருநட்சத்திரம் இன்று.
அடியார்கள் வாழ அரங்கநகர்வாழ
சடகோபன் தண்தமிழ் நூல்வாழ
கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்