இறைவன் கைவல்யத்தில் இருந்து கொண்டிருந்தார். “அந்தக் கைவல்யம் உலகில் மிக உயர்ந்த பொருளா, இல்லை, இதற்கு ஈடான பொருள் உலகில் உண்டா” என்ற ஒரு யோசனை அவருக்கு வந்தது.
அப்பொழுது தராசு ஒன்று கொண்டுவந்து கைவல்யத்தை ஒரு தட்டிலிட்டார். பிறகு அதற்கு எதிரில் உள்ள தட்டில் என்னவெல்லாமோ பொருட்களைப் போட்டார். எத்தனைப் பொருட்களைப் போட்டாலும் கைவல்யம் இருக்கும் தட்டு மட்டும் கீழே போய்க் கொண்டிருந்தது. மற்றொரு தட்டு மேலே சென்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்த இறைவன் ‘பரோபகாரம் ‘ என்பதை அடுத்த தட்டிலிட்டார். அடுத்த கணமே கைவல்யம் இருந்த தட்டு மேலே போய்விட்டது. பரோபகாரம் இருந்த தட்டு கீழே வந்துவிட்டது.
உடனே இறைவன் “நான் கைவல்யத்திலேயே இருந்து விட்டேனே. இது தவறானது. பரோபகாரம் தான் பெரியது” என்று நினைத்து பத்து அவதாரங்களைப் பெற்று இவ்வுலகில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக வந்தார்.
இறைவன் பரோபகாரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அவருடைய அம்சமாக விளங்கும் நாம் “மற்றோருக்கு உதவி செய்யாதவரின் வாழ்வு வீண்” என்று கூறப்பட்டது போல் நம் வாழ்வை வீணாக்கக்கூடாது.
பரோபகாரம் செய்யாமல் இருப்பவனின் வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை. அது இருந்தும் இல்லாமல் இருப்பதைப் போல்தான்.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்