ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னன் குலசேகரனின் வழக்கம். மன்னன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன்
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன் குலசேகரன்.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் குலசேகரன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான் அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.
இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா. இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.
இது அமைதியே அல்ல சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
‘இந்த ஓவியத்தை வரைந்தது யார்?’ என்றார் மன்னர் குலசேகரன்.
உடனே சம்பந்தப்பட்ட ஓவியர் சுப்பிரமணி மன்னரின் எதிரே நிறுத்தப்படுகிறார்.
‘இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை… ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?’
‘மன்னா…..சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல.
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எவ்வளவு கடுமையான சோதனை காலங்களிலும், பரந்தமானின் நாமமே துணையாக கொண்டு வாழும் பக்தனை போல எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல், பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!.
அப்படிப் பார்க்கும் போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்தப் பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!’
மேற்கண்ட இந்த விளக்கத்தை மன்னரிடம் ஓவியர் சுப்பிரமணி கூறி முடித்த மாத்திரத்தில். மன்னரின் முகம் மலர்ந்தது.
‘சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’ என்று கூறி கை தட்டிய மன்னன் குலசேகரன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்,
ஆம்! நமக்கு அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, ‘நிச்சயம் ஒரு நாள் விடியும்’ என்று விடா முயற்சியுடன் தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே! அவர்களிடம் இருப்பது தான் அமைதி.
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,’எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது’ இவை எல்லாம் இறைவன் செயல் என்று கூறி எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே… அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.
அதாவது சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் உண்மையான அமைதி. அந்த அமைதியை ஸ்ரீமந் நாராயணன் அருளால், நாமும் நமது வாழ்வில் மெல்ல, மெல்லக் கொண்டு வருவோம்.