முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட், முதல் நாள்
ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 1 விக்கெட்டுக்கு 35 (எல்கர் 11, பீட்டர்சன் 14) ரன் எடுத்திருந்தது. அதற்கு முன்னர் டாஸ் வென்று முதலில் மட்டையாடிய இந்தியா 202 (ராகுல் 50, அஷ்வின் 46, ஜான்சன் 4-31, ரபாடா 3-64, ஆலிவியர் 3-64) எடுத்திருந்தது. எனவே தென் ஆப்பிரிக்க அணியினர் 167 ரன்கள் பின்தங்கியுள்ளனர்.
விராட் கோலி இன்று விளையாடவில்லை. அவர் மேல் முதுகு வலியால் அவதிப்படுவதால் கே.எல். ராகுல் டெஸ்ட் கேப்டனாக முதல் முறையாக டாஸ் போடச் சென்றார். டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய டுவான் ஆலிவியர், மார்கோ ஜான்சன் இருவரும் முதல் நாள் மூன்றாவது அமர்வின் நடுவே இந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தனர்.
இந்தியாவின் இன்னிங்ஸ் இரண்டு வெவ்வேறு கட்டங்களைக் கொண்டது. மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ராகுலின் தலைசிறந்த 50 ரன்கள் முதல் பாதியைச் சேர்ந்தது. பின்னர் அஷ்வின் அடித்த 46 ரன்கள் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தது. லோயர் ஆர்டர் ஸ்கோரை 200 ஐத் தாண்டும் அளவிற்கு ஆடினர். ஆனால் இந்திய அணியில் பெரிய பார்ட்னர்ஷிப்கள் எதுவும் வேரூன்ற அனுமதிக்கப்படவில்லை.
மயங்க் அகர்வாலும், ராகுலும் முதல் ஒரு மணி நேரத்தில் 36 ரன்கள் குவித்தனர். ட்ரிங்க்ஸ் பிரேக் முடிந்த உடனேயே, ஜான்சன் பந்தில் அகர்வால் அவுட்டானார். கோஹ்லி இல்லாததால், இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே மீது இருந்தது. இரண்டு பேரும் மீண்டும் சொதப்பினர். இருவருக்கும் அளவிற்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது.
இப்போது பொறுப்பு ராகுல் மீதும் ஆட்டத்திற்குத் திரும்பிய ஹனுமா விஹாரி மீதும் விழுந்தது. ஆனால் இருவரும் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதன் பின்னர் ஜான்சன் ரிஷப் பந்தை அழகாக செட் செய்து அவுட்டாக்கினார். அஸ்வின் அதிரடியான ஷாட்களை ஆடினார். ஒருவழியாக இந்திய அணி 202 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை சோதித்தனர், ஷமியின் பந்தில் மக்ரம் அவுட்டானார். நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, எனவே நாளைய ஆட்டம் நடக்குமா என்பது சந்தேகம்.