26-03-2023 10:35 PM
More

  இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

  சிவபெருமானின் க்ருபாகடாக்ஷம் பெற வேண்டுமா..?

  sivan - Dhinasari Tamil

  புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது “சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்த பிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எத்தொகழிலைச் செய்தாலும் பெறவேண்டியது சிவகிருபா கடாக்ஷம் ஆகும்.

  அதற்கு உபாயன் சிவபக்தி ஒன்றேதான் உள்ளது. இதைப் புரிந்துக் கொள்ள மஹா ஸ்காந்தத்தில் உள்ளது ஒரு இதிஹாஸம்.

  காச்மீரதேசத்தை ஆண்டு வந்த பத்ரஸேனன் என்ற மன்னனுக்கு தர்மசேனன் என்ற ஒரு புத்திரன் பிறந்தான். அந்த மன்னனுக்குப் பக்தனான ஒரு மந்திரி இருந்தான்.

  அவனுக்கும் ஒரு மகன் பிறந்தான். இரு குழந்தைகளும் சிறு குழந்தைப் பருவம் முதல் விபூதியை உடல் பூராவும் பூசியும் ருத்ராக்ஷத்தை தலையிலிருந்து உடல் பூராவும் ஆபரணமாகப் பூச்சியும் வாக்கில் சிவநாமம் பேசியும் வந்தார்கள்.

  “தெளததா ஸர்வ காத்ரேஷு ருத்ராக்ஷ க்ருத பூஷணெள”. இப்படி அரசன், மந்திரி இவர்களுடைய இரு புத்திரர்களும் சிவபக்தியில் நிலைத்து அதனாலேயே வளர்ந்து அழகும் தேஜஸ் என்ற ஒளியும் வீசும்படிப் பிரகாசித்தார்கள்.

  மன்னனுக்கு இது ஒரு மர்மமாகவே இருந்தது குழந்தைகள் பிறந்து அறிவு ஏற்படும் முன்னரே விபூதி ருத்ராக்ஷதாரணமும் சிவநாமோச் சாரணமும் எப்படி வந்தது என்பது கேள்விக் குறியாகவே இருந்தது.

  ஒரு நாள் அத்ரி என்ற முனிவர் அரசனைக் காண வந்தார். அரசனும் மஹரிஷியை முறைப்படி பூசித்து இந்தக் குழந்தைகளுக்கு சிவபக்தி பண்ணுவது எப்படி இந்த அதிபால்யத்திலேயே வந்து என்று அதன் காரணத்தை வினவினான். முனிவர் பெருமானும் இதைச் சொல்லவே வந்தார் அல்லவா? எனவே ஆனந்த நிலையிலிருந்து அரசனுக்கு அருள் பாலித்து பூர்வஜன்ம விருத்தாந்தத்தைக் கூறியருளினார்.

  நந்தி கிராமம் என்ற ஊரில் மஹாநந்தா என்று ஒரு பெண் நாட்டியம் பயின்று அதனால் சிவபெருமானை சந்தோஷப்படுத்த வேண்டும் என்றும் சிவபூஜையில் பேரன்பும், சிவநாமத்திலும் சிவகதையிலும் மிகவும் ஆசையும் வைத்து சிவஸ்ந்நிதியில் சிவதாண்டவத்தைப் போலவே அற்புத நாட்டியம் ஆடி வந்தாள்.

  அவளுக்கு ஒரு சிறு சந்தேகம் வந்தது. நம் நாட்டியத்தில் பரமேச்வரன் சந்தோஷப்படுவாரா என்று தோன்றியது. அதற்குப் பரிஹாரமாக ஆலோசித்து ஒரு கோழி ஒரு குரங்கு இரண்டையும் அன்புடன் வளர்த்து அதற்கு நாட்டியம் பழக்கி வைத்தாள்.

  அவை இரண்டும் நன்றாகவே நாட்டியம் பழகி ஆடத் தொடங்கின, அவைகளுக்கு விபூதியைப் பூசி ருத்ராக்ஷத்தை அணிவித்து நடனம் செய்ய விடுத்தாள். அது அவளுக்கே பரமானந்தமாக இருந்தது.

  சிவபெருமான் நிச்சயம் சந்தோஷப்படுவார் என்று எண்ணினாள். குரங்கும் கைகளால் தாளம் போட்டுக் கோழியுடன் நடனம் ஆடும். மஹாநந்தா பாடிக் கொண்டிருப்பாள்.

  ஒரு நாள் சிவாலயத்தில் கோழி குரங்கு இரண்டும் ஆடப் பரவசமாக மஹாநந்தா பாடிக் கொண்டிருக்கும் போது கோவில் உள்ளிருந்து ஒரு பெரியவர் கையில் கரபூஷணமாக ஒரு வளையல் போல மாணிக்கக்கற்களால் செய்த சிவலிங்கம் பதிக்கப்பட்டு கையில் அழகாகத் தரித்திருந்தார்.

  மஹாநந்தா அவரைப் பார்த்ததும் அவரிடம் ஒரு பற்று ஏற்பட்டது. அவரிடம் சென்று “ஸ்வாமி! உங்கள் கையை அலங்கரிக்கும் ரத்னலிங்கத்தை எனக்கு அளிக்க வேண்டும்” என்று வேண்டினாள்.

  அந்தப் பெரியவரோ “நீ எனக்கு மனைவியானால் கொடுக்க முடியும்” என்றார். இந்தப் பெண்ணுக்கு அது இஷ்டம் இல்லையென்றாலும் அந்த ரத்ன லிங்கத்டை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையினால் அந்த சிவபக்தியின் முதிர்ந்த நிலையில் அவரிடம்,

  “பெரியவரே! இந்த ரத்ன கசிதமான கரபூஷண வடிவ சிவலிங்கத்தைத் தருவதானால் நான் உங்களுக்கு மூன்று நாட்கள் மனைவியாக் இருப்பேன். மூன்று நாட்களும் உத்தம பத்னிக்குள்ள ஸகல தர்மத்தையும் அனுஷ்டிப்பேன்” என்று அவருடைய ஹிருதயத்தைத் தொட்டுச் சொன்னாள். அந்தப் பெரியவரும் ஒப்புக்கொண்டு அந்த ரத்னலிங்கத்தைக் கொடுத்தார்.

  அதை வாங்கிக் கொண்டு அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து முறையாகக் கணவன் மனைவியானார்கள். இரண்டு நாட்கள் ஆனதும் மூன்றாவது நாள் அந்த ரத்னலிங்கத்தை நாட்டிய சாலையில் வைத்துக் கொண்டு கோழிக்கும் குரங்குக்கும் நாட்டியம் கற்பிக்கும் போது திடீரென்று நாட்டிய சாலை நெருப்புப்பற்றிக் கொண்டு எரிந்தது.

  கோழியும் குரங்குமும் எங்கோ ஓடிவிட்டன. இவளும் நெருப்பைப் கண்டு பயந்து ஓடினாள். நாட்டியசாலை எரியும் போது அந்தப் பெண்ணுக்கு இரண்டு நாட்களாகக் கணவராக இருந்த பெரியவர் “பெண்ணே! லிங்கம் எங்கே?” என்று கேட்டார்.

  நாட்டிய சாலையின் தூண்களுடன் அந்த லிங்கமும் எரிகிறது என்று அந்தப் பெண் பதில் கூறினாள். அதைக்கேட்ட பெரியவர் ஓ வென்று அலறி இனி நான் உயிருடன் இருக்க மாட்டேன். லிங்கத்தை அநியாயமாகப் பறிகொடுத்து விட்டேனே என்று கதறிக் கொண்டே அந்த நெருப்பில் விழுந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டார்.

  இதைப் பார்த்த மஹாநந்தா “நான் அவர் மனைவியாகி இன்று மூன்றாவது நாள், ஆதலால் நானும் அவருடன் போக வேண்டும்” எனறு கூறி, அவர் விழுந்த நெருப்பிலேயே தானும் விழுந்தாள்.

  முன் விழுந்த பெரியவர் எரிந்தது போல் காணப்பட்டவர் நெருப்பிலிருந்து எழுந்து கங்கை, ஜடை, நெற்றிக்கண், மான், மழு, சூலம், ஏந்தி விபூதி ருத்ராக்ஷத்துடன் பரமேச்வரனாகக் காக்ஷியளித்து அந்த மஹாநந்தா என்ற பெண்ணைத் தூக்கியெடுத்து பரமகருணையுடன் கிருபா கடாக்ஷத்துடன் கூறினார்.

  “உனது ஸத்யம், தைரியம், தர்மம், பக்தி என்னிடத்தில் அசைக்க முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கவே உனது ஸமீபம் இருக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டு மனித உருவில் வந்தேன். பெண்ணே! உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக” என்றார்.

  பிரத்யக்ஷமாகப் பரமேச்வரனைத் தரிசித்த ஆனந்த பரவசநிலையில் “சம்போ” என்று கதறி உங்களது கிருபா கடாக்ஷம் வேண்டும் என்று அருமையான ஸ்தோத்ரம் செய்தாள்.

  விச்வேச விச்வலிலய ஸ்திதி ஜன்மஹேதோ
  விச்வைக வந்த்ய சிவ சாஸ்வத விச்வரூப |
  வித்வஸ்தகால விபரீத குணாவபாஸ
  ஶ்ரீமன் மஹோ மயிதேஹி க்ருபாகடாக்ஷம்
  ||

  உலகத்துக்கு ஈச்வரனாகவும், உலகத்தை அழித்துப் படைத்து ரக்ஷிக்கும், உலகத்தாரால் பூஜிக்கப்பட்டும், சாஸ்வதமான விச்வரூப மூர்த்தியாகவும், யமனை ஸம்ஹரித்தும், உலகத்தை அனுசரிக்காமல் தனிமையாகவும் இருக்கும் மஹேச்வரனே! உங்களது கடைக்கண் பார்வையை என்னிடம் வைக்க வேண்டும்.

  சம்போ சசரங்க க்ருதசேகர சாந்தமூர்த்தே
  கங்காதராமாவரார்ச்சித பாதபத்ம |
  நாகேந்த்ரபூஷண நகேந்த்ர நிகேதனேச பக்தார்த்திஹன் மயிநிதேஹி க்ருபாகடாக்ஷம் ||

  ஸுகத்தைக் கொடுப்பவரே! சந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரே! சாந்தமூர்த்தியே! கங்கையை ஜடையில் தரித்தவரே! தேவராஜனால் பூஜிக்கப்பட்ட பாதம் உடையவரே! ஸர்ப்பமாலை தரித்தவரே! மலைகளுக்கெல்லாம் அரசனானமலையில் வசிப்பவரே! பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கும் தெய்வமே! கிருபையுடன் கடைக்கண் பார்வையை என்னிடம் வைக்கவேணும்.

  ஶ்ரீவிச்வநாத கருணாகர சூலபாணே
  பூதேச பர்க புவனத்ரயகீத கீர்த்தே |
  ஶ்ரீநீலகண்ட மதனாந்தக விச்வமூர்த்தே
  கெளரீபதே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம் ||

  விச்வநாதனே! கருணைசெய்பவரே! சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவரே! பூதங்களில் தலைவரே! மூவுலகங்களும் உங்கள் கீர்த்தியை கானம் செய்யும் பெருமைஉடையவரே! நீலகண்டமூர்த்தியே! மன்மதனை அழித்தவரே! உலகின் தெய்வமே! கெளரி தேவியின் மணாளனே! என்னிடம் உங்கள் கடைக்கண் பார்வையை வைக்கவேண்டும்.

  விக்நேசதாத விதிபூஜித விச்வமூர்த்தே
  விச்வாலயாமித க்ருபாபல விச்வநேத்ர |
  விச்வாதிகாமல விசாலவிலோகனேன
  சம்போ விதேஹி சிவாம்ருத க்ருபாகடாக்ஷம் ||

  கணபதியின் தந்தையே! பிரம்மாவினால் பூசிக்கப்பட்டவரே! உலகமே உங்கள் கோயில், அளவில்லாக் கருணையுடையவரே! உலகமே உங்கள் கண், உலகைக் காட்டிலும் பெரியவரே! விசாலமான கண்களால் என்னிடம் சிவாம்ருத கடாக்ஷத்தைச் செய்ய வேணும்.

  மாயாமயம் ஹி ஸகலம் பரித்ருச்யமானம் மோஹாத்மகம் ஜகதிதம் மஹதிந்த்ரஜாலம் | தேனதப்த ஸுகதுக்க விமோஹிதேமயி ஸ்வாமின் விதேஹி தவதேவ க்ருபாகடாக்ஷம் ||

  இவ்வுலகு மாயாமயம், அதையே பார்க்கிறோம் அது ஏமாற்றுகிறது. இந்திர ஜாலம் போல் உலகு இருக்கிறது. அதனால் சுக துக்கங்களையடைந்து கஷ்டப்படும் என்னிடம் கிருபா கடாக்ஷத்தைச் செய்ய வேணும்.

  சைவாம்ருதம் ஸகல தேவ கணாபிவந்த்யம்
  சைவாநுரக்த மதிமானஸ துஷ்டிஹேதும் |
  யாசேஹமத்ய கருணாரஸ காமதேனோ
  சம்போ விதேஹி மயிதேவ க்ருபாகடாக்ஷம் ||

  உங்கள் கருணாகடாக்ஷம் தான் சிவாமிருதம். இதை தேவர்கள் வணங்கி வேண்டுகிறார்கள். சிவத்திடம் பக்தி செலுத்துபவர்களுக்கு சந்தோஷம் உண்டாகக் காரணமும் இதுவே. இதையே வேண்டுகின்றேன். கருணாரசம் பொழியும் காமதேனு போன்றவரே! தங்களது கடாக்ஷம் வேண்டும்.

  தேவாதி தேவ புவனத்ரய ரக்ஷகாஸ்மான்
  ரக்ஷாம் குருத்வமதிபாப பயார்த்திபீதான் |சம்போ கிரீச கிரிஜாபதி பக்தபால
  தயாம் குருஷ்வ சிவதேஹி க்ருபாகடாக்ஷம் ||

  தேவாதி தேவரே! மூன்று உலகங்களையும் காப்பவரே! மஹாபாபத்தைக் கண்டு பயப்படும் எங்களை ரக்ஷிக்க வேண்டும். சம்போ! கைலாசத்தில் மலையரசன் மகளுடன் இருந்து பக்தர்களை ரக்ஷிக்கும் சிவபெருமானே! என்னிடம் தயை வைத்து கிருபா கடாக்ஷம் வைக்க வேண்டும்.

  ஸதாசிவகடாக்ஷம் பக்தபாக்யோ தயார்த்ரம்
  ஸுதாகிரணபூர்வம் தத்கடாக்ஷம் பவஸ்ய |சிவா சிவகடாக்ஷம் தீனதீனேஹ்யநாதே
  மயிக்ஷிப சிவாம்ருத கருணாக்ருபாக்ஷம் ||

  ஸதாசிவ மூர்த்தியின் கடாக்ஷம் பக்தர்களின் பாக்யத்திற்குக் காரணம், அம்ருத கடாக்ஷத்துடன் அம்பாளுடைய கடாக்ஷமும் தீன தீனர்களுக்கும் கீழான நாதனற்ற என்னிடம் சிவ கருணாம்ருத கடாக்ஷத்தை வைக்க வேண்டும்.

  சிவாகடாக்ஷம் க்ருபாகடாக்ஷம் சிவாம்ருத கருணாகடாக்ஷம் | ஹ்ருதயேன பக்த்யா நராஸ்துவந்திஹ்யாப்னோதி
  சித்தம் க்ருபாகடாக்ஷம் ||

  அம்பாளின் கடாக்ஷமும் சிவபெருமானது கிருபா கடாக்ஷமும் சிவாம்ருதமாகிய கருணா கடாக்ஷமும் பெருகும் இந்த ஸ்தோத்ரத்தை நுனி நாக்கால் மட்டும் சொல்லாமல் உள்ளம் உருகி ஸ்தோத்ரம் செய்வதால் உண்மையாக சிவ கடாக்ஷம் கிடைக்கும். (கடாக்ஷம் – கடைக்கண்பார்வை) இதைக் காட்டிலும் பெறக்கூடிய பேறு பெரிது ஏதுமில்லை.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  7 + twenty =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  19,034FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  0FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe
  -Advertisement-