
திருவில்லிபுத்தூர் அருகே, காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் கைது…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது கூமாப்பட்டி. இந்தப்பகுதியைச் சேர்ந்த ராமராஜ் (55) என்பவர் கடந்த ஜனவரி மாதம் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து ராமராஜின் தாயார் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ராமராஜின் உறவினர் கண்ணன் என்பவரிடம், சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கண்ணனின் செல்போன் மற்றும் அவரது ஆதார் அடையாள அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர். இந்த நிலையில் காணாமல் போன ராமராஜ், சில தினங்களில் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார்.
இதனையடுத்து தனது செல்போனையும், ஆதார் அடையாள அட்டையையும் திரும்பத்தருமாறு கண்ணன் போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு கூமாப்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராம்குமார், தலைமை காவலர் ரேணுகாந்த் இருவரும், கண்ணனிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கொடுத்தால் தான் போனையும், ஆதார் அட்டையையும் திருப்பித்தர முடியும் என்று கூறியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன், இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனக் கலவை தடவிய பணம் 7 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுத்தனுப்பினர்.
கூமாப்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளரிடம் லஞ்சப்பணம் 7 ஆயிரத்தை கண்ணன் கொடுத்தார். அப்போது அந்தப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பாரதிபிரியா, பூமிநாதன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பு ஆய்வாளர் ராம்குமார், தலைமை காவலர் ரேணுகாந்த் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
7 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிய போலீசார் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும், களவுமாக சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் சிக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.