
மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் நாளில் திருவரங்கம் அருகேயுள்ள மண்டங்குடி என்ற கிராமத்தில் அவதரித்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன்.
திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு பூமாலை கைங்கர்யம் செய்து வந்தார். திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரைத் தவிர வேறு எந்த பெருமாளையும் பாடாத ஒரே ஆழ்வார் இவரே. ஸ்ரீரங்கநாதரை துயிலெழுப்பும் திருப்பள்ளியெழுச்சி, திருமாலை ஆகிய பிரபந்தங்களை அருளிச் செய்தார். மார்கழியில் அனைத்து திவ்யதேசங்களிலும் பாடப்படுவது திருப்பள்ளியெழுச்சியும், ஆண்டாளின் திருப்பாவையும் மட்டுமே. ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்ற பிரபலமான பாசுரம் திருமாலையில் இடம்பெற்றிருப்பது.
இதில் இந்திரப் பதவி கூட வேண்டாம், திருவரங்கமே போதும் என்று பாடுகிறார். ஓட்டை மாடமான இந்த உடலைப் பேணுவதை கைவிட்டு, திருவரங்கனுக்கு கைங்கர்யம் செய்ய வாருங்கள் என்று அழைக்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.





