காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் ஆன நிலையில், அவருக்கு அடுத்து பீடத்தை அலங்கரிக்க, இளைய மடாதிபதியாக இருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நியமனம் செய்தனர் மடத்தின் பொறுப்பாளர்கள்.
காஞ்சிபுரம் ஸ்ரீகாமகோடி பீடத்தில் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் கடந்த பிப். 28ஆம் தேதி மூச்சுத்திணறலும் தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டு மகாசமாதியானார். இதை அடுத்து அவரது பூதவுடல் மடத்தின் உள்ளேயே மகாபெரியவர் பிருந்தாவனம் அமைந்துள்ள இடத்தில் அருகிலேயே பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியாக இருக்கும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 49 வயதாகிறது. சங்கர நாராயணன் என்ற பூர்வாசிரமப் பெயரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் 1969-ம் மார்ச் 13-ஆம் தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்தில் மகா பெரியவரால் கண்டெடுக்கப் பட்டு, இவருக்கு வேத சாஸ்திரங்களில் பயிற்சி கொடுக்கப் பட்டது. சிறு வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அனுபவம் உண்டு.
முன்னதாக, 69வது பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ ஜயேந்திரருக்குப் பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திரர்தான் மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பு எடுத்துக் கொண்டு, ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனப் பிரவேசத்தை நடத்தி வைத்தார். இருப்பினும், மடத்தின் நிர்வாகத்தில் நிலவும் குழப்பங்களால், 70வது பீடாதிபதி குறித்த சர்ச்சையை சிலர் கிளப்பி வருகின்றனர்.
பெரியவர் மறைவையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக ஸ்ரீவிஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சங்கர மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்பையும் அவர் கவனிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மடத்தின் நிர்வாகி சுந்தரேச ஐயர் கூறியுள்ளார்.
ஸ்ரீ ஜயேந்திரருக்கான 13 ஆம் நாள் சிறப்பு பூஜைகளை விஜயேந்திரர் செய்வார் என்றும், 13 நாட்கள் காரியங்கள், சடங்குகள் முடிந்த உடன் முறைப்படி விஜயேந்திரர் 70வது பீடாதிபதியாக நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 70 ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றதாக வந்த தகவல் தவறு என்று மடத்தின் செய்தித் தொடர்பாளர் அக்னி மறுத்துள்ளார்.
இருப்பினும், மடத்தின் நிர்வாகத்தில் நிலையான ஒருவர் அமர்ந்து நிர்வகித்தால் அன்றி, இது போன்ற குழப்பங்களை சிலர் ஏற்படுத்துவார்கள் என்று மடத்தின் பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மடத்தை வைத்து மனம் போன போக்கில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை சமாளித்து நிர்வாகத்தை சரியான போக்கில் கொண்டு செல்வாரா விஜயேந்திரர் என்று எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது.