
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது.
இதையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.45 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலும், அதனைத்தொடர்ந்து பூச்சொரிதல் விழாவும் தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வருடந்தோறும் மாசிமாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். அம்மன் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த பக்தர்கள் பல்வேறு வகை மலர்களைக் கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வழிபடுவர்.பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கார வண்டிகளில் மலர்களை கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.
இதையொட்டி 300க்கும் அதிகமான இடங்களில் இருந்து அலங்கார வண்டிகளில் பக்தர்கள் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு வந்ததால் அப்பகுதி முழுவதுமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
நன்றி- படங்கள்: ஸ்ரீரங்கம்-குணா



