
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வடமொழியில் அசோகம் என்று பெயர். பங்குனி மாத அமாவாசையில் இருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது. அதனால் அசோகாஷ்டமி என்று பெயர்.
ஶ்ரீராமநவமி அன்றோ அல்லது அதற்கு முதல் நாளோ வரும். சரி இன்று என்ன செய்ய வேண்டும்?
இன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்விக்கலாம். மருதாணி மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம். மூன்று முறை வலம் வரலாம்.
முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளைப் பறித்து அதை கீழ்க் காணும் ஸ்லோகம் சொல்லி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
த்வாம சோக நரா பீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதா குரு.
ஓ மருதாணி மரமே உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர் அல்லவா. மது என்னும் வஸந்த காலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய். நான் உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன். நீ , பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும் எனது துன்பங்களை விலக்கி வஸந்த காலம் போல் எவ்வித துன்பமும் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லி மருதாணி இலைகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பல நோய்கள், துன்பத்திற்குக் காரணமான பாபங்கள் விலகுவதாகக் கூறுகிறது லிங்க புராணம்.



