உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்; உண்டோ சடகோபர்க்கு ஒப்பு – என்று வைணவ ஆசார்யர் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் காட்டுகிறார். அவ்வாறே ஒப்பு அற்ற உயர்வு படைத்தவர் சடகோபராகிய நம்மாழ்வார். ஒப்பு அற்ற உயர்வான நாள், வைகாசி விசாகம்.
நம்மாழ்வார் தம் சீடரான மதுரகவியாழ்வாருக்கு நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ்ப் பொருளை நான்கு பிரபந்தங்களாக்கி அருள்கின்றார். அப்போது அவர், மதுரகவிகளை நோக்கி, “திருக்கோளூர்ச் செல்வரே! பர, வியூக, விபவ, அந்தர்யாமி எனும் நான்கு ஸ்வரூபத்தை உடைய எம்பெருமானுக்கு
வேதம், பாஞ்சராத்திரம், இதிகாசம், ஸ்மிருதி முதலியவை தோத்திரங்கள் ஆகின்றன. மரத்தாலும், கற்சிலையாலும் வடிவான அர்ச்சாவதார எம்பெருமானுக்கு வேத அர்த்தங்கள் அடங்கிய தமிழ் மொழியானது துதியாகிறது. கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் யோகத்தினாலும், துவாபர யுகத்தில் பூஜையாலும் மனிதன் எந்தப் பலனை அடந்தானோ, அதே பலனை கலியுகத்திலும் எம்பெருமானை தோத்திரம் செய்வதால் அடைகின்றான்.
முன்னர் பகவான் வியாசராகத் தோன்றி, பாரதத்தை எவ்வாறு அருளிச் செய்தாரோ, அதுபோல் இப்போது உலகை உய்விக்கும் பொருட்டு, வேதார்த்தங்கள் அடங்கிய தமிழ் மறைகளை எம் மூலமாகச் செய்தருளினன். நான்கு வேதங்களின் அர்த்தங்கள் அடங்கிய நான்கு பிரபந்தங்களையும் இப்போது என்னிடம் இருந்து கேட்பீராக!” என்று கூறி மழை போலே பிரபந்தங்களை அருளிச் செய்தார்.
எனவே தான் நம்மாழ்வார் தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய் என்று போற்றப்படுகிறார். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன.
தற்போது ஆழ்வார் திருநகரியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.
நம்மாழ்வார் திருநட்சத்திரம் : வைகாசி விசாகம்




