கேள்வி :- நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?
பதில் ;- வேதத்தில் ஐந்து பிரணவங்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை ஓங்காரம், ஸ்வாஹாகாரம், ஸ்வதாகாரம், வஷட்காரம், நமஸ்காரம் என்பவை. ‘நம:’ என்ற சொல் தெய்வத்திற்கு நம் சமர்ப்பணத்தைத் தெரிவிக்கிறது. இது தெய்வத்தை வரவேற்கும் சொல் கூட.
நமஸ்காரத்தைத் தவிர மீதி உள்ள நான்கிற்கும் எப்போது செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் போன்ற பலவித நியமங்கள் உள்ளன. நமஸ்காரம் அத்தகைய நியமங்கள் எதுவுமற்ற ப்ரணவம். ஒரு உயர்ந்த பொருளுக்கு உரிய சிறப்பை உணர்ந்து தலை வணங்குவதே நமஸ்கார பாவனை. தெய்வத்தின் மகிமையை அறிந்து வணங்குகிறோம் என்ற பாவனையே நமஸ்காரத்தின் உட்பொருள்.
வேறொரு பொருளில், ‘மன:’ என்ற சொல்லே ‘நம:’ என்று ஆனது. இதனை ‘வர்ண விபர்யய நியாயம்’ என்பர். மனதை சம்ர்பிப்பது என்றால் அகங்காரத்தை தியாகம் செய்வது. எனவே அகங்காரத்தை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வதே இதன் உட்பொருள்.
சிறிது சிறிதாக இந்த பாவனை அகம் என்பதை பிரம்மத்தோடு லீனம் செய்யக் கூடிய கைவல்ய நிலைக்கு காரணமாகும். எனவேதான் நமஸ்காரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.
***
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)




