கேள்வி:- நவராத்திரி ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும்படி அகண்ட தீபம் ஏற்றுவதால் என்ன பலன்?
பதில்:- நவராத்திரி ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும் அகண்ட தீபம் அனைவரும் ஏற்றத் தான் வேண்டும் என்ற நியமம் எதுவும் இல்லை. ஆனால் அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவதும் ஒரு சம்பிரதாயம்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் அல்லது மண்டபத்துடன் அகண்ட தீபமும் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தகுந்த ஏற்பாட்டுடன் அதனை ஜாக்கிரதையாகச் செய்வது நல்லது. ஒன்பது நாட்களும் அது அணையாமல் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையும் சூழலும் வசதியும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.
பூஜைகளில் தீபம் ஏற்றுவதும் முக்கிய உத்தேசம் என்ன வென்றால் தெய்வங்களின் சக்தியை அங்கு ஆவாஹனம் செய்வதே. ஏனென்றால் தெய்வங்கள் பிரகாச வடிவினர். ஒளி வடிவம் உடையவர்கள். ஒளி சொரூபமுள்ள தேவதைகள் அங்கு வர வேண்டுமென்றால் அங்கு ஒளி ரூபம் கொண்ட ஜோதி இருக்க வேண்டும். அதனால் தான் பூஜைக்கு முன் தீபம் ஏற்றுகிறோம். பூஜையின் நடுவிலும் தீபம் ஏற்றுகிறோம். பூஜை பூர்த்தியானபின் நீராஜனம் என்ற கற்பூர ஆர்த்தியின் போதும் ஜோதியை காண்பிக்கிறோம்.
ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யும் நவராத்திரி பூஜை தடையின்றி நடைபெறுவதற்காக அகண்ட தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அதோடு கூட நம்முடைய சங்கல்பம் அகண்டமாக விருத்தியடைய வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அகண்ட தீபத்தின் மூலம் அனைத்து வித தோஷங்களும் விலகி ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கப் பெறுகிறோம்.
அந்த ஜோதி ரூபத்தில் ‘லோகைக தீபாங்குரா’ வாகிய அம்பாளை ஒளி வடிவத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறோம். அந்த தீப ஜோதியில் ஒன்பது நாட்களும் அம்பாள் அசையாமல் நின்று நம் பூஜையை ஏற்கிறாள். ‘லோகைக தீபங்குரா!’ என்று துதிக்கப்படும் ஜோதி சொரூபத்திற்கு குறியீடாகவே நாம் அகண்ட தீபத்தை ஏற்றி வணங்குகிறோம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்




