பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களின் துணைவியான திரௌபதியை இழிவுகளிலிருந்து பழி ஏற்படாமல் காப்பாற்றி வந்தார். கிருஷ்ணர் திரௌபதிக்கு காண்பித்த கருணையின் காரணத்தை சத்யபாமாவும் ருக்மணியும் அறிய ஆர்வம் கொண்டனர்.
கிருஷ்ணர், அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைக்க, ஒரு நாள் இருவரையும் தன்னுடன் திரௌபதியின் அரண்மனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் அங்கு சென்ற போது, திரௌபதி தனது குளியலை முடித்து விட்டு கூந்தலை சீவிக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணர், ருக்மிணியையும் சத்யாபாமாவையும் திரௌபதியின் கூந்தலை சீவிவிடுமாறு கூறினார். சற்று கோபமாக இருந்தாலும், இருவரும் கிருஷ்ணரின் ஆணைக்கு இணங்கினர்.
திரௌபதியின் கூந்தலை அவர்கள் சீவும் பொழுது, ஒவ்வொரு உரோமத்திலிருந்தும் “கிருஷ்ணா” என்ற ஒலி வருவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். கிருஷ்ணரின் மீது திரௌபதி கொண்ட பக்தியை புரிந்து கொண்டனர்; அவள் மீது கிருஷ்ணர் பொழியும் அருளுக்கு திரௌபதி முற்றிலும் தகுதியனவள் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
கிருஷ்ணர் மீது இருந்த அன்பு, ஈடுபாடு மற்றும் பக்தி, திரௌபதியின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருந்தது; கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்த திரௌபதி, பக்தியின் உச்சத்தில் இருந்தாள்.
முழு மனதோடு வணங்கும் பக்தையின் வேண்டுதல்களை கிருஷ்ணர் அங்கீகரிக் காமல் இருப்பாரா? “நாம ஜபம்” என்ற எளிய சாதனை மூலம் இறைவனின் பரிபூரண அனுக்ரஹத்தை திரௌபதி பெற்றாள்.
நீதி:
கலியுகத்தில், கடவுளின் நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதே சிறந்த ஆன்மீக வழிமுறையாகும். இடையீடற்ற நாம ஜபம் செய்து வந்தால், கடவுளின் பரிபூரண கருணை மற்றும் அன்பை உறுதியாக அடையலாம்.
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே .
பொருள் : கர்ம வினையின் அடிப்படையில் இயங்குகிறது இந்த உலகம். விதியின் வழியில் வாழ்ந்தால் முழுமையான இன்பம் இல்லாத வாழ்க்கையே கிடைக்கும். ஜோதி வடிவான இறைவனை நித்தமும் துதிப்பவர்க்கு சூரியனாக இருந்து கர்ம வினையைக் கடக்க புத்தம் புதுவழியை காட்டுவான்…
- குட்டி வேணுகோபால்




