
மகா சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி யதீந்திரர் ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து போது ஒரு குடும்பத் தலைவர் மகா சுவாமிகளை தரிசிக்க வந்தார். காஞ்சிபுரத்தின் அருகில் இருந்த செல்வந்தர் குடும்பம் அவர்களுடையது.
“பெரியவா! மிகவும் செல்வந்தர்களாக இருந்த குடும்பம் எங்களுடையது. ஆனால் சமீப காலமாக மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம். குடும்பத்தில் பொருளாதார வசதி குறைந்து நலிந்து விட்டது. சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலைமை வந்ததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை” என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொண்டார்.
சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்த மகாசுவாமிகள் கருணையோடு கூறினார், “நான் கூறப் போகும் விஷயத்தை கேட்டு வருந்த மாட்டாய் அல்லவா?” என்று வினவினார்.
“விஷயம் எதுவானாலும் பெரியவா கருணையே முக்கியம். நான் தவறு செய்திருந்தால் கட்டாயம் தண்டனை கொடுங்கள்!” என்றார் அந்த பக்தர்.
“உங்கள் பூர்வீகமான கிராமக் கோவிலில் வருடாவருடம் ரதயாத்திரை நடந்து வந்தது. உங்கள் குடும்பத்தார்தான் அதனை நடத்தி வந்தார்கள். உன் தந்தையார் காலத்தில் சில பொருளாதார பிரச்சினைகளாலும் உறவினர்களின் உதவி கிடைக்காததாலும் அந்த ரதயாத்திரை நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது நீ அதனை நடத்தலாமா என்று பார்த்தால் அந்தத் தேர் பழுதடைந்திருக்கிறது. அதனை சீர் செய்து உற்சவம் நடத்துவதற்கு உன்னிடம் நிதி வசதி இல்லை. பரம்பரையாக நடந்துவரும் சிறந்த தர்ம காரியத்தை ஒருபோதும் நிறுத்த கூடாது. அது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தும் சூழலில் உன் குடும்பம் இல்லை” என்று கருணையோடு கூறியருளினார் மகாசுவாமிகள்.
துயரம் நிறைந்த குரலில் அந்த பக்தர், “இப்போது நான் என்ன செய்வது? பெரியவா கட்டளையிட வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
மகா சுவாமிகள் ஒரு பரிஷ்காரத்தை எடுத்துரைத்தார்.
“எந்த இடத்திலானாலும் சரி, எந்த ஆலயமானாலும் சரி, தேர்த்திருவிழா நடக்கும் போது நீ உன் குடும்பத்தோடு சென்று எல்லோரோடும் சேர்ந்து நீங்களும் தேர் வடத்தைப் பிடித்திழுங்கள். அதனை ஒரு நியமமாக கொள்ளுங்கள்” என்று மலர்ந்தருளினார் மகாசுவாமிகள்.
சத்குருவின் ஆணையை தலைமேற்கொண்டு அதேபோல் அந்த செல்வந்தர் குடும்பம் எங்கெங்கு ரதோற்சவம் நடந்தாலும் அங்கெல்லாம் சென்று தேரை வடம் பிடித்து இழுத்து கைங்கரியம் செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு செய்து வருகையில் சின்னாட்களில் அவர்களின் பொருளாதார நிலைமை சீராகி பிரச்சினைகள் விலகி லாபம் கிடைத்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆச்சரியமான விஷயம்.

இங்கு ஒரு அழகான திருப்பம் என்னவென்றால் தனக்கு லாபம் வரத் தொடங்கியவுடன் அவர் என்ன செய்தார் என்றால் ஜகத்குருவின் ஆணையை மனதில் இருத்தி தன் சொந்த கிராமத்திற்குச் சென்று அந்த ஊர் பெரியவர்களிடம் கலந்து பேசினார். அந்த கிராமக் கோயில் தேரைப் பராமரித்து மராமத்து செய்து தன் சொந்த செலவில் சீர் செய்தார். ஜகத்குருவின் அருளால் பொதுமக்களின் சம்மதத்தோடு ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழாவை அந்த குடும்பத்தார் எந்தவித தடங்கலுமின்றி நிர்வகிக்க முடிந்தது.
இதில் ஜகத்குரு காட்டிய அவதார லீலையை நாம் கவனிக்க வேண்டும். இதனை மகிமை என்று எண்ணுவதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் இதன் மூலம் ஒரு உயர்ந்த செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதனை நாம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய உயர்ந்த கருத்துக்களையே இங்கு ருஷி வாக்கியங்களாக நாம் பார்த்து வருகிறோம்.
மகரிஷி என்ற சொல்லை விட உயர்ந்த சொல்லால் அழைக்கப்பட வேண்டியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள். சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம். ஆதி சங்கரரின் அவதாரம்.
அவர் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நமக்கு தர்மோபதேசம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவிக்கும் முதல் செய்தி என்னவென்றால் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் தர்மத்தை விட்டு விடக்கூடாது.
இதே கருத்தை கீதையில் பரமாத்மா கூறுகிறான்.
“குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் II”
-“உன் முன்னோர்களும் பூர்வ தலைமுறையினரும் செய்துவந்த தர்மத்தை விட்டு விலகக் கூடாது”.
அதனால் அத்தகைய செயல்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அதேபோல் குலதெய்வத்தின் விஷயத்தில் அலட்சியம் பாவனை கூடவே கூடாது. இது கவனிக்க வேண்டிய அம்சம். கிராம தேவதை, வீட்டு தெய்வம் இவர்களுக்கு நடத்தவேண்டிய வழிபாடுகளை எப்போதும் நிறுத்தக்கூடாது. அது தொடர்பாக அபசாரங்கள் செய்தால் சில தீய பலன்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அதற்காக நாம் வழிபாட்டை நிறுத்தியதால் தெய்வங்களுக்கு ஆக்ரஹம் வந்தது என்று கூறுவதற்கில்லை. தெய்வங்களுக்கு கோபம் வராது. ஆனால் நாமும் நம் முன்னோர்களும் ஒரு கட்டுப்பாட்டோடு ஒரு சத்தியத்தை கடைபிடித்து வருகையில் அதை மீறும் போது சத்தியத்தை மீறிய தோஷம் என்னும் குற்றச்செயல் நம்மை பாதிக்கிறது. அவ்வளவு தானே தவிர தெய்வங்கள் கோபம் கொண்டு சபித்து விட்டார்கள் என்பது போன்ற அர்த்தத்தை நாம் கொள்வதற்கில்லை.
ஏனென்றால் தெய்வங்கள் பொறுமை குணம் கொண்டவர்கள். தயை உடையவர்கள். மன்னித்து அருள் செய்யக் கூடியவர்கள்,
ஆயினும் நம்முடையதான கட்டுப்பாடு, நிபந்தனை, தர்மச்செயல் இவற்றை மீறுகையில் அந்த தர்மத்தை மீறிய அலட்சிய பாவனையே நம்மை தண்டிக்கிறது.
நாம் அக்னியில் விரலை வைத்தால் அக்னிக்கு கோபம் வந்து நம்மைச் சுட்டு விட்டது என்று கூற இயலுமா? நாம் அதில் விரலை வைக்காமல் அக்னிக்கு அளிக்க வேண்டிய கௌரவத்தோடு இருக்க வேண்டும். அதே போல் நாம் அதர்ம காரியம் செய்து விட்டு அதர்மத்தின் பலன் வரக்கூடாது என்றால் அது சரியில்லையல்லவா? அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அதேநேரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பரிஷ்காரம், ஒரு தீர்வு இருக்கும். அதனை புரிந்து கொள்ளவேண்டும்.
அடுத்த செய்தி என்னவென்றால் நமக்கு தனம் இல்லை என்று சொல்லி பரிகாரத்தை செய்யாமல் காலம் கழிப்பதில் பலனில்லை. நம்மால் முடிந்ததைச் செய்ய முன்வர வேண்டும். புதிய ரதத்தை தயார் செய்வதோ, இருக்கும் ரதத்தை பழுது பார்ப்பதோ இரண்டுமே அவரால் முடியாத போது மஹாஸ்வாமிகள் என்ன பரிகாரம் கூறினார்? எங்காவது ரத உற்சவம் நடந்தால் அங்கு சென்று வடம் பிடிக்கச் சொன்னார். அதனால் நமக்கு பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் சரீரத்தால் சேவை செய்ய வேண்டும். அதன் மூலம் நம்மிடம் இருக்கும் சில தோஷங்கள் விலகி நம் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது இந்த நிகழ்வு மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம்.
இது போன்ற வாழ்க்கை நிகழ்வுகளை நாம் ஆராய்ந்தறிய வேண்டும். மகிமை பொருந்திய குருமார்களை வழிபடுவது சிறந்த விஷயம். அதோடு அவர் அளிக்கும் செய்திகளையும் நாம் கவனிக்க முடிந்தால் நம் வாழ்வில் தர்ம ஸ்பூர்த்தி வளரும். நம் மூதாதையர், நம் தெய்வங்கள் இவரகளைப் பற்றிய உண்மைகள் நமக்குத் தெரியவரும்.
பார்த்தீர்களா? ஒரு கோவில் ரதோற்சவம் செய்வதை நிறுத்தியதால் எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தது! நம் பூர்வீகர்களையும் குல தர்மத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் நாம் அறிய வேண்டும்.
நம் ஸ்வதர்மத்தையும், இதுநாள்வரை நம் தாத்தாவும் தந்தையும் செய்து வந்த தர்ம செயல்களையும் செய்யாமல், வெறும் பேராசையால் வேற்று தர்மங்களை பின்பற்றுபவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கசப்பான அனுபவங்கள் வந்து வாய்க்கின்றன. இது இன்னுமொரு பாடம்
ஏனென்றால், “நம் மூதாதையர்கள் சிறந்தவர்கள். அவர்கள் தர்மத்தை கடைபிடித்து உய்வடைந்தார்கள்” என்று நம் பூர்விகர்கள் பற்றிய கௌரவமும் மதிப்பும் அவர்கள் மேல் நமக்கு இருக்குமானால், அவர்கள் பின்பற்றிய தர்மத்தில் நாமும் நிலைநிற்போம். அதன் மூலம் நாமும் பயனடைவோம். நம் சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும்.
இத்தனை உயர்ந்த செய்திகளை ஒரு லீலையால் காட்டியருளிய மஹாஸ்வாமிகளின் பாத பத்மங்களுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



