“ மழை பெய்ய ஒரு பதிகம்”
“மேக ராகக் குறிஞ்சி“( திருப்பராய்த்துறை ஸ்வாமி பதிகம்) 
(எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்த ஒரு பிரமுகருக்கு பெரியவா சொன்ன மேக ராகக் குறிஞ்சி தேவாரம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம். நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர்.
சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம் செய்யக் காஞ்சிபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில் வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.
“என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்” என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.
பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.
“அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில்,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு. ஓதுவார்களுக்குத் தெரியும் அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும். ஜனங்கள் சௌக்கியமா இருப்பா….”
பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.
தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக் கொண்டுவரலாமே?
பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.
திருப்பராய்த்துறை
பண் – மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
| 1448 | நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறுசேர்சடை அண்ணலே. |
1.135.1 |
| 1449 | கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை வந்தபூம்புனல் வைத்தவர் பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை அந்தமில்ல அடிகளே. |
1.135.2 |
| 1450 | வேதர்வேதமெல் லாமுறையால்விரித் தோதநின்ற ஒருவனார் பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை ஆதியாய அடிகளே. |
1.135.3 |
| 1451 | தோலுந்தம்மரை யாடைசுடர்விடு நூலுந்தாமணி மார்பினர் பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை ஆலநீழல் அடிகளே. |
1.135.4 |
| 1452 | விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல் இரவில்நின்றெரி யாடுவர் பரவினாரவர் வேதம்பராய்த்துறை அரவமார்த்த அடிகளே. |
1.135.5 |
| 1453 | மறையுமோதுவர் மான்மறிக்கையினர் கறைகொள்கண்ட முடையவர் பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை அறையநின்ற அடிகளே. |
1.135.6 |
| 1454 | விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர் சடையிற்கங்கை தரித்தவர் படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை அடையநின்ற அடிகளே. |
1.135.7 |
| 1455 | தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை நெருக்கினார்விர லொன்றினால் பருக்கினாரவர் போலும்பராய்த்துறை அருக்கன்றன்னை அடிகளே. |
1.135.8 |
| 1456 | நாற்றமாமல ரானொடுமாலுமாய்த் தோற்றமும் மறியாதவர் பாற்றினார்வினை யானபராய்த்துறை ஆற்றல்மிக்க அடிகளே. |
1.135.9 |
| 1457 | திருவிலிச்சில தேரமண்ஆதர்கள் உருவிலாவுரை கொள்ளேலும் பருவிலாலெயில் எய்துபராய்த்துறை மருவினான்றனை வாழ்த்துமே. |
1.135.10 |
| 1458 | செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் செல்வர்மேற் சிதையாதன செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ் செல்வமாமிவை செப்பவே. |
1.135.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் – பொன்மயிலாம்பிகையம்மை



