
மகாபாரதத்தில் தர்மபுத்திரனிடம் யக்ஷன் நூறுக்கு மேல் கேள்வி கேட்கிறார்.
“பூமியை விட சிறப்பானது எது? ஆகாயத்தை விட உன்னதமானது எது? வாயுவை விட வேகமானது எது? புல்லைவிட அற்பமானது எது?”
இந்த கேள்விகள் மிக ஆழமான சிந்தனைகயைக் கொண்டவையாக உள்ளன. அதற்கு மிகச் சிறந்த சொற்களால் பதிலளித்தான் தர்மபுத்திரன்.
“மாதா குரு தரா பூமே: I பிதா சோச்சதரஸ்சகாத் I மன: சீக்ர தரம் வாயோ: I சிந்தா பஹு தரா த்ருணாத் II”
அதாவது, “பெற்ற தாய் பூமியை விடச் சிறந்தவள். தந்தை ஆகாயத்தை விட உன்னதமானவர்”.
முதலில் இவ்விரண்டையும் பார்ப்போம். அம்மா பூமியை விடச் சிறந்தவள் என்கிறார். பூமி எவ்வாறு நம்மை சகித்துக் கொள்கிறதோ, நமக்கு அன்னமும் நீரும் அளித்து போஷித்து வளர்க்கிறதோ, தாயும் அதேபோல் சகிப்புத்தன்மையோடு பெற்ற பிள்ளைகளை போஷித்து வளர்கிறாள்.
ஆகாயம் மிகவும் உன்னதமானது. நாம் எத்தனை உயர்ந்தாலும் இன்னும் உயரச் சொல்லி உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கிறது ஆகாயம். தந்தைகூட அதேவிதமாக நம்மை வளர்ச்சி அடையச் செய்கிறார்.
இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். பூமி ஆதாரம். ஆகாயம் அவகாசம். ஒரு மரத்தை கவனித்தால் இதனை நாம் புரிந்து கொள்ள முடியும். மரம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது பூமி. அது எத்தனை உயரமாக வளர்ந்தாலும் இன்னும் வளர அவகாசம் அளிப்பது ஆகாயம். எத்தனை உயரமாக வளரலாம் என்றால், அதற்கு வானமே எல்லை. அதனால் அவகாசத்திற்கு ஆகாயம். ஆதாரத்திற்கு பூமி. அதே போல் நம் வாழ்விலும் தாய் நமக்கு ஆதாரமாகவும், தந்தை நம்மை உயரச் செய்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்து உற்சாகப்படுத்துபவராகவும் இருக்கிறார்.
இத்தகு அற்புதமான கருத்துக்களை பல யுகங்களுக்கு முன்பே பாரதீய மகரிஷிகள் அளித்துள்ளார்கள். இதன் மூலம் பாரதீய விஞ்ஞானமும் கலாச்சாரமும் எத்தனை சிறந்தது என்பதை அறியமுடிகிறது. இதே கருத்து வேத மந்திரங்களிலும் நமக்கு காணக் கிடைக்கிறது. வேதம் கூறிய சொற்களை அனுபவத்தில் ஆழமாக கவனித்து தர்மபுத்திரன் யக்ஷனுக்கு பதிலாக அளித்துள்ளான்.
அதேபோல், அதி வேகமாகச் செல்லக்கூடியது எது என்றால் மனம். காற்றை விட வேகமானது மனம் என்று பதிலளிக்கிறார். அடுத்து அற்பமானது எது என்பதற்கு கவலை என்று பதிலளிக்கிறார்.
மனது மகா வேகமாகப் பயணிக்கக் கூடியது. அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். குதிரை வேகமாக ஓடக்கூடியது. அதனை அடக்கினால் அழகாக ரதத்தை ஓட்ட இயலும். இலக்கை எட்ட இயலும். அதேபோல் அதி வேகத்தோடு கூடிய மனதினைக் கூட நாம் அடக்க முடிந்தால் வாழ்வின் இலக்கை அடைய இயலும். வாழ்க்கைப் பயணத்தை முறைப்படுத்தி நடத்த இயலும். மனது தீவிரமான வேகம் கொண்டது என்று சொல்வதன் பொருள் என்னவென்றால், “அதனை கட்டுப்படுத்தி சாதனைக்கு ஏதுவாக திருப்பிக் கொள். அதன் மூலம் நீ எதை வேண்டுமானாலும் பெற இயலும்” என்ற கருத்தை எடுத்துச் சொல்லத்தான்.
அடுத்து, அற்பமானது கவலை. எப்போதும் நமக்கு தேவையில்லாத விஷயத்தை எதிர்கொள்ளும்போது புல்லைப்போல் தூக்கி எறிந்து விட்டேன் என்று கூறுவோம். அவ்வாறு எடுத்து எறிந்து விட வேண்டிய விஷயம் என்ன என்று கேட்டால் திகில். திகில், பயம், கவலை போன்றவை புல்லைவிட அற்பத்தன்மை கொண்டவை. எப்போதும் திகிலடையக்கூடாது.
கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பவன் அற்பன் ஆகிறான். கவலையை அருகில் வர விடக்கூடாது.

இந்த நான்கு பதில்களில் அற்புதமான அம்சங்களைத் தெரிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கு தாய் தந்தையரின் முக்கியத்துவத்தை முதலில் கூறியுள்ளான். பூமியையும் ஆகாயத்தையும் தாயாகவும் தந்தையாகவும் பார்ப்பது ஒரு புறம் என்றால் நம் தாய் தந்தையரை பூமியாகவும் ஆகாயமாகவும் பார்ப்பதென்பது மறுபுறம். இரண்டும் முக்கியமான அம்சங்களே!
பூமி ஒரு மரத்திற்கு உயிர் கொடுத்து வளர்த்து போஷிக்கிறது. தாயும் அதே வேலையைத்தான் செய்கிறாள். ஆகாயம் அளிக்கும் ஜலத்தாலும் சக்தியாலும்தான் பூமியும் நமக்குத் தேவையானதை விளைவித்து அளிக்கிறது. அதேபோல் தந்தையார் கொடுத்த நிலையைக் கொண்டே தாய் நம்மை போஷிக்கிறாள். தந்தையும் ஆகாயத்தைப் போல் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறார்.
ஏனென்றால் பூமி தனியாக விருட்சத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியாது. பூமி மண்ணையும் ஜலத்தையும் ஆகாரத்தையும் பிராணனையும் அளிக்கிறது. ஆகாயத்தில் இருந்து கிடைக்கும் மழையும் ஒளியும் விருட்சத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான தேவைகள். விருட்சத்தின் வளர்ச்சிக்கு ஆகாயமும் பூமியும் எத்தனை அவசியமோ அதேபோல் ஒரு ஜீவனின் வளர்ச்சிக்கு தாயும் தந்தையும் அத்தனை முக்கியமானவர்கள்.
இங்கு தாய் தந்தையரின் ஸ்தானம் எப்படிப்பட்டது?
அவர்களுடையது குருமார்களின் ஸ்தானம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆச்சாரிய ஸ்தானம் பெற்றோருடையது.
“நாஸ்தி மாத்ரு சமோ குரு: I” என்று மகாபாரதம் அனுசாசனீக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. “தாய்க்கு நிகரான குரு இல்லை!” என்று ஸ்பஷ்டமாக காணப்படுகிறது.
வேதம்கூட, “நல்ல தாய், தந்தை, குரு மூவரையும் அடைந்தவன் எந்த ஒரு ஞானத்தையும் சரியாக அறிந்து கொண்டு வாழ்வில் உயர்வடைவான்” என்று கூறியுள்ளது.
அதனால் தாய் தந்தையரின் மானசீக ஸ்திதியும், அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையும் உத்தமமான மனிதனை உருவாக்குகின்றன. அதனால் பெற்றோர், தான் பெற்ற குழந்தைகளுக்கு உணவும் உடையும் அளித்து, பணம் சம்பாதித்து வசதி ஏற்படுத்தித் தருவது மட்டுமே போதாது. அவர்களை நல்லவிதமாக வளர்த்து சீர்படுத்துவது பெற்றோரின் பிரதானமான கடமை. இதே விஷயத்தை நமக்கு இதிகாசங்களும் புராணங்களும் காவியங்களும் பலப்பல இடங்களில் போதிக்கின்றன.
முக்கியமாக தற்காலத்தில் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கித் தருவது, அவர்கள் செய்யச் சொன்னதை எல்லாம் செய்வது, அவர்களை செல்லம் கொடுத்து வளர்த்து அன்பு செலுத்துவது மட்டுமே முக்கியம் என்று எண்ணும் பெற்றோர்களே அதிகம். செல்லமாக அன்பு செலுத்தி வளர்ப்பது தேவைதான் என்றாலும் செல்லம் கொடுப்பதால் நிறைய குறைகள் ஏற்படுகின்றன. எனவே தேவையான போது மனதில் உள்ள அன்பை மனதிலேயே அடக்கிக் கொண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் கொஞ்சமாவது கடினத்தை காட்டித் தீர வேண்டும். அந்தக் கடினமும் தீவிரமான கடினமாக இருக்கக் கூடாது. அவர்களை தர்ம வழியில் நடத்துவிப்பதற்கு எத்தனை தேவையோ அந்த அளவு கோபத்தைக் காட்டினால் போதும் என்று கூட நம் சாஸ்திரங்கள் கூறியுள்ளன. நம் முன்னோர்களும் வழிகாட்டியுள்ளனர்.
குழந்தைகளை நல்லவிதமாக வளர்த்தெடுப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோர் உத்தம குணங்கள் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தம்மிடமுள்ள சிறந்த குணங்களை பிள்ளைகளிடமும் கொண்டு வரவேண்டும் என்று வேதம் முதலான சாஸ்திரங்கள் போதிக்கின்றன. அவற்றுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



