
வேதமாதா எப்போதும் உழைப்பைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறாள். அக்கிரமமாக சம்பாதிப்பது எத்தனை தோஷமோ உழைக்காமல் சம்பாதிப்பது கூட அதே அளவு தவறானது.
கஷ்டப்படாமல் சுகப்பட வேண்டும் என்ற ஆசை மனிதனிடம் வளர்வதால் அவன் சோம்பேறியாகிறான்.
சுகத்தின் மதிப்பு சிரமப்பட்டால்தான் தெரியும். எந்த கஷ்டமும் இல்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால்தான் அநீதி என்னும் ஊழல் நோய் பெருகி தனி மனிதனுக்கும் தேசத்துக்கும் கேடு விளைவிக்கிறது. கஷ்டமே படாமல் வேறு ஏதாவது மார்க்கத்தின் மூலம் பொருளீட்ட வேண்டும் என்று சிலர் லாட்டரி சீட்டுகளை நம்புவார்கள். வேறு சிலர் பிறரை வஞ்சிப்பதற்குத் துணிவார்கள். அநீதியை அடைக்கலம் புகுவார்கள். பொதுமக்களின் சொத்தை கொள்ளை அடிப்பதற்கு முன் வருவார்கள்.
உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் குணம் அக்கிரம சம்பாத்தியத்திற்கு வழிவகுத்து தனி மனித நடத்தையில் நேர்மையை அழிக்கிறது. நேர்மையற்ற நடத்தை ஆத்ம சக்தியை நலியச் செய்கிறது. அதன் பலனாக எங்கு பார்த்தாலும் அமைதியின்மையும் வேதனையும் நிறைகின்றன.
அதனால்தான் வேதம் உழைப்பின் உயர்வைப் பற்றி சிறப்பான வாக்கியங்களை கூறுகிறது.
“தே மனுஷ்யா: க்ருஸிம் ச ஸஸ்யம் ச உபஜீவந்தி” என்பது அதர்வண வேத வசனம்.
“மனிதர்கள் உழைப்பின் மூலம் கிடைத்த பலனால் வாழ்க்கை நடத்த வேண்டும்”. உழைப்பு, வெற்றி இவ்விரண்டும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை.
அதனால்தான் “உத்தமம் ஸ்வார்ஜிதம் வித்தம் மத்யமம் பித்ரார்ஜிதம்” என்கின்றன சுபாஷிதங்கள். “சுய உழைப்பினால் சம்பாதித்த செல்வமே உத்தமமானது. மூதாதையர் வழி வந்த செல்வம் மத்தியமம். மீதி உள்ளவை பிறர் சொத்து” என்றார்கள்.
பிறருக்கு உடைமையானவற்றின் மேல் ஆசை வைக்கக்கூடாது.
வரதட்சணை, லஞ்சம் எல்லாம் பிறர் சொத்துக்கு ஆசைப்படுவதின் கீழ் வரும். அவற்றைப் பெறுவது “துஷ்ட சம்பாத்யம்” எனப்படும். ஏனென்றால் அவை உழைப்பில்லாமல் வருபவை.
“அக்ஷைரமா தீவ்ய: க்ருஷிமத் க்ருஷச்ய” என்பது ருக் வேத வசனம்.
“சூதாட்டத்தில் பந்தயக் காய்களை உருட்டி விளையாடாதே! உன் வாழ்க்கைக்காக உழைத்து சம்பாதி”. சூதாட்டத்தால் வரும் செல்வம் நீசமான வருமானம் என்று இடித்துரைக்கிறது சனாதன தர்மம்.
“ஸானோ பூமிர் வர்தயத் வர்தமானா”
“உழைப்பின் மூலம் பூமி அனைத்து செல்வங்களையும் நமக்கு அளிக்கிறது. மேலும் வளர்ந்து வருகிறது” என்று வேதமாதா மீண்டும் மீண்டும் பலமுறை போதிக்கிறாள்.
சுறுசுறுப்பின்மையையும், சோம்பேறித்தனத்தையும் நம் கலாச்சாரம் எத்தனை இழிவாகப் பேசுகிறது என்பதை இந்த வாக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
“க்ருஷ்யைத்வா க்ஷேமாயத்வா ரய்யைத்வா போஷாயத்வா…”
“உழைப்பு மூலமாகவே நன்மை, செல்வம், வளர்ச்சி எல்லாம் கிடைக்கிறது” என்பது சுக்ல யஜுர் வேதம் கூறும் போதனை.
“அரசாளுபவர் மக்களை முயற்சியுடையவர்களாக நல்வழிப்படுத்த வேண்டும்” என்று வேத வாக்கியங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
“நோ ராஜானி க்ருஷிம் தனோது”
“மக்கள் எளிதாக சுகப்படும்படியான மார்க்கங்களை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது”. அதிர்ஷ்ட வியாபாரங்களை ஊக்குவிக்கக்கூடாது. இது போன்ற எத்தனையோ வாக்கியங்கள் இதற்கு உதாரணம்.
ஸ்வதர்மத்தை கடைப்பிடிப்பதிலும் கடமையைச் செய்வதிலும் சுறுசுறுப்பின்மைக்கோ, சோம்பேறித்தனத்திற்கோ இடமளிக்கக்கூடாது. இந்திரியங்களையும் புத்தியையும் சரியாக உபயோகிக்க வேண்டும். அதுவும் தார்மீகமான வழியில் இருக்க வேண்டும்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு இறைவன் அளித்த கருவிகளுள் முதன்மையானது உடல். “சரீரமாத்யம் கலு தர்ம சாதனம்” என்ற கூற்றுக்கு இதுதான் பொருள். சிரமப்பட்டு உழைக்காதவனுக்கு சுகப்படும் தகுதி கிடையாது. அக்கிரமமான, எளிதான வழிகளில் சேமித்த பொருளுக்கு நிலைத்தன்மையோ வலிமையோ இருக்காது.
நம்மைச் சுற்றிலும் உள்ள இயற்கையில் எத்தனையோ செல்வங்கள் மறைந்துள்ளன. உழைத்து அவற்றைப் பெற வேண்டும். அந்த முயற்சியில் இயற்கையிலுள்ள சாஸ்வதமான, தீர்க்க காலப் பலன்களுக்கு கேடு நேராதபடி கவனமாக இருக்க வேண்டும். மனித வாழ்க்கைக்கு வெற்றியளிப்பது உழைப்பு மட்டுமே.
“க்ருஷிதோ நாஸ்தி துர்பிக்ஷம்” என்ற முன்னோர் வாக்கினை மறக்கலாகாது. இந்த சனாதன நாதத்தை அமல்படுத்தும் நாடுகள் அற்புதமான முன்னேற்றத்தை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



