“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”
( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 
(“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..”-சொன்ன பெரியவாளின் அனுக்ரஹம்) (தெரிந்த சம்பவம்-ஆனால் இது புது நடை)
தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு தடவை பிரதோஷம் மாமா, மகானின் முன் நிற்கிறார். முகத்தில் சோகம் அப்பி இருந்தது. பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்….
“என்ன விஷயம்? ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே….”என்றார்.
“ஒண்ணுமில்லே…என்னான்னு சொல்ல முடியல்லே.. நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்… பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும். அதேசமயம் உத்தியோகத்தையும் கவனிக்கணும். எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில் மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது… எத்தை வச்சுக்கிறது. புரியவில்லையே..” என்று மாமா அங்கலாய்க்கிறார்.
“லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு…. அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும். பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு… முதலில் கடமையைச் செய்…பிறகு கடவுளை நினை.. அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு இருக்கியே . உனக்கென்ன கஷ்டம்…?”
“ஒரு ஆபீசர் இருக்கான்…எனக்கு மேலதிகாரி…”
“ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?”
“என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே.. அதைத்தான் சொல்ல வந்தேன்.
“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”
என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம் விளங்கவில்லை.
அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது, அந்த ஆபீசர் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.
“எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை செய்திருக்கிறேள்.
“நான் என்னடா பண்ணேன்?”
“இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்… எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்..”
மகான் பலமாகச் சிரித்தபடி…
“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..” இது ஆனந்த சிரிப்பு.
“பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து மாத்திட்டேள்” என்று பிரதோஷம் மாமா மீண்டும் ஒரு முறை சொல்கிறார்.
“நான் எங்கேடா மாத்தினேன்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.
அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார் என்பதே உண்மை.
பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.
“பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும். அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும். ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்… அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.



