
பெண்கள் மாதவிடாயின் போது விலக வேண்டும் என்பது தொடர்பாக சாஸ்திரங்கள் கூறியுள்ள சில கருத்துக்களை நேற்று பார்த்தோம். இது தற்காலத்தில் பிரத்தியேகமாக கடைபிடித்துத் தீர வேண்டும் என்று கூற வேண்டி வருகிறதே தவிர முற்காலத்தில் இயல்பாகவே அவற்றைக் கடைபிடித்தார்கள்.
மனிதன் காலையில் எழுந்தவுடன் பல் தேய்க்க வேண்டும், குளிக்க வேண்டும், சாப்பிட்டபின் கைகழுவ வேண்டும் என்று கூற வேண்டுமா என்ன? அவற்றை இயல்பாகவே எல்லோரும் கடைபிடிக்கிறோம் அல்லவா? அதே போல் ஒரு காலத்தில் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் தாமாகவே தூரமாக விலகி இருந்தார்கள். ஆண்கள் வீட்டு வேலை செய்தார்கள். அதற்காக பெண்களை அவமானப்படுத்திவிட்டதாகப் பொருள் அல்ல! அது ஒரு ஆச்சாரமான நல்ல பழக்கம். மேலும் அது பெண்களை கௌரவிக்கும் செயல்.
சமீபத்தில் அமெரிக்காவின் பால்டிமோர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மேல்நாட்டு மருத்துவ நிபுணரான பெண்மணி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மாதவிலக்கிற்கு ஆளான அந்த நான்கு நாட்களும் பெண்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் அதன் மூலம் அவர்களைச் சுற்றிலும் ஏற்படக்கூடிய எதிர்மறை சக்தி அலைகள் பற்றியும் எழுதியுள்ளார். மேலும் அந்த நேரத்தில் பெண்கள் முடிந்தவரை தனியாக தூரமாக ஓய்வாக இருப்பது மிகவும் நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஞ்ஞான நிபுணர் கூறியுள்ள கருத்துக்களை எப்போதோ நம் ரிஷிகள் கண்டறிந்து கூறியுள்ளார்கள். அந்த வழிமுறைகள் ஆண்டாண்டு காலமாக நம் வாழ்க்கையின் நடைமுறையாக நம் வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அவை குடும்ப வாழ்வின் மேம்பாட்டுக்கு ரிஷிகள் விதித்த நியமங்கள் என்பதை தற்போது மறந்துவிட்டோம்.
உண்மையில் எந்த ஆச்சாரமும் இல்லாமல் இருப்பதுதான் அறியாமை! நல்ல பழக்கவழக்கங்கள் இருப்பது நாகரீகமான, அறிவுப்பூர்வமான வாழ்க்கை என்ற குறைந்தபட்ச இங்கித ஞானத்தைக் கூட நாம் மறந்து போய்விட்டோம்.
பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் குறைந்தபட்சம் அந்த நான்கு நாட்கள் கூட ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவது என்பது மனிதத் தன்மையற்ற செயல். அந்த சமயத்தில் பெண்களுக்கு நல்ல ஓய்வு தேவை.
மேலும் இது தொடர்பான பிரம்மஹத்தி பாவம் பற்றிய ஒரு கதையை நேற்று பார்த்தோம். அந்த கதை யஜுர் வேதத்தில் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும் தேவீ பாகவதத்திலும் கூட காணப்படுகிறது.
பலவித மந்திர வழிமுறைகளிலும் சாஸ்திர வழிமுறைகளிலும் கூறப்பட்டுள்ள நியமங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். இறைவனை வழிபடும் போதும் பண்டிகைகளின் போதும் இறைவன் தொடர்பான சாதனைகள் செய்யும்போதும் மாதவிலக்கு இருந்தால் பங்கு பெறக் கூடாது என்ற கடுமையான நியமம் நமக்கு உள்ளது. இன்றியமையாத இதனை இயல்பாக, சகஜமாக கடைபிடிக்க வேண்டும்.
ஆனால் சமீபத்தில் புதுப்புது ஆன்மிக அமைப்புகள் வந்து குதித்துள்ளன. அவர்கள், “எங்கள் சத்சங்கத்தில் அது போன்ற தடைகள் எதுவும் கிடையாது!” என்று கூறிக் கொள்வதைப் பார்க்கிறோம். அவ்வாறு சொல்வதற்கு அவர்களுக்கு என்ன அதிகாரம்? உண்மையில் சத்சங்கம் செய்து தெய்வத்தை தியானிக்க வேண்டும் என்ற நியமத்தை யார் ஏற்படுத்தினார்கள்? எந்த சாஸ்திரம் தெய்வத்தை தியானிக்கும்படி கூறியதோ, எந்த சாஸ்திரம் பகவானின் மந்திரத்தை ஜபம் செய்யும்படியும் வழிபாடு செய்யும்படியும் கூறியுள்ளதோ அதே சாஸ்திரம் இந்த நியமத்தையும் கூட கூறியுள்ளது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்னானம் செய்யவேண்டும், சுத்தமான ஆடை அணிய வேண்டும் போன்றவை அனைத்துமே தெய்வீக சக்தியை வரவேற்பதற்கு தகுதியான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே! அதனால் சுத்தமாகத் துடைத்து கோலமிட்டபின் அந்த இடத்தில் தெய்வத்தை வைத்து பூஜை செய்கிறோம். இஷ்டம் வந்தாற்போல் எங்கு வேண்டுமானாலும் வைக்க மாட்டோமல்லவா?
சிலர் வேறொரு விதமாக விதண்டாவாதம் செய்வார்கள். “இது போன்ற தோஷங்களெல்லாம் உடலின் இயற்கையான இயல்பு அல்லவா? அப்படியிருக்கையில் தனியாக எதற்கு விலக வேண்டும்?” என்பார்கள். மலம், சிறுநீர் கழிப்பது கூட உடலின் சகஜமான இயல்பே! அதற்காக அவற்றுக்காக ஒதுக்கியுள்ள கழிவறையில் பகவானின் படங்களை வைத்து வழிபட மாட்டோமல்லவா? அதனதன் நியமம் அததற்கு உண்டு. எனவே மாதவிலக்கில் தனியாக ஒதுங்காதிருப்பது தவறு.
இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தைப் பிரித்துக் கொடுத்த அந்த நால்வரில் விருட்சம், பூமி, நீர் இம்மூன்றும் தெய்வங்களாகவே பூஜையை ஏற்கின்றன. அதேபோல் பெண்ணும் பூஜிக்கத் தகுந்தவளாக கௌரவத்தை ஏற்கிறாள் என்பதே இதன் உத்தேசம்!
மற்றுமொரு ஒரு ரகசியமான அம்சம் என்னவென்றால் பெண் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு ஏதாவது இருந்தால் மாதவிலக்கு ஆன அந்த நான்கு நாட்களும் விலகியிருந்த பின் செய்யும் ஸ்நானம் மூலம் அனைத்து தோஷங்களும் விலகுகின்றன. இது மிக வியப்பான விஷயம்!
பெண் எப்போதும் பவித்திரமானவள், மங்களமானவள் என்று கூறுவதற்குக் காரணம் அவளுக்கு இந்திரன் இவ்விதமான சிறப்பு தகுதிகள் அருளியுள்ளான் என்பதே! தேவதைகளுள் ஒருவரான இந்திரன் இவ்வாறு நால்வருக்கும் தோஷத்தைப் பிரித்துக் கொடுத்தான் என்பதை மற்றொரு விதத்தில் அறிவியல் பூர்வமாக விளக்க முடியும்.
சூரியனிடமிருந்து பூமியின் மேல் விழும் கிரணங்களில் பலவித மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த ஒளிச் சக்தி பூமியை நோக்கி வரும் போது சில விபரீதமான சக்திகளை விலக்கிவிட்டு வருகிறது. வெளிச்சம் இருட்டை விலக்குவது போல சூரிய கிரணங்களில் இருக்கும் தெய்வீக சக்திகள் சில துஷ்ட சக்திகளை அழிக்கின்றன. அவ்வாறு அழிக்கப்படும் துஷ்ட சக்திகளின் தாக்கம் நான்கு பேரின் மீது படுகிறது. அவை பூமி, நீர், விருட்சம், பெண் என்பவை. அத்தகைய தாக்கத்தின் காரணமாக அவர்களில் தோஷம் ஏற்படுகிறது.
அத்தகைய குறையுள்ள காலத்திலோ இடத்திலோ தெய்வ பூஜைகளை செய்ய கூடாது. உதாரணத்திற்கு, உவர் நிலங்கள் பூமிக்கு தொடர்புடைய மாதவிலக்கு தோஷம் உள்ளவை. அப்படிப்பட்ட இடங்களில் யக்ஞங்கள் செய்யக்கூடாது என்று விதித்துள்ளார்கள். அதேபோல் நுரையோடு உள்ள நீரை ஆச்சமனம் செய்வதற்கோ தெய்வம் தொடர்பான விஷயங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது. இன்னும், மரங்களில் பிசின் உள்ள பாகத்தை யாகத்திற்கோ தெய்வத்தோடு தொடர்புடைய காரியங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது. அதேபோல் ஸ்திரீ ‘ரஜோதோஷம்’ எனப்படும் மாதவிலக்கு ஏற்பட்ட போது தெய்வ, பித்ரு காரியங்களிலிருந்து தூரமாக விலகி இருக்க வேண்டும்.
அதே போல் அந்த நேரத்தில் தியானம் மந்திர ஜபம் செய்தால் தெய்வங்கள் அருகில் கூட வர மாட்டார்கள். அதோடுகூட மாதவிலக்கு விதிக்கப்பட்ட சமயத்தில் தெய்வத்தை வரவேற்ற தோஷம் கூட ஏற்பட்டு விடும். இதை முக்கியமாக அறிந்து கொள்ளவேண்டும்.
தெய்வத்தின் மீது நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கு எந்த விதியும் இல்லை. ஆனால் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு தெய்வ அருளைப் பெறவேண்டும் என்று சாதனை செய்பவர்கள் மட்டும் இந்த நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது? யார் சொன்னார்கள்? என்று குதர்க்கமாக கேட்பவர்கள் இருக்கிறார்கள். இது குறித்து ஆகம சாஸ்திரங்களில் முழுவதும் காணப்படுகிறது. தர்ம சாஸ்திரங்களில் பல இடங்களில் உள்ளது. பதினெட்டு புராணங்களிலும் கூறியுள்ளார்கள். வேதங்களிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. யோக விஞ்ஞானத்தில் கூட இது குறித்துக் கூறியுள்ளார்கள்.
எங்கே இருக்கிறது? என்று கேட்பவர்களிடம் காண்பிப்பதற்கு ஏராளமான நூல்கள் உள்ளன. கேள்வி கேட்பது எளிது. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் பெரியவர்கள் கூறியுள்ள ‘சதாச்சாரம்’ என்னும் நல்ல பழக்க வழக்கங்கள் ருஷிகள் தரிசித்த இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட ஞானத்தை ஆதாரமாகக் கொண்டவை.
ஆனால் பெண்ணிற்கு விதிக்கப்பட்டன நற்பழக்கங்களில் இது ஒன்று மட்டுமே அல்ல! இன்னும் நிறைய கூறியுள்ளார்கள். அதே போல் ஆண்களுக்கும் நிறைய நற்பழக்க நியமங்கள் கூறப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவதோ எதை வேண்டுமானாலும் அருந்துவதோ தோஷம்!
உதாரணத்திற்கு, ஒருவன் மது அருந்தினால் அதன் மூலம் பலவித பிசாசு சக்திகள் அவன் உடலின் மீது ஆசை கொண்டு அவனை பீடிக்கின்றன என்று கூறியுள்ளார்கள். அத்தகைய துஷ்ட சக்திகள் உடலில் பிரவேசித்தால் அந்த உடலில் உள்ள ஏழு தாதுக்களையும் நிர்வீரியம் செய்து அவனை எதற்கும் பயனற்றவனாகச் செய்துவிடும்.

தின்னக்கூடாதவற்றைத் தின்பதும் அருந்தக் கூடாதவற்றை அருந்துவதும் கூட தோஷங்களே என்று ஆண்களுக்கு நியமங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். அவரவர் உடல்நிலையைப் பொறுத்து அனைத்து மானுட இனத்திற்கும் நியமங்கள் உள்ளன.
எனவே ஆண்களும் நற்பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கின்போது தூரமாக விலகியிருக்க வேண்டும் என்று பெண்களுக்கு நியமம் இருக்கும் போது அது போல் தூரமாக ஓய்வாக அவர்களை இருக்க அனுமதிக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கான நியமம். அதுபோன்ற நேரத்தில் ஆண்கள் பெண்ணிற்குத் தேவையான உணவு நீர் போன்றவற்றை தனியாக ஏற்பாடு செய்து அவளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
இவையனைத்தும் நமக்கு சாஸ்திரம் கூறியுள்ள அற்புதமான அம்சங்கள். எப்போதும் சரி, ‘சதாச்சாரம்’ இருக்கும் இடத்தில்தான் தெய்வ சக்தி இருக்கும். சதாச்சாரத்தை மறந்துவிட்டு ‘துராச்சாரம்’ என்னும் கெட்ட பழக்க வழக்கங்களோடு ஆன்மீக சாதனை செய்தால் அவை நற்பலனை அளிக்காததோடு விபரீதமான எதிர்மறை பலன்களை அளித்துவிடும். இதனை அறிந்து கொள்வோம்.
“பக்திமத் கல்ப லதிகா பசுபாஸ விமோசிநீ
சம்ஹ்ருதாசேஷ பாஷண்டா சதாசார ப்ரவர்திகா !!” என்று ஜகன்மாதாவை வணங்கி வழிபடுவோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



