
யஜுர்வேதத்தோடு தொடர்புடைய ‘சிக்ஷாவலி’ யில் “ஜிஹ்வா மே மதுமத்தமா !” என்ற மந்திரம் காணப்படுகிறது. “என் நாக்கு அதிக இனிமை கொண்டதாக ஆகட்டும்!” என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
இது சிறந்த ரிஷி வாக்கியமாக உள்ளது. நாக்கு இனிப்பாக ஆவது என்றால் என்ன? நம்மிடம் யாராவது வந்து நல்ல செய்தியைத் தெரிவித்தால் அவருடைய வாயில் சர்க்கரை போடவேண்டும் என்போம். இதனைக் கொண்டு இவ்வாறு கூறும் பழக்கம் வேத கலாச்சாரத்தில் இருந்து வந்துள்ளது என்பதை அறிகிறோம். சுப வார்த்தைக்கும் நாவை இனிப்பாக்குவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.
“என் நாவு எப்போதும் இனிப்பாக இருக்கட்டும்!” என்றால் “என் நாவு எப்போதும் நல்ல சொற்களையே பேச வேண்டும்” என்பது பொருள். நல்ல சொற்கள் என்றால் என்ன?
ஐந்து நியமங்களைக் கடைபிடித்தால் நாவிற்கு சக்தி வருகிறது. உண்மை பேசுவது என்பது நாவின் முதல் நியமம். இரண்டாவது, பிரியமாகப் பேசுவது. நல்லதையே பேசினாலும் பிறர் மனதை துன்புறுத்தாமல் பேசுவது ஒரு சிறந்த கலை.
மூன்றாவது இதமாகப் பேசுவது. சிலர் நல்ல சொற்களைப் பேசுவார்களே தவிர மென்மையாகப் பேச மாட்டார்கள். “நமக்கு என்ன வந்தது? ஏதோ நான்கு நல்ல வார்த்தைகளைப் பேசிவிட்டு வந்து விடுவோம்!” என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் பிறரிடம் மென்மையாகப் பேசுவதும் நல்ல பேச்சின் கீழ்வரும்.
இனி, நான்காவது நிரந்தரம் நாவில் இறைநாமம் இருப்பது. இது மிக மிக முக்கியம். யாருடைய நாவில் நிரந்தரம் பகவான் நாமம் இருக்குமோ அவருடைய நாவு எப்போதும் இனிப்பாக இருக்கும்.
பகவந்நாமம் மிக மதுரமானது என்பதை அதனை உணர்ந்தவர்களே அறிவார்கள். உண்மையில் அவற்றின்மீது ருசி இல்லாமல் உலகியல் விஷயங்களே ருசி என்று அலைபவர்களிடம் அதைப்பற்றி விவரித்தாலும் புரியாது.
“ஸ்ரீ ராமா! நீ நாமம் ஏமி ருசிரா! ஓ ராமா! நீ நாமம் எந்தோ ருசிரா!” என்றார் ராமதாசர். ராமநாமத்தின் ருசியை அறிந்தவர் அவர்.
தியாகராஜரும், “ததி நவநீத க்ஷீரமுலு ருசோ? தாசரதி தியான பஜன சுதா ரசமு ருசோ? நிஜமுக பலுகுமு மனசா!” என்று பாடியுள்ளார். “தயிரும் வெண்ணெயும் பாலும் ருசி அதிகமா? தாசரதியான ராமனின் தியானமும் பஜனையும் அளிக்கும் இனிமை ருசி அதிகமா? உண்மையைச் சொல் மனமே!” என்கிறார். தயிர் வெண்ணை பாலைவிட மதுரமானது பகவான் நாமம்.
எனவே பதார்த்தங்களின் ருசியைவிட பகவந்நாமத்தின் ருசி உயர்ந்தது. பகவந்நாமம் எத்தனை உயர்ந்ததென்றால் நாவினால் நிரந்தரம் கூறி வந்தால் அது நம்முள்ளே இருக்கும் பாவச் சேற்றினை அடியோடு நீக்கிவிடுகிறது.
சில ஔஷதங்களை நாவின் மேல் வைத்தால் போதும். நம் உடலில் உள்ள விஷங்கள், நோய்க்குக் காரணமான அம்சங்கள் அனைத்தும் முறிந்து போகும். அதேபோல் இறைநாமம் நாவின் மீது நர்த்தனம் ஆடினால் போதும். உள்ளத்தின் அடியில் இருக்கும் பாவ எண்ணங்கள் எல்லாம் நசிந்து போகும்.
“பகவந்நாமம் எப்போதும் என் நாவினால் உச்சரிக்கப்படட்டும்!” என்ற பொருள் கூட “ஜிஹ்வா மே மதுமத்தமா” என்ற வாக்கியத்திற்கு உள்ளது என்று அறிய வேண்டும்.
அதனால்தான் பெரியவர்கள் மௌனமாக இருக்கும்போது இறைவன் நாமத்தை உச்சரித்தபடி இருப்பார்கள். அப்போது நாவின் அசைவில் இறைநாமம் கலந்து மருந்தாக வேலை செய்கிறது. அது நம்மை உய்வடையச் செய்கிறது.
“ஸ்ரீநாது வர்ணின்ச்சு ஜிஹ்வ ஜிஹ்வ!” என்கிறார் மகாகவி போத்தனா. “ஸ்ரீநாதனான நாராயணனை போற்றும் நாவே நாவு!” என்கிறார்.
இறைவன் நாக்கினை அளித்ததற்குப் பலனாக, உண்மையே பேசுவது, அன்பாகப் பேசுவது, அதேபோல் பகவானின் நாமம், பகவானின் குணம் இவற்றை கீர்த்தனை செய்வது போன்றவற்றை செய்து வருவதால் தூய்மை அடைகிறோம்.
ஐந்தாவது அம்சம், சாஸ்திர சுத்தமாகப் பேசுவது. “நாஸ்லீலம் கீர்தயேத்” என்று வேதம் கூறுகிறது. “பேசக்கூடாத விஷயங்களைப் பேசக் கூடாது!” என்கிறது.
பிறரைப்பற்றி குறைவாகவோ தவறாகவோ பேசக்கூடாது. பர நிந்தையும் ஆத்ம ஸ்துதியும் கூடாது. தோஷங்கள் இல்லாமல் நாவினை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதாவது சாஸ்திர சம்மதமாகப் பேச வேண்டும்.
சாஸ்திரங்களை அத்யயனம் செய்து வந்தால் வாக்கு பண்பாடடைகிறது. அதனால்தான் கல்வியறிவு உள்ளவனின் பேச்சுக்கும் அது இல்லாதவனின் பேச்சுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறார்கள். இங்கு படிப்பு, கல்வியறிவு என்றால் சாஸ்திர அறிவு.
உத்தமமான, உயர்ந்த தர்ம சாஸ்திரங்களை குருவின் மூலம் படித்தறிந்து, பயிற்சி பெற்று, நிரந்தரம் அவற்றை உச்சரித்து வந்தால் நம் பேச்சு பண்பட்டதாக மாறுகிறது. பேசும் விதத்திலேயே ஒரு சக்தி வந்து சேருகிறது. அவ்வாறு நியமத்திற்குக் கட்டுப்பட்டு யார் பேசுகிறார்களோ அவர்களின் பேச்சுக்கு ஒரு மகிமை வருகிறது. அப்போது அவர்களின் பேச்சு வரமாகவும் அருளும். சாபமாகவும் மாறும்!
எனவே வாக்கிற்கு சக்தி இந்த ஐந்து நியமங்களால் வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்!
அவ்விதம் “நாவினை தித்திப்பு நிரம்பியதாகச் செய்து கொள்வோம்!” என்று கூறிய வேத வாக்கியத்தின் வழியே பண்பாட்டினைப் பழகுவோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



