“காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” -பெரியவா
( இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.)

நன்றி-பாலஹனுமான்.-2014-ம் ஆண்டு
ஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. காரியதரிசியும், பரிசாரகரும் (சமையல் செய்பவர்) பெரியவரிடம் வந்து தெரிவித்தனர்.
இன்று இரவுப் பொழுதை எப்படியாவது கடத்தி விடலாம். நாளைக்கு மடத்தில் தம்பிடிகூட அரிசி பருப்பில்லை” என்ற அவர்கள் குரலில் பெரும் வருத்தம்.
ஆனால், பெரியவர் அதைக்கேட்டு வருத்தப்படவில்லை.
‘அப்படியா?’ என்று, மற்ற விஷயங்களைச் சொல்லும்போது கேட்டுக் கொள்வது போலதான் கேட்டுக்கொண்டாராம்!
அவர்களுக்கோ, ‘என்ன இப்படி இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கோ, இல்லை பெரியவர் சொன்னால், செய்ய தயாராக உள்ள தனவான்களுக்கோ, தகவல் அனுப்பினால் அல்லவா, இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்’ என்று கவலை.
நன்றாகக் கவனியுங்கள். இவர்களும் அம்பாள் பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் முடியாது. ஏனென்றால், இது விஞ்ஞான காலம். அற்புதங்கள் எல்லாம் கதை கட்டுரைகளில்தான் சாத்தியம் என்கிற அளவுக்கே நம் நம்பிக்கையின் வீர்யம் உள்ளது.
ஆனால், பெரியவரோ, “காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டாராம்.
அவர்களால் பெரியவரிடம் போய் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் போல, ஒரு வண்டி நிறைய அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ என்ற கேள்விக்குக் கிடைத்த விடையில்தான், அற்புதங்கள் இந்த நாளிலும் நடக்க முடியும் என்பதற்கான விஷயம் உள்ளது.
பக்கத்து கிராமத்தில் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள்தான் அவை எல்லாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் செய்ய முடியாத நிலை. வாங்கிவிட்ட அவ்வளவையும் என்ன செய்வது? என்று யோசித்தபோது, மடம் வந்து முகாமிட்டிருப்பது, அந்தத் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவருக்கு தெரிய வந்தது. மடத்தில் தினமும் அன்னபோஷணம் நடப்பதை தெரிந்து வைத்திருந்த அவர், இதை மடத்துக்கு கொடுத்துவிடுவோம். வீணாகாமல் நல்ல விதமாய் பயன்படும் என்று கருதி, வண்டியோடு அவ்வளவு சரக்கையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப்போய், பெரியவரிடம் கூறவும் சிரித்த பெரியவர், காமாட்சி பாத்துப்பானப்போ உனக்கு என் மேல கோபம் கூட வந்துருக்கும். ஆனால், இப்ப என்ன சொல்றே?” என்று கேட்டாராம். அவர்களால் பதிலுக்கு என்ன சொல்ல முடியும், சிலிர்ப்பதைத் தவிர…!
ஒரு விஷயத்தில் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் நிகழ்கின்றன.
இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.



