
நம் பாரத தேச கலாசாரத்தில் தேவருணம், பித்ருருணம், ருஷிருணம், மனிதருணம், பூதருணம் என்று ஐந்து வகை நன்றிக் கடன் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.
அதில் பித்ரு ருணம் என்பது மூத்தோர் கடன் தீர்த்தல். அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைப்பதும், அவர்களின் மரணத்திற்குப்பின் சிராத்தம் முதலான காரியங்களைச் செய்வதும் பித்ரு யக்ஞம் எனப்படும்.
ஆனால் நிறைய பேர் இத்தகைய சிரார்த்தம் போன்ற செயல்களின் விஷயத்தில் சரியான சிரத்தை காட்டாமல் அலட்சியப்படுத்துவதைக் காண்கிறோம். ஆஸ்திகர்கள் கூட சிராத்தம் போன்ற ஆப்தீக காரியங்களில் அலட்சியம் செய்வது மிகவும் வருத்தமான விஷயம்.
சிலர், “வேதத்தை நம்புவோமே தவிர புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் நம்பமாட்டோம். எனவே சிரார்த்தம் போன்ற கர்மாக்களைச் செய்ய தேவையில்லை. மரணித்தபோது செய்யும் கர்மாவே போதுமானது” என்று கூறுவார்கள்.
ஆனால் வேதத்திற்கு மாறாக புராணங்களும் சாஸ்திரங்களும் எதையும் கூறவில்லை. வேதத்தில் உள்ள வாக்கியங்களிலேயே ஸ்ராத்த கர்மாக்களின் அவசியம் பற்றி குறிப்பிட்டுள்ளது.
“ஸ்வாஹா காரத்தால் தேவதைகளை திருப்தி செய்வித்து ஸ்வதா காரத்தால் பித்ரு தேவதைகளை திருப்தி செய்விக்க வேண்டும்” என்று வேதமே தெரிவிக்கிறது. இன்னும், “ஸ்வதா பித்ருப்ய:” என்று வேதத்தில் கூறியுள்ளது போல் ஸ்வதா காரத்தால் பித்ரு தேவதைகளை வழிபட வேண்டும்.

அதே விதத்தில், “தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரவதி தவ்யம்” என்று உபநிஷத்து ஆணையிட்டுள்ளது. “தேவ காரியம் பித்ரு காரியம் இரண்டையும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.
முக்கியமாக பிதுர் தேவதைகள் என்றால் யார்? என்பது பற்றிப் புரிய வைத்து புராணங்கள் மிக அற்புதமான கருத்துக்களை கூறியுள்ளன. அதனை ஒரு விஞ்ஞானமாக நாம் அறியவேண்டும்.
தர்ம சாஸ்திரங்களில் ஒரு வார்த்தை உள்ளது. “சனாதனமான வேதம் கூறும் விஷயம் என்னவென்றால், பித்ரு தேவதைகளை ‘வசு’ என்பார்கள். அதேபோல் பிதாமஹர்களை ‘ருத்ரர்’ என்பார்கள். பிரபிதாமஹர்களை ‘ஆதித்யர்’ என்பார்கள். வசு, ருத்ரர், ஆதித்யர் இவர்கள் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர் இம்மூவரின் ஸ்தானத்திலும் ஆராதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளது.
அதாவது யார் ஸ்ராத்தம் செய்கிறாரோ அவருடைய தந்தை தாத்தா கொள்ளுத் தாத்தா மட்டுமேயன்றி வசு ருத்ரர் ஆதித்யர் இம்மூவரையும் பித்ரு வடிவத்தில் ஆராதனை செய்கிறோம். தந்தை தாத்தா கொள்ளுத் தாத்தாவின் பெயர்களைக் கூறி சிரார்த்தம் செய்தாலும் அந்த மந்திரங்கள் வசு ருத்ரர் ஆதித்யர்களுடன் அவர்களுக்கு அனுபந்தம் செய்விக்கின்றன.
இதன் மூலம் வசு ருத்ரர் ஆதித்யர் எனப்படும் சாஸ்வத தேவதைகள் சிராத்தம் செய்பவருடைய தந்தை தாத்தா கொள்ளுத் தாத்தா எங்கிருந்தாலும் எந்த உருவத்தில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான பதார்த்தங்களை ஸ்ராத்தத்தின் மூலம் கொண்டு சேர்ப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
யாக்ஞவல்கிய ஸ்ம்ருதியில் யாக்ஞவல்கிய மஹரிஷியின் ருஷி வாக்கியம் ஒன்றுள்ளது. “வசு, ருத்ரர், ஆதித்யர் என்னும் பித்ரு தேவதைகள் ஸ்ராத்தத்தில் தேவதைகளாக வந்தமர்ந்து மனிதர்கள் செய்யும் சிராத்தத்தில் திருப்தி அடைந்து அதன் மூலம் மனிதர்களுடைய பித்ருக்களை திருப்தியடையச் செய்கிறார்கள். அது மட்டுமல்ல யார் சிரார்த்தம் செய்கிறாறோ அவர்களை வாழ்த்துகிறார்கள். அதன் மூலம் பிதுருக்களின் ஆசி கிடைத்து வம்சம் விருத்தி ஆகிறது” என்று கூறியுள்ளார்.
ஒரு விஷயத்தைப் பற்றி ஆராயாமல் ஏளனம் செய்வது மிக எளிது. சிந்தித்துத் தெரிந்து கொள்வதற்கு விசாலமான உள்ளம் தேவை. புத்திக் கூர்மையும் அவசியம் தேவை.
பித்ருக்களை உத்தேசித்து செய்யும் தானம், ஸ்ரார்த்தம், தீர்த்தங்களிலும் க்ஷேத்திரங்களில் செய்யும் ஸ்ராத்த விதிகள் போன்றவை அற்புதமான பலன்களை அருள்கின்றன. இவற்றை செய்பவர்களின் குடும்பங்களுக்கும் நன்மை விளைகிறது. ஸ்ராத்த காரியங்கள் எப்போதும் வீண் போகாது. அவற்றை கடைப்பிடிக்கும் மனிதர்களுக்கு பலவித கோரிக்கைகளும் நிறைவேறும் என்று அழகாக விளக்கி உள்ளார்.
“தெய்வ பூஜையில் எத்தகைய நற்பலனைப் பெறுகிறோமோ அதேபோன்ற நற்பலனைப் பித்ரு கர்மா செய்வதன் மூலமும் பெறுகிறோம்” என்கிறது சாஸ்திரம்.
அதோடு கூட “யார் சாஸ்திர விதியை அனுசரித்து ஸ்ராத்த காரியத்தை அமைதியான மனதோடு செய்வார்களோ அவர்களின் சகல பாவ பலன்களும் விலகிவிடும். அந்தப் பாவ பலன்கள் அவர்களிடம் மீண்டும் திரும்பி வராது!” என்று விவரித்துள்ளார்கள்.
ஸ்ராத்தம் என்றால் சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டு சிரத்தையாக செய்யும் காரியம் என்று பொருள். சிரத்தை என்றால் “சாஸ்திர நம்பிக்கை” என்று பொருள்.
மரணித்த பின் ஜீவனுக்கு இந்த மனித உடலில் இருக்காது. ஆனால் அந்த ஜீவனுக்கு எந்த தேகமும் இருக்காது என்று கூறுவதற்கில்லை. அப்போது கிடைக்கும் உடல்கள் அவரவர் பாவ புண்ணியத்தின் யோக்கியதையை பொறுத்து பல விதமாக இருக்கும். ஒவ்வொரு ஜீவனுக்கும் இந்த ஸ்தூல உடல் போனவுடனே சூட்சும உடலோடு தன் விதிப்பலனை அனுசரித்து கட்டாயம் ஏதோ ஒரு உடலை அடைவான்.
ஜீவன் மீண்டும் பிறப்பெடுத்தால் மனிதன், விலங்கு, பறவை போன்ற வடிவங்களில் ஏதோ ஒரு உருவத்தை அடைவான். பிறப்பெடுக்காவிட்டால் வாயு வடிவத்தில் பித்ரு லோகத்தில் அலைந்து கொண்டிருப்பான். அப்படிப்பட்டவர்கள் கூட ஸ்ராத்தத்தின் மூலம் திருப்தி அடைவார்கள்.
அதுமட்டுமின்றி, “ஸ்ராத்த கர்மாக்களில் செய்யப்படும் பிண்ட பிரதானம், தர்ப்பணம், போஜனம் செய்வித்தது போன்றவற்றால் பித்ருக்கள் எந்த உருவத்தில் மீண்டும் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு அதன் சாரத்தையும் பலனையும் வசு, ருத்ரர், ஆதித்யர் கொண்டு சேர்ப்பார்கள்” என்று சாஸ்திரம் தெளிவாக விளக்கிக் கூறுகிறது.
உண்மையில் தொண்ணூற்றாறு வித ஸ்ராத்த விதிகளை ஒரு ஆண்டு காலத்தில் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் செய்யும் வழக்கம் தற்போது மறைந்துவிட்டது.
குறைந்த அளவு ஆப்தீகம் வடிவிலாவது தாய்க்கும் தந்தைக்கும் அவர்கள் மரணித்த பின் ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் செய்ய வேண்டும். இதையாவது கட்டாயம் செய்தே தீர வேண்டும்.
அதேபோல் மாளய பட்சத்திலும் தவறாமல் பிதுர் தேவதைகளை உத்தேசித்து ஸ்ராத்த விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். அதனை செய்வதால் நற்கதி கிடைக்கிறது. செய்யாமல் விடுவதால் தோஷம் ஏற்படுகிறது.
“பித்ரு தேவதைகள் என்று யாருமில்லை. அப்படிப்பட்ட லோகங்களே இல்லை” என்று கூறி யார் சிராத்த காரியங்களைச் செய்யாமல் விடுவார்களோ அவர்கள் தீய கதியை அடைவார்கள்” என்று தெளிவாக தெரிவிக்கிறது சாஸ்திரம்.
அதேபோல் சிரார்த்த பலன் என்னவென்றால், “ஆயு: தனம் வித்யாம் ஸ்வர்கம் மோக்ஷம் சுகானி ச” எந்த தெரிவிக்கிறது.
தீர்க்காயுள், சந்தானம், தனம், வித்யை, சுவர்க்கம், மோட்ச சுகங்களனைத்தும் இதன் மூலம் கிடைக்கின்றன. அதேபோல் பித்ரு தேவதைகளின் பக்தர்கள் புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள் என்று கூறும் “பித்ரு தேவதா விஞ்ஞானம்” நிறைய உள்ளது.
தற்காலத்தில் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்த நூல்களில் பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்தறிய முயற்சிக்க வேண்டும். ஆனால் அவை எதையும் அறிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்யாமல் விடுவதால் தீய பலன்கள் வந்து சேரும்.
ரிஷிகள் எடுத்துக் கூறியுள்ள நன்மை அளிக்கும் இத்தகு ஞானத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



