
வேத வியாச பகவான் மகாபாரதத்தில் கூறியுள்ள வார்த்தைகளில் மிக ரம்மியமான வாக்கியம் ஒன்றுள்ளது.
“யதோ தர்ம: தத கிருஷ்ண: யத கிருஷ்ண: ததோ ஜெய: !”
இந்த வாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் சாதாரணமாக, “யதோ தர்ம: ததோ ஜெய:” என்று கூறுவதைக் கேட்கிறோம். அதாவது தர்மம் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும் என்ற பொருளில்.
அதில் பாதிதான் உண்மை. முழு உண்மையல்ல! முழுமையான சத்தியம் மகாபாரதத்தில் சில இடங்களில் வருகிறது. ஒரு தடவை பீஷ்மர் வாயிலாகவும் மற்றொரு முறை சஞ்சயன் வாயிலாகவும் கூறப்பட்டுள்ளது.
“எங்கே தர்மம் இருக்குமோ அங்கே கிருஷ்ணன் இருப்பான்! எங்கே கிருஷ்ணன் இருப்பானோ அங்கே ஜெயம் இருக்கும்!”. தர்மம் என்பது ஒரு செயல். செயலுக்கு சைதன்யம் கிடையாது. ஏதோ ஒன்றை நமக்கு அளிக்கக் கூடிய சாமர்த்தியம் அதற்குக் கிடையாது. செயலை கவனித்து பலனை அளிக்கும் சைதன்ய சொரூபம் ஒன்று உள்ளது. அதனை இறைவன் என்கிறோம்.
அதனால்தான் பகவான் ரமண மகரிஷி உபதேச சாரத்தில், “கர்ம கிம் பலம், கர்ம தத் ஜடம் !” என்றார். ஜடமான செயல் பலனைத் தர இயலாது. ஆனால் நாம் ஆற்றும் செயல்களை கவனிப்பவன் “பலப்ரதாதா”வான இறைவன். இறைவன் என்றால் “கர்மபல ப்ரதாதா” என்று பொருள். ஜீவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியான இறைவன் செயலுக்குத் தகுந்த பலன்களை அளிக்கிறான்.
தர்மம் எங்கே இருக்குமோ அங்கே இறைவன் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்வான். அதனால் இறைவன் வெளிப்பட வேண்டுமென்றால் அங்கே தர்மம் இருக்க வேண்டும். தர்மம் ஒன்று மட்டுமே தெய்வத்தை சாக்ஷாத்காரம் செய்து கொள்ளக் கூடியது. தெய்வத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது தர்மமே!
அதனால் அசுரர்களாலும் அதர்மிகளாலும் பூமியும் லோகங்களும் வாட்டப்பட்டபோது தர்மத்தை கடைபிடிப்பவர்களான தேவர்களும் ருஷிகளும் பிரார்த்தனை செய்ததால் பகவான் பிரத்யக்ஷமாகி அவதரித்தார். அதாவது தெய்வத்தைப் பிரத்யக்ஷம் செய்து கொள்வதோ அவதரிக்கச் செய்வதோ தர்மத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியப்படும். தர்மமே சுபாவமாக கொண்ட தேவர்களும் ருஷிகளும் மட்டுமே தெய்வத்தை பிரார்த்தனை செய்து அவதரிக்கும்படி செய்யக் கூடியவர்கள்.
எங்கே தர்மம் இருக்குமோ அங்கே தெய்வம் இருக்கும்! தெய்வத்தின் மூலம் விஜயம் பெறப்படுகிறது! அதனால் ஜெயம் என்பது இறைவனின் கருணையே! இதனை முக்கியமாக அறியவேண்டும்.
இக்காரணத்தால்தான் தர்மபுத்திரர் தர்மத்தை மட்டுமே கைக்கொண்டு அரண்யத்திற்குச் சென்றார். அச்சமயத்தில் திரௌபதி ஒரு கேள்வி கேட்டாள். உலகில் அனைவரும் கேட்பது போலவே அவளும் கேட்டாள்.
“நீர் தர்மம் தர்மம் என்ற அதனைப் பிடித்துக் கொண்டுள்ளீர்! தர்மம் உமக்கு என்ன கொடுத்தது? காட்டுக்கு அனுப்பியது. அதர்மத்தைப் பிடித்துக்கொண்ட துரியோதனர்கள் மகாராஜாவாக அரசாளுகிறார்கள்” என்றாள்.
உடனே துவளாமல் சிதறாமல் தர்மபுத்திரர் பதிலளித்தார். ஏனென்றால் தர்ம நிஷ்டை உள்ளவருக்கு மனத்தெளிவு இருக்கும். ஐயம் இருக்காது. இதனை அறிய வேண்டும். தெளிந்த மனதோடு தர்மத்தை கடைபிடிப்பவராதலால் ஐயமற்றவராகவும் சங்கோஜம் அற்றவராகவும் பதிலளித்தார்.
“ஸ்வபாவம் ஹி மனகிருஷ்ண !” என்றார். “தர்மத்தைக் கடைப்பிடிப்பது என் சுபாவம்” என்றார்.
இந்த வார்த்தை மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகனான தர்மபுத்திரனின் கேரக்டரை நமக்கு முழுமையாகக் காட்டுகிறது. “தர்மத்தைக் கடைப்பிடிப்பது என்பது என் சுபாவம். அவ்வளவுதானே தவிர யாரோ சொன்னார்கள் என்றோ ஏதோ கிடைக்கும் என்றோ நான் தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்றார். சுபாவத்திலேயே தர்மத்தை கடைபிடிப்பவர்களை மகாத்மாக்கள் என்பார்கள். தர்மபுத்திரர் ஒரு மகாத்மா!
யாரோ ஏதோ நினைத்துக்கொள்வார்கள் என்பதற்காக தர்ம வழியில் நடந்தால் அதில் இயல்பான நடத்தை இருக்காது. சகஜமாகவே தர்மத்தில் நிலைபெற்றிருப்பது என்பது மிகச் சிறந்த தனி மனித நடத்தை. அதனால்தான் தர்மபுத்திரர் வணக்கத்துக்குரியவர் ஆகிறார்.
அவருடைய உண்மையான பெயர் யுதிஷ்டிரர். ஆனால் அவருக்கு தர்மராஜா, தர்மபுத்திரர் என்ற பெயர்களே நிலைத்து விட்டன. அவர் இன்னும் ஒரு உயர்ந்த வார்த்தை கூறுகிறார்.
“தர்ம வாணிஞ்ய கோ ஈனஹ ஜஹன்ய புருஷாதமஹ !” – “தர்மம் ஏதோ அளிக்கும் என்ற ஆசையில் தர்மத்தைக் கடைப்பிடித்தால் அது ‘தர்ம வியாபாரம்’ ஆகிவிடும்” என்கிறார்.
இதுவும் தர்மபுத்திரர் கூறிய வாக்கியமே! தர்மத்தால் வாணிபம் செய்பவர்கள் மனிதர்களில் அதமமானவர்கள், கடையானவர்கள். ஏதோ சிறிது தர்மத்தை அனுசரித்தவர்கள் கூட, “இத்தனை தூரம் தர்மவழியில் இருக்கிறேன். எனக்கு என்ன கிடைத்தது?” என்று புகார் செய்யக்கூடிய இந்த காலத்தில் தர்மபுத்திரரின் கூற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். தர்மத்தால் எதுவோ வரும் என்றோ வராது என்றோ கூட ஆசைப்படாமல் தர்மத்தைக் கடைப்பிடிப்பது உயர்ந்த செயல்.
இதே கருத்தை,
“கர்மண்யேவாதிகராஸ்தே மா பலேஷு கதாசன !
மா கர்மபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வ கர்மணி !!”
என்று கீதையில் ஜகத்குரு கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.
அவ்வாறு பலனை எதிர்பாராமல் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் போது கிருஷ்ணன் அங்கிருப்பான். அதனால்தான் அதர்மம் அரசாண்டபோது கிருஷ்ணனோ ருஷிகளோ ஹஸ்தினாபுரத்துக்குச் செல்லவில்லை. தர்மம் காட்டிற்குச் சென்றபோது ருஷிகளும் கிருஷ்ணனும் கூட காட்டிற்கு வந்து பாண்டவர்களை நலம் விசாரித்து தைரியத்தை அளித்தார்கள். தர்மம் பிராரப்த வசத்தால் வனத்திற்குச் செல்ல வேண்டி வந்தாலும் இறைவன் உடனிருப்பார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
இப்போது நாம் அனுபவிக்கும் சுகமோ துக்கமோ இப்போது நாம் செய்த கர்மங்களால் கிடைத்தது அல்ல. முன்பு எப்போதோ செய்த கர்மங்களின் பலனையே பிராரப்த வசமாக இப்போது அனுபவிக்கிறோம். அதனால் இன்று அனுபவிக்கும் சுக துக்கங்களை எண்ணி தர்மமா அதர்மமா என்ற சந்தேகத்தில் நாம் நுழையக்கூடாது. தர்மத்தைக் கடைப்பிடித்து வந்தால் துயரங்களை பொறுத்துக் கொள்ளும் சக்தி கூட வரும். பிராரப்த வசத்தால் துக்கம் ஏற்பட்டாலும் கூட இப்போது நாம் கடைப்பிடிக்கும் தர்மத்தால் இறைவன் நமக்குத் துணையாய் இருப்பார். இதுவே மகாபாரதத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உயர்ந்த அம்சம்!

அக்காரணத்தால் தான் அரண்யத்திற்குச் செல்ல நேர்ந்த போதிலும் எப்போதும் தர்மபுத்திரரின் ஆசிரமம் தவசிகளால் நிறைந்திருந்தது. அப்போதைக்கப்போது மகரிஷிகள் வந்து சிறந்த விஷயங்களைக் கூறி பாண்டவர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தார்கள். அச்சமயத்தில் தர்மபுத்திரர் கூட தவம், அனுஷ்டானம் போன்றவற்றைச் செய்து அவருள் இருந்த தெய்வீக சக்தியைப் பெருக்கிக் கொண்டார்.
அதனால் தார்மீகர்களுக்கு ஒரு பிராரப்த காலத்தில் துயரம் நேர்ந்த போது கூட அவர்களிடமுள்ள தெய்வீக சக்தியைத் தூண்டி உயிர்ப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
அதனால்தான் வனவாசத்தின்போது எத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டாலும் இறுதி வெற்றியை பாண்டவர்கள் சாதித்தார்கள். தலைநகரில் இருந்து கொண்டு அதிகார பலம் இருந்தபோதிலும் கௌரவர்களால் வெற்றியைப் பெற முடியாமல் போயிற்று.
இதனைக் கொண்டு செல்வம், அதிகாரம் போன்ற பௌதீக மதிப்பீடுகளை விட தர்ம பலமே உயர்ந்தது என்பதை அறியலாம்.
எனவே, “தர்மம் இருக்குமிடத்தில் தெய்வம் இருக்கும். தெய்வம் இருக்குமிடத்தில் விஜயம் இருக்கும்!” என்ற ருஷி வாக்கியத்தை நினைவில் நிறுத்தி தர்ம ஸ்வரூபமான பரமாத்மாவை வணங்குவோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



