“ஏண்டா, என்னை எல்லாரும் பெரியவா… மகா பெரியவா!ன்னெல்லாம் கூப்பிடறாளே, எனக்கு என்ன அவ்வளவு பெரிய வாயா இருக்கு?
(தெய்வங்களின் நகைச்சுவையும்- பெரியவாளின் நகைச்சுவையும்)
(இன்று குரு பூர்ணிமா-16-07-2019-சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)
.
கட்டுரை-பி. ராமகிருஷ்ணன் (பகுதி)
நன்றி- குமுதம் பக்தி.
புராணத்துல ஒரு ஹாஸ்ய சம்பவம் சொல்லுவாங்க. ஒரு சமயம் கைலாயத்துல ஈஸ்வரனும் ஈஸ்வரியும் உட்கார்ந்து பேசிண்டு இருந்தாங்க. அவாளுக்கு நடுவுல பாலமுருகன் அமர்ந்திருந்தான்.
சோமஸ்கந்தராக காட்சிதந்த அந்த தெய்வீக தரிசனத்தைப் பார்த்து தேவர்கள் எல்லாம் சிலிர்த்து வணங்கிண்டு இருந்தாங்க. அதனால் கைலாயமே ஜகஜோதியா பளீர்னு இருந்துது. அப்போ எதேச்சையா பூலோகத்தை எட்டிப் பார்த்தான் குழந்தை வேலாயுதன். அன்னிக்கு அமாவாசையானதால உலகமே இருட்டாக இருந்தது.
அதைவச்சு ஒரு விளையாட்டு பண்ணிப் பார்க்கணும்னு முருகனுக்கு எண்ணம் வந்தது. அதனால், அம்மாவையும் அப்பாவையும் பார்த்து, ரெண்டுபோரும் என்னோட கன்னத்துல ஆளுக்கு ஒரு முத்தம் கொடுங்கோன்னு கொஞ்சி கெஞ்சி கேட்டான்.
செல்லக் குமரன் ஆசையா கேட்டதும், சர்வேஸ்வரனும், சங்கரியும் முத்தம் தர்றதுக்காக சட்டுன்னு குனிஞ்சாங்க. ரெண்டுபேரும் கன்னத்துக்குப் பக்கத்துல வந்தப்போ சட்டுன்னு விலகிண்டுட்டான் முருகன். அதேசமயம் அம்மையும் அப்பனும் ரொம்ப நெருக்கமா வந்துட்டதால் பரமேஸ்வரனோட திருமுடியில இடதுபக்கம் இருந்த பிறை நிலாவும், அம்பாளோட சிரசுல வலதுபக்கம் இருந்த பிறைநிலாவும் சேர்ந்து முழுநிலவா காட்சி தந்துது. அமாவாசையான அந்த நாள்ல இப்படி முழுநிலா வந்ததால, பூலோகம் இருள் விலகி பளிச்னு வெளிச்சமாச்சு.
மண்ணுலக இருளை விலக்கணும்கற தன்னோட எண்ணம் பலிச்ச சந்தோஷத்துல கைகொட்டி சிரிச்சான பாலஸ்கந்தன்.
தெய்வங்களுக்குக்கூட நகைச்சுவை உணர்வு உண்டு என்பதை விளக்கறமாதிரி இருந்த சம்பவத்தை சொல்வாங்க. அப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு பரமாச்சார்யாளுக்கும் இருந்தது.
ஒரு சமயம் சாதுர்மாஸ்ய விரதத்துல இருந்த பெரியவாளை, நிறைய பக்தர்கள் பார்க்க வந்திருந்தாங்க. நித்யகர்மானுஷ்டானத்தை எல்லாம் முடிச்சுட்டு அவாளுக்கு தரிசனம் தர்றக்காக வந்து உட்கார்ந்தா, ஆசார்யா. ஒவ்வொருத்தரா அவர்கிட்ட வந்து, “பெரியவா நமஸ்காரம்’ “மகா பெரியவா ஆசிர்வாதம் பண்ணுங்கோ?’ இப்படியெல்லாம் சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு போனாங்க.
எல்லாரும் தரிசனம் செய்துட்டுப்போனதுக்கப்புறம் ஆசார்யா தன் பக்கத்துல இருந்த ஒரு சீடரை கூப்பிட்டார். “எனக்கு ஒரு சந்தேகம்!’ அப்படின்னார்.
“என்னடா இது, எத்தனை எத்தனையோ மகாவித்வான்களோட சந்தேகங்களையெல்லாம் தீர்த்துவைக்கக்கூடிய மகாஞானியான பெரியவா, என்கிட்டேபோய் ஏதோ கேட்கறாரே’ன்னு குழம்பிப் போனார் அந்த சீடர். பக்கத்துல இருந்த மத்தவாளுக்கும் அதேமாதிரிதான் தோணித்து.
“ஏண்டா, என்னை எல்லாரும் பெரியவா… மகா பெரியவா!ன்னெல்லாம் கூப்பிடறாளே, எனக்கு என்ன அவ்வளவு பெரிய வாயா இருக்கு?’ ஒண்ணுமே தெரியாதவராட்டம் கேட்ட ஆசார்யா. மெல்ல சிரிச்சார். அப்போதான் புரிஞ்சது தன்னைப் பெரியவான்னு கூப்பிடதைப் பத்தின கர்வமே இல்லாம, அதைக்கூட தான் விரும்பலைங்கறதை இப்படி நகைச்சுவையா அவர் சொல்றார்ங்கறது.
கூடியிருந்த கூட்டம் மொத்தமும் அவரோட நகைச்சுவை உணர்வை நினைச்சும், கொஞ்சம் கூட கர்வம் இல்லாம சன்யாச தர்மத்தைக் கடைபிடிக்கற அவரோட குணத்தை நினைச்சும் சிலிர்த்துப் போனாங்க



