
பாரதீய ருஷிக்கு பிரதானமான லட்சியம் விஸ்வ நலன். விஸ்வம் என்ற சொல்லிற்கு முழுமையானது என்று பொருள். உலகம் முழுவதும் நலமோடு விளங்கவேண்டும். அனைத்தும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் சிறப்பான அம்சம்!
அப்படியில்லாமல் ஏதோ ஒரு பிரதேசம் மட்டும் நலமாக இருக்க வேண்டும்…. ஒரு வர்க்கம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்… என்பது போன்ற எண்ணங்கள் நமக்கு கிடையாது.
“என் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். மீதி உள்ளவர்கள் எல்லாம் அஞ்ஞானிகள். அவர்கள் அழிய வேண்டும் அல்லது அவர்கள் எங்களைப்போல் மாற வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்ற பாவனை மீதி உள்ள கலாச்சாரங்களில் காணப்படுகிறது. ஆனால் பாரதீய வேதக் கலாச்சாரம் யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது. இது மிகவும் உயர்ந்த எண்ணம்.
“விஸ்வ ஸ்ரேயோ காங்க்ஷ”- அதாவது லோக க்ஷேமத்தை விரும்புவது என்பதை தீர்மானமாக கொண்டுள்ள தர்மம் நம் சனாதன தர்மம். அதனால் நம் ஆலயங்களில் கூட, “அஸ்மின் கிராமஸ்தித ஸர்வேஷாம்…” என்பார்கள். அதாவது இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கவேண்டும் ஒன்று பிரார்த்தனை செய்வார்கள். அனைவரும் என்று கூறும்போது, அனைத்து வர்ணத்தைச் சேர்ந்தவர்களும் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், ஆண்கள், பெண்கள்… பிரக்ருதி, அந்த ஊரின் இயற்கை வளம் கூட நன்றாக, நலமாக விளங்க வேண்டும். இது விருப்பம்.
இந்த விருப்பம் எத்தனை விஸ்தாரமாக உள்ளது என்பதை “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்ற வாக்கியத்தை ஸ்தாபித்திருப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகங்கள் அனைத்தும் நலமாக விளங்க வேண்டும். இந்த விருப்பம் பூலோகத்திற்கு மட்டுமேயல்ல. பரந்து விரிந்த பதினான்கு உலகங்களும் நலமாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறது.
நம் கலாச்சாரத்தில் ஒரு சிறப்பான அம்சம் உள்ளது. பதிநான்கு புவனங்களும் சேர்ந்து ஒரே பகவத் சொரூபமாக பார்ப்பது. இது மிக அற்புதமான கருத்து. இது ஒரு சிறந்த தரிசனம். இந்த கருத்தினை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். ஏனென்றால் இறைவனுக்கு என்று ஒரு உலகம் இல்லை. உலனைத்தும் இறைவனுடையதே! இந்த பாவனையை புரிந்துகொள்ளவேண்டும்.
இதனையே விஷ்ணு சஹஸ்ரநாம தியான ஸ்லோகத்தில் கூட படிக்கிறோம். குறைந்தபட்சம் இவற்றுக்கான அர்த்தத்தையாவது பிள்ளைகளுக்குக் கூற முடிந்தால் நம் கலாச்சாரத்தில் இறைவனுக்கான விளக்கம் என்ன என்பது தெளிவாகும்.
“பூ பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர சூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசா: சிரோ த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் சுரநர கககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம் ரம் யதே தம் த்ரிபுனவபுஷம் விஷ்ணு மீசம் நமாமி !!”
என்று விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு முன் தியான ஸ்லோகத்தில் படிக்கிறோம். இது விராட் புருஷ வர்ணனை. இதில் பூமி முதல் அந்தரிக்ஷம் வரை அனைத்தும் சேர்ந்து ஒரே இறைவடிவமாக பார்க்கப்படுகிறது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி கொடிகள் முதற்கொண்டு நட்சத்திரங்கள் கிரகங்கள் அனைத்தையும் கூட பகவான் எனப்படும் விஸ்வரூபத்தில் அல்லது விஸ்வரூபமான இறைவனிடத்தில் உறுப்புகளாக தரிசிக்கிறார்.
நம் உடலில் எந்த ஒரு எந்த உறுப்புக்குத் தீங்கு ஏற்பட்டாலும் நமக்குத் தீங்கு நேரிட்டாற்போலத்தான். அதேவிதமாக சமுதாயத்தில் யார் ஒருவருக்கு வருத்தம் ஏற்படுத்தினாலும் பரம புருஷோத்தமனுக்கு வருத்தம் விளைவித்தாற்போலத்தான் என்ற பாவனை இங்கு காணப்படுகிறது.

அதனால் உலகில் அனைத்தும் நலமாக இருக்க வேண்டும் என்னும்போது உலகங்களின் வடிவில் உள்ள இறைவன் நலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கை. லோக க்ஷேமத்தை யார் விரும்புவாரோ அவருடைய க்ஷேமத்தை இறைவன் நிறைவேற்றுவார். இதனை நினைவில் கொள்ளவேண்டும். ‘உலகம் எப்படிப் போனால் என்ன? நான் நன்றாக இருந்தால் போதும்!’ என்று நினைப்பவர் கட்டாயம் நன்றாக இருக்க மாட்டார். இதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதனால் உலகத்தில் உயிர் வாழ்வது யாருக்கு ஏற்றம்? சமஸ்த லோக க்ஷேமத்தையும் விரும்புபவரே உலகில் வாழ்வதற்கு அருகதையுடையவர்! இந்த கருத்து பல இடங்களில் சனாதன தர்மத்தில் காணப்படுகிறது.
“ஸ்வஸ்தி ப்ராஜாப்யாம்….. முதல் “லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து!” வரை…! “ஸர்வே பவந்து ஸுகின: சர்வே சந்து நிராயமா: சர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்க பாக் பவேத்!” – இது வேதத்தின் விருப்பம்.
“அனைவரும் சுகமாக இருக்க வேண்டும். அனைவரும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சுபம் விளையவேண்டும். ஒருவர் கூட துயரம் அடையக்கூடாது” இது மிக உயர்ந்த வார்த்தை. ‘மா கச்சித் துக்கபாக் பவேத்’. யாரும் துயரமுடையக் கூடாது! எத்தனை உயர்ந்த விருப்பம் பாருங்கள்!
இதனை கவனித்தால், “பிறரை ஆக்கிரமிக்க வேண்டும்… இம்சை செய்ய வேண்டும்… அவர்களை மாற்றி விட வேண்டும்….” போன்ற தாபத்ரயங்கள் நீங்கிவிடும். அத்தகு விசாலமான கண்ணோட்டம் நமது கலாச்சாரத்தில் காணப்படுகிறது. இந்த காரணத்தால்தான் நாம் அனைவரையும் மதிக்கிறோம். இதனை நம்மிடம் இருக்கும் பலவீனமாக எடுத்துக்கொண்டு பிறர் நம் இருப்பிற்கே ஆபத்தாக மாறுவதற்கு இடம் கொடுக்காமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
நம் சனாதன தர்மத்தில் “விஸ்வ க்ஷேம காங்க்ஷை” யை அத்தனை உயர்வாக காட்டியுள்ளார்கள்! அது மட்டுமல்ல. மனிதன் மட்டுமே அல்ல! இந்த விருப்பம் எதுவரை செல்கிறது என்றால், “ஆபஸ் சாந்தி:! ப்ருத்வி சாந்தி:! ஓஷதியஸ் சாந்தி:! சாந்திரேவஸ் சாந்தி:!” – “நீர்நிலைகள் சாந்தமாக இருக்கட்டும்! ஔஷதிகள் சாந்தமாக இருக்கட்டும்! பூமி சாந்தமாக இருக்கட்டும்!” அதாவது நம் போன்ற மனிதர்கள் மட்டுமல்லாமல்… நம்மைப்போல் நகரும் விலங்குகளும் பறவைகளும் மட்டுமல்லாமல்… நமக்குப் பயன்படும் மரம் செடி கொடிகள் மட்டுமல்லாமல்… நமக்கு புரிபடாத கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய, சந்திரர்கள், பஞ்சபூதங்கள் இவை அனைத்தும் கூட நலமாக விளங்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இவை அனைத்தையும் இறைவனின் சொரூபமாக தரிசிக்கிறோம்.
அதனால் யுனிவர்சல் எனப்படும் உலகளாவிய தர்மமாக ஹிந்து தர்மத்தை இந்த மந்திரங்களின் ஆதாரமாக காட்டுகிறோம்! இது போன்று பல இடங்களில் சனாதன தர்ம நூல்களில் காணப்படுகிறது. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் எப்போதும் நன்றாக இருப்பான். ஏனென்றால் இறைவனுக்கு அவன் விருப்பமானவனாக விளங்குவான்.
விஸ்வம் விஷ்ணுவின் சொரூபம் என்ற சாசுவத சத்தியத்தை, இன்றியமையாத உண்மையை நம் கலாச்சாரம் அப்போதைக்கப்போது எடுத்துரைத்துக் கொண்டே உள்ளது. அதனால்தான் இறைவனில் அனைவரையும் காண்பது! அனைவரிலும் இறைவனை காண்பது! என்பது நம் கண்ணோட்டமாக உள்ளது.
“யோமாம் பஸ்யதி சர்வத்ரா சர்வம் சமயி பஸ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி !!”
என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. “அனைத்திலும் என்னை பார்ப்பவன் அனைத்தையும் என்னில் பார்ப்பவன் யாரோ அவனுக்கு என் மேல் பிரியம். அவன் மேல் எனக்குப் பிரியம்!” என்கிறார்.
அதனால் விஸ்வத்திற்கும் விஷ்ணுவுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் வேறுபாடு இல்லாத ஒற்றுமை உள்ளது. விஸ்வமெங்கும் விஷ்ணுவான போது விஸ்வம் என்று வேறே எதுவுமில்லை! அதனால் விஸ்வமே விஷ்ணு என்று அறிந்து கொள்வோம். அதனையே, “சர்வம் பிரம்ம மயம் ஜகத்!” என்றார்கள். அப்படிப்பட்ட சர்வ லோக நலனுக்கான விருப்பத்திற்கு வந்தனம்! நாராயணாய நம:!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



