“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”
(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)
( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் முகாம். பெரியவா தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது. ஒரு சிஷ்யனைக் கூப்பிட்டு, “அந்த வெத்தலையை எடுத்து பத்திரமா வைத்திருக்கம்படி சொன்னார்கள்.
சிஷ்யருக்குக் குழப்பம்.
வெற்றிலை ஒரு மங்கள பொருள் என்பதால்,மக்கள் காலில் மிதிபட்டு வீணாகப் போகவிடக் கூடாது என்பது பெரியவா எண்ணமா இருக்கலாம். அது சரி…..ஆனால், “பத்திரமா வெச்சுக்கோ! “……இது தான் புரியவில்லை -சிஷ்யருக்கு.
. அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தினல் , ஒரு பெண் ரொம்ப ஸ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள், கூட்டத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு அவளால் வர முடியவில்லை.. ஆனால் அருகில் சென்று, பெரியவாளை பார்த்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.
பெரியவா யாரும் எதிர்பாராதபோது, கூட்டத்தினுள்ளே நுழைய முற்பட்டார்கள். . உடனே எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள். பெரியவா அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார். சிஷ்யரிடம் ஏதோ சமிக்ஞை !
“என்னம்மா? எந்த ஊர்? என்ன பேரு?”.. சிஷ்யர் கேட்டார்.
“…..சின்னப் பொண்ணுு”
“உன் பேர் என்னம்மா?..”
“என் பேர்தாங்க சின்னப் பொண்ணுு”
பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை ஆசிர்வதித்தார்கள்.. பின் சிறு குறிப்புத் தோன்ற் சிஷ்யரைப் பார்த்தார்கள்………சிஷ்யர் பத்திரமாக வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாள்.
“ரொம்ப் நன்றி!” என்று சொல்லத் தெரியாத பெண்மணி.ஆனால், நன்றி உணர்ச்சி உள்ளத்தில் பெருகிக் கொண்டிருக்கிறதே? இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நெஞ்சார்ந்த நன்றியுடன், பெரியவா திரும்பிச் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள்.
அந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் வெற்றிலை?
சின்னப் பொண்ணுு, நிறைமாத கர்ப்பிணி ! பெரியவாளை எப்படியாவது தரிசனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள். ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது. யாரிடம் சொல்வது?
இந்த அவஸ்தை நீங்க, ஒரு வெற்றிலை இருந்தால் போதும். யார் கொடுப்பார்கள்? தட்டு தட்டாக பழங்கள், பந்து பந்தாக மலர்ச் சரங்கள் பல பக்தர்களுடைய கைகளில், ஆனால் ஒருவர் தட்டிலும் வெற்றிலையைக் காணோம்!.,
தட்டில் இல்லாத வெற்றிலை தரையில் காணப்பட்டது எப்படி?
சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?
இருக்கும்!



