“Fits வந்தது, தெய்வ குற்றம்;
Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!”
( கல்யாணம் நடக்குமா. நடக்காதா.?..நடத்தலாமா, கூடாதா.?.என்ற நிலையில் Fits உள்ள பெண்ணுக்கு அனுகிரஹம் பண்ணிய பெரியவா)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 
ஒரு விவாகம்.
மாலை மாற்றல், ஊஞ்சல், திருஷ்டி கழித்தல் எல்லாம் மகிழ்ச்சியாக நடந்து, மணமக்கள் மேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.
அப்போதுதான்.! யாரும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி..
மணப்பெண் மயக்கம் போட்டு (Fits) விழுந்து விட்டாள்.
இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக வந்து பெரியவாளிடம் கல்யாணப் பத்திரிகை சமர்ப்பித்து, அனுக்ரஹம் பெற்றுச் சென்றிருந்தார்கள், பத்துப் பன்னிரெண்டு நாட்களுக்கு முன்.
அப்படியும் இப்படி ஓர் இடி.
கல்யாணம் நடக்குமா. நடக்காதா.?..நடத்தலாமா, கூடாதா.?…Fits உள்ள பெண்ணை ஏமாந்தவன் தலையில் கட்டிவிடப் பார்க்கிறார்களா.? என்ன சோதனை.?
விவாகச் சடங்குகளை நடத்தி வைத்துக் கொண்டிருந்த வைதிகருக்கு சட்டென்று ஒரு யோஜனை தோன்றியது.
“இதைப் பாருங்கோ.!…லக்னத்துக்கு நிறைய நேரம் இருக்கு. எனக்கு என்ன தோண்றதுன்னா பெரியவாளுக்கு இந்தச் சமாசாரத்தைத் தெரியப்படுத்தி, அவர்கள் உத்திரவுப்படி நடப்போம்….”
அடுத்த நிமிடம் ஸ்ரீமடம் மானேஜருக்குத் தொலைபேசியில் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.
பெரியவா சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு சொன்னார்கள்.
“பெண் வீட்டுக்காரர்களுக்குக் குலதெய்வம் ஒரு மகமாயி. அந்தத் தெய்வத்துக்குப் பிரார்த்தனை செய்து, ஒரு வேப்பிலைக் கொத்தை, பெண்ணின் தலையில் செறுகணும். அனேகமா சரியாயிடும்…”
அதன்படி வேப்பிலைக் கொத்தைப் பெண் அருகே கொண்டு சென்றவுடனேயே, அவள் மயக்கம் தெளிந்து தானாகவே எழுந்து உட்கார்ந்தாள்.
சேஷ ஹோமம் ஆனவுடன் காஞ்சிபுரம் வந்து பெரியவாளைத் தரிசித்துக் கொண்டார்கள் தம்பதிகள்.
“பெரியவா அனுக்ரஹத்தாலே கல்யாணம் நல்லபடியாக நடந்தது…”
“மகமாயி அனுக்ரஹத்தாலேன்னு சொல்லுங்கோ.?”
“Fits…” என்று இழுத்தார், பெண்ணின் தகப்பனார்.
“Fit-ன்னு சொல்லுங்கோ…” சமத்காரமாகச் சொன்னார்கள் பெரியவா.
Fits வந்தது, தெய்வ குற்றம்; Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!



