
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டுக்கான திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றினார். வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகள் செய்தார்.கொடியேற்று விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து திருமுறை பெட்டகம் ஊர்வலம் கோயிலில் இருந்து தொடங்கி 4 ரத வீதிகள் வழியே சென்று கோயிலை அடைந்தது. 9 ஆம் திருவிழாவான ஜனவரி 5 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது இதில் சுவாமி தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர் என 3 தேர்கள் உலா வரும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜ பெருமான் வீதியுலா நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5-ம் நாளான ஜன1ம்தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், ஜன. 4-ம் தேதியன்று சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
ஜன.6-ம் தேதியன்று அதிகாலை 4மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.
விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று டிச.28ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சு.ரா.நடராஜகுஞ்சிதபாத தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.
ஜனவரி 5-ஆம் தேதி வியாழக்கிழமை தோ்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். 7-ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சமூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் தினமும் பஞ்ச மூா்த்திகள் வீதி உலாவும், மாலை 6 மணியளவில் சாயரட்சை பூஜையில் சித் சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவமும் நடைபெறும்.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் குழுச் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், துணைச் செயலாளர் கே.சேதுஅப்பாச்செல்ல தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.





