ஏப்ரல் 20, 2021, 9:45 காலை செவ்வாய்க்கிழமை
More

  தினசரி ஒரு வேத வாக்கியம்: 12- தீஞ்சொல் சகவாசம்!

  தீஞ்சொல் பேசுபவர் இருக்கும் இடத்தில் அமைதியும் சமரசமும் நிலவாது. சமுதாய நன்மை கோரும் வேத ரிஷிகள் 'துருக்த'ங்களை

  vedavaakyam

  12. தீஞ்சொல் சகவாசம்!

  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
  தமிழில்: ராஜி ரகுநாதன் 

  “ந துருக்தாய ஸ்ப்ருஹயேத்”
  – ருக் வேதம் 

  “தீஞ்சொல் பேசுபவர்களோடு தொடர்பு கூடாது”

  ஸ்ருதி, ஸ்மிருதி, புராணம் மற்றும் இதிகாசங்களில் பேச்சுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சொல்லின் பண்பாட்டை விளக்கும் இனம் மிகவும் நாகரீகம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  வேதங்களில் பேசும் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று பல இடங்களில் விவரித்துள்ளார்கள்.

  “வாக்கி சர்வஸ்ய காரணம்”

  அனைத்திற்கும் பேச்சே காரணமாகிறது என்பது நம் முன்னோர் கூற்று. 

  உண்மையாக, அன்பாக, இதமாக, சாஸ்திர படிப்பு மூலம் கிடைத்த பண்பாட்டோடு பேச முடிந்தால் அது ‘வாசிக தபஸ்’  ஆகிறது என்பது கீதாசார்யன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.  

  அனுமனின் பேச்சின் உயர்வை வால்மீகி மகரிஷி இனிமையாக வர்ணிக்கிறார். செயல்திறனோடு பேசி காரியத்தை சாதிப்பது சிறந்த இயல்பு. 

  பேச்சு நட்போடு கூடியதாக, மங்களகரமாக, மிருதுவாக இருந்தால் எடுத்த பணி சிறப்பாக முடியும் என்று நம் புராதன ருஷிகள் பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளார்கள்.

  கத்தியை எடுத்த எதிரியைக் கூட நண்பனாக மாற்றும் விதமாக மிருதுவாக இனிமையாக நட்போடு உரையாடும் சத்தியசீலனாக அனுமனைப் புகழ்கிறான் ராமன். ராமனும் சாஸ்திர அத்யயனத்தினால் பண்பட்ட சொற்களால் பிரியமாக, இதமாக, சத்தியமாக, புன்சிரிப்போடு பேசும் ‘வாக்விசாரதர்’ என்று   ராமாயணத்தில் வர்ணிக்கப்படுகிறான்.

  உண்மையே பேசினாலும் அதனை மிருதுவாக நட்பாக பேச வேண்டும். இது காரிய சாதனையின் நோக்கம். பலன் கெடாமல்,  பணியை நிறைவேற்றும் நோக்கோடு உரையாடுபவர் தன்னையும் தன் சொற்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர்.

  மனித உறவுகளுக்கு பேச்சு ஒரு முக்கியமான  தொடர்புக் கருவி. பண்பாடு இல்லாமல், தெளிவில்லாமல், அறிவில்லாமல், பௌருஷமாகவும் ஆபாசமாகவும் பொய்யாகவும், பிறர் மனதை நோகடிக்கும் விதமாக வஞ்சனையும் கபடுமாக ஆத்திரப்பட்டு எடுத்தெறிந்து குத்திக்காட்டி திட்டி மரியாதை குறைவாக பேசும்  சொற்களையே ‘துருக்தம்’ என்கிறது இந்த வேதவாக்கியம்.

  சிலர் இந்த ‘துருக்தா’வை மட்டுமே தம் குணங்களாகக் கொண்டிருப்பர். அவர்களுடைய சகவாசத்தினால் பிறருடைய பணிகளும் உள்ளமும் கூட கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.

  அதனால்தான் மனித உறவுகளில் ‘துருக்தர்’களான தீஞ்சொல் பேசுபவர்களிடமிருந்து தூரமாக விலகி இருக்கச் சொல்லி வேதமாதா எச்சரிக்கிறாள்.

  வாயை கட்டுப்படுத்த இயலாத வாய்த் துடுக்குத்தனம் கூட ‘துருக்த’ குணமே. கடவுளையும் ரிஷிகளையும் சாஸ்திரங்களையும் நிந்திக்கும் சொற்களை பயங்கரமான பாவ வாக்குகளாக ‘சத்திய தரிசி’கள் கணக்கிடுகின்றனர். 

  நாவினால் பாவம்  செய்பவர்களின் சகவாசத்தால் தர்ம மயமான வாழ்க்கையில் இருந்து வழுவ நேருகிறது. நிந்தைகளைக் காதால் கேட்பது  கூட பாவத்தில் ஒரு வகையே. அதனால்தான் ‘பத்ரம் கர்ணோபி: ஸ்ருண்யாம’ என்கிறது உபநிஷத்து. ‘காதுகளால் சுபமான வசனங்களையே கேட்போமாக!’ என்ற விருப்பத்தை ரிஷிகள் வெளிப்படுத்துகிறார்கள்.

  சு+ உக்தம் =சூக்தம். இனிமையான சொற்களைப் பேசும் பண்பாடு உள்ளவர்களே மேதாவிகளாகவும் முக்கிய பதவிகளிலும் விளங்கினால் சமுதாயத்தில் வெறுப்புகளும் வேற்றுமைகளும் இருக்காது. அழகான சூழ்நிலை நிலவும்.

  தீஞ்சொல் பேசுபவர்  இருக்கும் இடத்தில் அமைதியும் சமரசமும் நிலவாது. சமுதாய நன்மை கோரும் வேத ரிஷிகள் ‘துருக்த’ங்களை நாம் பேசாமல் இருப்பதோடு அவற்றை பேசுபவர்களை நம்மிடம் நெருங்க விடாமலும் இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »