spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சோதனை ஆரம்பிக்கும் முன்னரே... அனுக்கிரகம் ஆரம்பித்து விடுகிறது!

சோதனை ஆரம்பிக்கும் முன்னரே… அனுக்கிரகம் ஆரம்பித்து விடுகிறது!

- Advertisement -
kanchi maha periyava
kanchi maha periyava

சோதனை செய்ய ஆரம்பிக்கும் முன்னரேயே அனுக்கிரகம் செய்ய ஆரம்பித்து விடுகிறது!

பக்தர்கள் மத்தியில் மிகப் பிரபலமான சம்பவம் இது.

ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி அறுபதுகளில் பிடியரிசித் திட்டம் முதலான வகையில் மடத்துக்கு வந்த அரிசி மொத்தத்தையும் மகா பெரியவா ராமேஸ்வரம் மடத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த வகையில் 1964-க்குள் சுமார் 250 மூட்டை அரிசி ராமேஸ்வரம் மடத்தைச் சென்றடைந்தது. அரிசி மூட்டைகளை வைக்க இடம் இல்லாமலும், எலித்தொல்லையைச் சமாளிக்க முடியாமலும் அந்த மடத்தினர் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல.

அரிசியை என்ன செய்வது என்று மடத்து மானேஜர் பல முறை பெரியவாளுக்குக் கடிதம் வாயிலாகக் கேட்டும் பெரியவா அதற்கு மறுமொழி தரவில்லை. ஒரு தடவை இதற்காகவே நேரில் வந்தும் பெரிவாளிடம் ‘கோபமாக’ முறையிட்டும் பார்த்து விட்டார்.

ஒரு பலனுமில்லை.

1964 டிசம்பரில் அடித்த புயலில் தனுஷ்கோடி அழிந்ததும், ராமேஸ்வரம் வெள்ளத்தில் தத்தளித்ததும் கற்பனைக்கு எட்டாத கோர நிகழ்வுகள். அந்தச் சமயத்தில் ராமேஸ்வரம் தீவு ஜனங்களில் வீடிழந்த எத்தனையோ குடும்பங்களுக்கு அன்னதானம் செய்வதற்கு இந்த அரிசிதான் பயன்பட்டது.

‘இது என்ன பெரிய விஷயமா?’ என்பது தற்காலத்தில் நியாயமான சந்தேகமாகத்தான் தெரியும். ஆனால், நள்ளிரவில் தனுஷ்கோடி அழிந்த சம்பவமே மறு நாள் காலைதான் வெளி உலகத்துக்குத் தெரியும். அன்று இருந்த தொலைத்தொடர்பு வசதிகள் அப்படி.

ஏற்கெனவே ராமேஸ்வரம் ஒரு தீவு. இந்நிலையில் போக்குவரத்துக்கும் வழியில்லாமல் போனால் நிவாரணப் பணியை எங்கே எப்படித் தொடங்குவது? அப்போதெல்லாம் போக்குவரத்து வசதிகளும் மிகக்குறைவு. மேலும், நாட்டில் அரிசித் தட்டுப்பாடும் அதிகமாக இருந்தது. எனவே, 250 மூட்டை அரிசி ஸ்டாக் என்பது ஒரு மினி அரிசி மலைக்குச் சமம்.

இந்தப் பின்னணியைப் புரிந்து கொணடு பார்த்தால் பெரியவா எப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான வேலையை மிகவும் சர்வ சாதாரணமாகச் செய்திருக்கிறார் என்பது புரியும்.

நிச்சயமாக இது வியப்புக்குரிய விஷயம்தான். ஆனால், எனக்குள் எழும் கேள்வியோ வேறு விதமானது. ‘இதுபோன்ற ஒரு பேரழிவு நிகழப் போகிறது என்பதைத் தனது தீர்க்கதரிசனத்தால் கண்டுகொண்ட அந்தத் தெய்வம், பாதிக்கப்பட்ட மக்களைப் பட்டினியில் இருந்து காத்து உயிர் வாழ வைத்த அந்தக் கருணாமூர்த்தி அந்த விபத்து நிகழாமல் அனுக்கிரகம் செய்திருக்கக் கூடாதா? குறைந்தது ஓர் எச்சரிக்கையாவது தந்திருக்கலாமே?’

இந்தக் கேள்விகளை நான் யாரிடமும் கேட்டதில்லை. முதல் காரணம், இவ்வாறு கேட்பதே அபசாரம், மரியாதைக் குறைவு.

இரண்டாவது காரணம், அவர்கள் சொல்லப் போகும் பதில்கள் ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவைதான். கர்மவினை, தர்மம் முதலிய விளக்கங்களைத் தாண்டி அவர்கள் வேறு எதுவும் சொல்லப் போவதில்லை. இத்தகைய விளக்கங்களை நான் எனக்குள் பல தடவை யோசித்துப் பார்த்திருக்கிறேன். அவை எனது ஐயங்களைப் போக்கவில்லை. மாறாக, அவை எனக்குள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. இயற்கையில் எதிரெதிர் விஷயங்கள் அருகருகே இருக்கின்றன. இரண்டும் ஒருசேர வாழ்கின்றன.

காரணம் என்ற ஒன்றை அறிய முடியாமல் மாயா வினோதமாக, லீலா விளையாட்டாக இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதில் அஞ்ஞான பாண்டமாக ஆறறிவு மனிதனையும் படைத்து, அவனுக்குத் தன்னுணர்வு என்கிற அகங்காரத்தையும் கொடுத்து, அலைபாயும் மனதையும் கொடுத்து, காரணம்-விளைவு என்கிற கர்ம விதியையும் ஏற்படுத்தி, அவற்றின் பலனை அந்த மனித ஜீவன் அனுபவிக்குமாறும் செய்த அந்தப் பரமாத்மனை அசுரன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், இது மட்டுமே முழு உண்மை அல்ல. புயலைக் கொடுத்த அந்த தெய்வம், புயலுக்குப் பல மாதங்கள் முன்னதாகவே நிவாரணத்துக்கான வேலைகளையும் மனித வடிவில் நின்று அனுக்கிரகித்ததும் உண்மைதானே!

ஆம், உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் காரணம் இல்லை, அதில் அந்த மாயப் பரம்பொருள் செய்யும் அனுக்கிரகத்துக்கும் காரணம் இல்லை. அதனாலேயே அதனை அவ்யாஜ கருணா (காரணமில்லாக் கருணை) என்று சொல்கிறார்கள்.

அதெல்லாம் சரி, இப்போது இதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று யோசிக்கிறீர்களா?

வேறொன்றுமில்லை. எனது நண்பர் ஒருவர் – ரொம்ப நேரம் டிவி நியூஸ் பார்ப்பவர் – தினசரி நாலைந்து பத்திரிகைகள் படிப்பவர். சோஷல் மீடியா அவருக்குப் பிராணவாயு. அவர் நேற்று ஃபோன் பண்ணினார். ராகுல், ஸ்டாலின், திருமா, உத்தவ், கேஜரிவால் போன்றவர்கள் கொரோனா பற்றிப் பேசிவரும் விஷயங்களை எல்லாம் என்னிடம் விலாவாரியாக விளக்கினார். முத்தாய்ப்பாக, ‘’இந்த ஆள் போனாத்தான் நாடு உருப்படுங்க. இல்லேன்னா இவன் இந்தியாவை மயானமா ஆக்கிடுவான்!’’ என்று சொல்லி முடித்தார்.

‘நண்பர் சொன்ன விஷயம் இருக்கட்டும், அவர் சொன்ன நபர்கள் யாராவது தற்போதைய சூழலில் பிரதமராக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று யோசித்துப் பார்த்தேன். ராமேஸ்வரம் புயலும் பெரியவா அனுக்கிரகமும் நினைவு வந்தன.

புயலை அனுப்பி ஒரு தீவை மிகவும் கோரமாக அழித்தொழித்த அதே பரம்பொருள்தான், புயலுக்குப் பல மாதங்கள் முன்னரே அரிசி மூட்டை வடிவில் தனது அனுக்கிரக மழையையும் பொழிந்தது. புயலுக்கான காரணமும் நமக்குப் புரிவதில்லை. அனுக்கிரகத்துக்கான காரணமும் நமக்குப் புரிவதில்லை.

அதேபோல, தற்போதைய கொரோனா கோரத்தாண்டவத்தை அனுப்பிய அந்த இறைசக்திதான், இதற்கு ஏழு வருடங்கள் முன்னரேயே – 2014 தேர்தலிலேயே – தனது அனுக்கிரகத்தையும் ஆரம்பித்து விட்டது. மோடிக்குப் பதிலாக இந்நேரம் ராகுலோ, உத்தவோ, இன்னபிற எக்ஸ் ஒய் இசட்டோ பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் நாட்டின் கதி என்ன ஆகியிருக்கும்?

ஆம், சோதிக்கும் தெய்வம் கருணையும் காட்டுகிறது அதிலும் வினோதமாக, சோதனை செய்ய ஆரம்பிக்கும் முன்னரேயே அனுக்கிரகம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.

  • வேதா டி.ஸ்ரீதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe