திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 15
பகலை இரவாக்கிய கதை
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழில் இடம்பெறும் பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே என்ற வரியில் மகாபாரதப் போரில் அர்ச்சுனுக்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகல் நேரத்தில் சூரியகிரகணம் ஏற்படுத்திய கதை இடம் பெறுகிறது.
ஸ்ரீகிருஷ்ணர்அவ்வாறுசெய்வதற்குக்காரணம்ஜயத்ரதன். இவன் திருதராஷ்டிரரின் ஒரே மாப்பிள்ளை, கௌரவர்களின் ஒரே சகோதரி துச்சலையின் கணவன், சிந்து தேசத்து அரசன். பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஏதோ ஒரு வேலையாகக் காட்டு வழியே சென்றவன், அங்கே திரௌபதி தனிமையில் இருப்பதைக் கண்டு, அவளைக் கடத்திசென்று விடுகிறான்.
பாண்டவர்கள் அவனைத் துரத்தி வந்து போரில் தோற்கடிக் கிறார்கள். தரும புத்திரர் அர்ச்சுனன் பீமனிடம் ஜயத்ரதன் தங்கள் சகோதரியின் கணவன் என்பதால் கொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். தண்டனையாக அவன் தலையில் ஐந்து உச்சி குடுமிகள் மட்டும் வைத்து மொட்டை அடித்து இனி நான் பாண்டவர்களின் அடிமை என்று சொல்ல வைத்து துரத்தி விடுகின்றனர்.
அவமானம் மேலிட ஜயத்ரதன் தன் நாடு திரும்பாது பரமசிவனை வேண்டிக் கடும் தவம் செய்கிறான். சிவபெருமான் அவனுக்கு அர்ச்சுனனைத் தவிர பிற பாண்டவர்களைப் போரில் ஒரு நாள் தடுத்து நிற்கும் வரத்தை அருளுகிறார்.
குருக்ஷேத்திரப் போரின் 13ஆம் நாள் போரில் துரோணர் தலைமையில் கௌரவர் சேனை சக்கிரவியூகம் அமைத்து அதில் யுதிஷ்டிரரை சிக்க வைக்கத் திட்டமிடுகிறது. சுஷர்மன் எனும் அரசனிடம் அர்ச்சுனனை வலிய போருக்கு அழைத்து அவனை போர்க்களத்தில் இருந்து வெகு தொலைவுக்கு கூட்டிச் செல்ல துரோணர் பணிக்கிறார்.
சக்கரவியூகத்தைப் பிளந்து சென்று வரும் ஆற்றல் அர்ச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் மட்டுமே தெரியும். இது தவிர அர்ச்சுனன் மகன் அபிமன்யுவுக்கு வியூகத்தின் உள்ளே செல்லத் தெரியும் ஆனால் வெளியே வரும் சூட்சுமம் தெரியாது. அபிமன்யு வியூகத்தைப் பிளந்து உள்ளே செல்கையில் அவன் பின்னேயே பாண்டவரில் மற்றோரும் தொடர்வது என்று முடிவாயிற்று.
துரோணர் திட்டமிட்டிருந்தபடி அர்ச்சுனனை வெகு தூரம் கொண்டு சென்றாயிற்று. சக்கரவியூகப் படையுடன் யுதிஷ்டிரரையும் தனிமைப்படுத்திக் கைது செய்ய வேண்டியது தான் பாக்கி. சற்றும் எதிர்பாராமல் அபிமன்யு வியூகத்தைப் பிளந்து சென்று கௌரவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் துணையாக பாண்டவர்கள் செல்ல முற்பட்டபோது ஜயத்ரதன் அவர்களைத் தடுத்து விடுகிறான். வியூகத்தின் உள்ளே சிக்கிய அபிமன்யு வெளியே வரும் சூட்சுமம் அறியாமல் போரிட்டுக் கொண்டிருந்தான். துரியோதனன் தரப்பு வீரர்கள் பலரும் யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு போரிட்டு அவனைக் கொன்று விடுகிறார்கள்.
அன்றைய போர் முடிந்து அர்ச்சுனன் வந்தான். நடந்தவற்றைக் கேள்விப் பட்டான். மனம் பதறினான். அபிமன்யுவுக்கு உதவ முன் சென்ற பாண்டவர்களைத் தடுத்து நிறுத்திய ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்வேன், அப்படி முடியவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று சூளுரைத்தான்.
அன்றைய போரில் ஜயத்ரதனை ஒளித்து வைக்கிறார்கள். சூரியாஸ்தமனம் நெருங்கியது. மனம் ஒடியும் நிலையில் பார்த்தன் நிற்க கிருஷ்ணர் அவனிடம் காண்டீபத்தைத் தயாராக ஏந்தி அம்பு தொடுக்கக் கூறுகிறார். அதற்குள் ஆதவன் மேற்குத் திசையில் மறைந்தான். (கிருஷ்ணனின் சுதர்சன சக்கரத்தால் மறைக்கப் பட்டது) எக்காளத்துடன் பாதுகாப்பிலிருந்து ஜயத்ரதன் வெளிப்பட்டான். கிருஷ்ணன் சக்கரத்தை மீட்கவே மேல் திசையில் சூரியன் தோன்றியது. ஒரு நொடியில் பார்த்தனின் அம்பு ஜயத்ரதனின் தலையைக் கொய்தது.
இவ்வாறு தனது பக்தனுக்காக இரதம் செலுத்திய ஸ்ரீகிருஷ்ண பகவான் தன் பக்தனுக்காக வட்டத் திகிரியான சக்கர ஆயுதத்தால் சூரியனை மறைத்த கதை இவ்வரிகளிலே காணப்படுகிறது.