ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை.
மனம் கலங்கிய அவரது மனைவி, .குருவாயூரப்பனிடம், “கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும். அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது கணவர் பூரண குணமடைந்தார்.
வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று, ஸன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும்போது அந்தப் பெண்மணியின் கழுத்தில் திருமாங்கல்யம் முன்புபோலவே இருந்தது.
மறுபடியும் அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மீண்டும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மின்னியது. இவ்வாறு பத்து தடவை ஸமர்ப்பித்தும் மாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருக்கக் கண்டார்கள். ஏதோ அபசாரம் செய்துவிட்டோம் என்று அவர்கள் மிகவும் கலங்கினார்கள்.
அதே நேரம் ஸன்னிதியில் மேல்சாந்தி தியானித்துக் கொண்டிருக்கும்போது, அப்பன் அவரது தியானத்தில் வந்து, “அந்தப் பெண்ணின் திருமாங்கல்யத்தை வாங்க எனக்கு இஷ்டமில்லை, மறுபடி அவள் வரும்போது அதை ஸமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு” என்று உத்தரவானது. மேல்சாந்தியும் அவ்வாறே சொன்னார்.
அப்பனின் கருணையைக் கண்டு அதிசயித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை, குருவாயூரப்பன் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார் என்று தெரிகிறது.
(சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீய உபன்யாஸத்தில் கேட்டது…)