spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: காலகேய நிவாத அசுரர்கள்!

திருப்புகழ் கதைகள்: காலகேய நிவாத அசுரர்கள்!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 208
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சிந்துர கூரமருப்பு – பழநி
காலகேய நிவாத அசுரர்கள்

சூதில் தோற்ற பின்னர் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தனர். அப்போது அர்ச்சுனன் திவ்யாஸ்திரங்களைப் பெறுவதற்காக சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய இமயமலைக்குச் சென்றான். தவ முடிவில் சிவபெருமான் அவனுக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கினார். அப்போது இந்திரன் அர்ச்சுனனை இந்திரலோகத்திற்கு அழைத்துச் சென்றான். அச்சமயத்தில் அர்ச்சுனன் மானுடன் தானே என இந்திராணி பழித்துப் பேசினாள். அப்போது இந்திரன் அவளுக்கு அர்ச்சுனனும் கிருஷ்ணரும் காண்டவ வனத்தை எரித்த கதையைச் சொன்னான். மேலும் அவனுக்கு கற்பகப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றை சூட்டினான். மற்றும் பல தேவர்கள் அர்ச்சுனனை மனமகிழ்ச்சியோடு பாராட்டிப் பலவகை அன்பளிப்புகளை வழங்கினர்.

இந்திரன் அர்ச்சுனனிடம் அப்போது ஒரு வேண்டுகோள் விடுத்தான்; “அர்ச்சுனா! எனக்கும் என் நாட்டிற்கும் தேவர்களுக்கும் எப்போதும் தீமைகளை செய்து கொண்டிருக்கிற அகரர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்காக அந்தக் கொடியவர்களை அழிக்கும் பொறுப்பை நீ மேற்கொள்ள வேண்டும். அன்பு உரிமையோடு இந்தப் பணியை ஒரு கட்டளையாகவே இடுகிறேன்”. “தங்கள் கட்டளை எதுவானாலும் பணிவோடு நிறைவேற்றுவதற்குக் காத்திருக்கிறேன். தெளிவாகக் கூறியருள வேண்டும்.” என்று அர்ச்சுனன் பதிலிறுத்தான்.

“கடற்பகுதிகளின் இடையே ‘தோயமாபுரம்’ என்ற தலைநகரை அமைத்துக் கொண்டு ‘நிவாதகவசர்’ என்னும் பெயரையுடைய அசுரர்கள் வசித்து வருகிறார்கள். தெய்வங்களும் தேவர்களுமே அந்த அசுரர்களை எதிப்பதற்கு அஞ்சி ஒடுங்கி அவர் செய்யும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்! உலகமே ஒன்று திரண்டு போரிட்டு வெல்ல முடியாத தீரர்கள் நிவாதகவசர்கள். அவர்களுடைய போர் வலிமையும் தவவலிமையும் அழியாத இயல்புடையவை. இன்று வரை மற்றவர்களை அழித்திருக்கிறார்களே ஒழிய தங்களுக்குச் சிறு அழிவையும் கண்டதே இல்லை. மூன்று கோடி எண்ணிக்கை உடையவர்களாகிய நிவாதகவசர்களை நீ உன்னுடைய தனிச்சாமர்த்தியத்தாலேயே அழித்தொழிக்க முடியும். நீ சென்றால் வெற்றியுடனேயே திரும்பி வருவாய் என்று நம்புகின்றேன்.” என்றான் இந்திரன்.

அர்ச்சுனன் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டான். அப்போது பொற்கவசம் ஒன்றையும் சிறந்த தேரையும், தேரோட்டும் தொழிலில் வல்லவனாகிய ‘மாதலி’ என்னும் பாகனையும் அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தான். அர்ச்சுனன் பெற்றுக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். வானுலகம் முழுவதுமே அவனை வாழ்த்தி வழியனுப்பியது.

தேர் சென்று கொண்டிருக்கும்போதே பாகனை நோக்கித் தோயமாபுரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை அர்ச்சுனன் விசாரித்தான். கீழ்க் கடலின் இடையே அந்த அரக்கர்களின் தலைநகரம் அமைந்திருப்பதாகவும் அங்கே போக வேண்டும் என்றும் அவன் கூறினான். மாதலியின் ஏற்பாட்டால் அர்ச்சுனனுக்கும் அவனுக்கும் தோயமாபுரத்திற்குத் தேர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுவதற்காகச் சித்திரசேனன் என்பவனும் உடன் வந்தான். அப்போது அவ்வசுரர்களைப் பற்றிக் கூறுமாறு அர்ச்சுனன் மாதலியைக் கேட்டான்.

அதற்கு மாதலி, “நிவாதகவசர்கள் கண்டவர் பயப்படும்படியான தோற்றத்தை உடையவர்கள். இடி முழக்கம் போலப் பேசுகிற சினம் மிக்க சொற்களை உடையவர்கள். மலைக் குகை போன்ற பெரிய வாயை உடையவர்கள். நெருப்புக் கோளங்களோ எனப் பார்த்தவர்கள் அஞ்சி நடுநடுங்கும் விழிகனள உடையவர்கள். போர் எனக் கேட்டதுமே பூரித்து எழுகின்ற தோள்களை உடையவர்கள். மகாவீரர்கள். ஈட்டி, மழு, வளைதடி, வில், வாள் முதலிய படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதில் நிகரற்றவர்கள். அவர்களை வெல்ல உலகில் எவராலும் முடியாதென்று மற்றவர்களை எண்ணச் செய்பவர்கள்.” மாதலி இவ்வாறு கூறி வந்த போதே தேர் தோயமாபுரத்தை அடைந்து எல்லைக்கு வெளியில் நின்றது. தங்களோடு வந்திருந்த சித்திரசேனனை நிவாதகவசர்களிடம் தூதாக அனுப்பினர் அர்ச்சுனனும் தேர்ப்பாகன் மாதலியும். சித்திரசேனன் அர்ச்சுனன் போருக்கு வந்திருக்கும் செய்தியை உரைப்பதற்காகத் தோய்மாபுரத்திற்குள்ளே சென்றான்.

arjunana
arjunana

மூன்று கோடி அசுரர்களும் சினத்தோடு, படைகளோடு அர்ச்சுனனை எதிர்க்கப் புறப்பட்டனர். உக்கிரமான போரின் நடுவில் அர்ச்சுனன் பிரம்மாஸ்த்ரத்தை எடுத்துச் செலுத்தினான். சக்திவாய்ந்த அந்த அஸ்திரத்தின் விளைவாக அசுரர்களில் பெரும் பகுதியினர் உயிரிழந்தனர். எஞ்சியிருந்தவர் அவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். ஆனால் என்ன மாயமோ? சூனியமோ? திடீரென்று செத்தும் உடல் சிதைந்தும் கிடந்த எல்லா அசுரர்களும் உயிர் பெற்று எழுந்து போருக்கு வந்தார்கள். இறந்தவர் பிழைத்து எழுந்து வரும் அந்த விந்தையைக் கண்டு அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அசரிரீயாக ஒரு குரல் அவனுக்கு அந்த நிலையில் ஊக்கமளிக்கும் அருமருந்து போல் செவிகளில் நுழைந்தது. பாசுபதாஸ்திரத்தைப் பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.

சிவபெருமானால் அளிக்கப்பட்ட மாபெரும் ஆற்றலமைந்த அந்த அஸ்திரம் மூன்று கோடி அசுரர்களையும் ஒரு நொடியில் சாம்பலாக்கியது. தோயமாபுரம் சூனியமாகியது. அங்கே வாழ்ந்து வந்த தீமையின் உருவங்கள் அழிந்து விண்ணகம் புகுந்துவிட்டன. வெற்றி வீரனாக அர்ச்சுனன் தேரில் வீற்றிருந்தான். மாதலிதேரை வானவர்கோ நகரமாகிய அமராபதியை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியால் விரைந்த அவர்கள் உள்ளங்களைப் போலவே தேர்ச்சக்கரங்களும் உருண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,893FollowersFollow
17,300SubscribersSubscribe