
பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?
பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம் சென்று, “ஐயா, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம்?” என்று கேட்பார்கள். அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக துறவி இந்த ஸ்லோகத்தை கூறுவார்.
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான மங்களகரமான தருணம் ஒவ்வொரு தனிநபரின் கைகளிலும் உள்ளது. நீங்கள் நித்திய ஒழுக்கத்தில் நம்பிக்கையைப் பெறும்போது, ஆன்மீக ஒழுக்கத்தின் கட்டளைகளை நீங்கள் செயல்படுத்தும்போது, மனம் சமநிலைக்கு கொண்டு வரப்படும்போது, அது ஆத்மாவில் நிலையாக நிலைநிறுத்தப்படும்போது, அந்த நொடியே மனிதன் விடுதலை பெற்று ஜீவன்முக்தனாக மாறுகிறான்.
ஜீவன் முக்தி என்பது ஒரு ஆன்மீக நிலை. ஒரு மனிதன் இந்த நிலையை அடையும்போது, அவன் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறான். ஆதிசங்கரர் தாம் இயற்றிய பஜகோவிந்தத்தில்
சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சல தத்வே ஜீவன் முக்தி:
என்று கூறுகிறார். இந்த வரிகள், நல்லோர் சகவாசத்தால் பற்றின்மை உண்டாகும், அதன் பிறகு மனத்தெளிவு கிடைக்கும், அதன் பிறகு நிலையான உண்மை புலப்படும், அதுவே ஜீவன் முக்திக்கு இட்டுச் செல்லும் என்பதைக் குறிக்கிறது.
இப்போது, விடுதலைக்கு அல்லது ஜீவன் முக்திக்கு வழிவகுக்கும் அந்த நடைமுறை என்ன? ஆசைகளை கைவிட வேண்டும். ஜஹதி என்பதற்குப் பதிலாக பிரஜஹதி என்ற வலுவான சொல்லை இறைவன் பயன்படுத்துகிறார். இதன் மூலம் ஆசைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சில ஆசைகளை மட்டுமல்ல, அனைத்து ஆசைகளையும், மனதின் உள் இடைவெளிகளில் சிறிதும் எச்சத்தை விட்டுவிடாமல். இது தவிர்க்க முடியாத மற்றும் உலகளாவிய சட்டம். வேறு வழியில்லை. மனதின் குழியில் ஆசையின் மிகச்சிறிய விதை விடப்பட்டாலும், அது முளைத்து, அறியாமலேயே வளரும், மேலும் தேடுபவர் சுய நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மாயையின் சேற்றில் மூழ்கும் ஆபத்து எப்போதும் உள்ளது.
அதைத்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எல்லா ஆசைகளையும் ஓரளவுக்குக் கைவிடுவது அல்லது சில ஆசைகளை மட்டும் முற்றிலுமாக கைவிடுவது போதாது. எல்லா ஆசைகளையும் என்றென்றும் முற்றிலுமாகத் துறக்க வேண்டும்.
ஆசைகளைத் துறக்க முறைப்படி வாழவேண்டும். அதாவது அட்டாங்கயோக முறையான இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றைக் கடைபிடித்து வாழவேண்டும்.
அட்டாங்கயோக முறை
இயமம்
இவற்றில், இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உண்மையைக் (சத்தியம்) கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதற்படி நிலையாகும்.
சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாதாரண அறங்களில் முதலாவது அன்பு அதாவது பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல். அடுத்தது உண்மையையே பேசுதல் அல்லது சத்தியம் பேசுதல். சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பது. மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே பொய்மை எனப்படும் அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே இறைவன் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார்.
சத்தியத்தின் விளக்கம்
முழுமையான, பிறருக்குத் துன்பம் தராத வாழ்க்கைக்கு, அதாவது அகிம்சைக்கு நமது நீதி இலக்கியங்களில் சில விலக்குகள் இருக்கின்றன. அறத்தினைக் காப்பதற்காக போர் புரியும் போதும், வேறு சில சமயங்களின் போதும் அகிம்சைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது. ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவர் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘அவன் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவர் அப்படிச் சொல்வதால் இவருக்கோ மக்களுக்கோ பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வீணாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.
ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சத்தியமாகிவிடுமா? ஆகாது. ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு வரையறையை பெரியோர் வகுத்திருக்கின்றனர்.
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு பலனில்லாமல் போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.
‘சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு. ஆசையும் கோபமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. நன்மையை உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக ஆசை கோபமற்ற நல்ல மனம் வேண்டும்.
சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் விளைவு உண்டு – அதாவது அந்த சத்தியசந்தனுக்குத் தெரியாமலேயே ஒரு விளைவு உண்டாகும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே நிஜ வாழ்க்கையில் சத்தியமாக நடந்துவிடும். அபிராமி பட்டரின் கதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நியமம்
நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைவது ஆகும். இது கிரியை எனப்படும். தினசரி குளித்தல், சுத்தமான ஆடை அணிதல், நம் சுற்றுப்புரத்தைத் தூய்மையாக வைத்தல், நல்ல உணவுப் பழக்கத்தைக் கொண்டிருத்தல் ஆகியவை இதனுள் அடங்கும்.
ஆசனம்
இது உடற்பயிற்சி நிலைகளைக் குறிக்கும். அதாவது யோகாசன முறைகளைக் குறிப்பிடும். பிராணயாமம் என்பது மூச்சினைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளாகும். மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல் என்றும் இதனைக் கொள்ளலாம். பிரத்தியாகாரம், புலனடக்கத்தைக் குறிக்கின்றது. உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல் பிரத்தியாகாரமாகும். தாரணை மன ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. தியானம் என்பது இறைவனை உணரும் நிலையாகும். ஒன்றையே நினைத்து எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல் என இதனைக் கூறலாம். இறைவனுக்குச் சமனான பேரின்ப நிலையை அடவைவதை சமாதி எனக் குறிப்பிடுகிறோம்.
இயமம் என்பதற்கு கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளலாம். யோக நெறியில் ஈடுபடுபவன் சுய கட்டுப்பாடுகளாகச் சில விதிகளை கடைபிடித்தல் வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இது தன்னாளுமைப் (Personality) பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை பெற்றவர்களால்தான் புறத்தூய்மையை எளிதில் பெற இயலும்.
நான் தினந்தோறும் குளித்து, தூய ஆடை உடுத்தி, இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காக எனது தந்தையார், எனக்குத் தந்த அறிவுரை இது.



