
தென்காசியில் உள்ள குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி என்ற துரை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் பிரதான வாசல், வடக்கு வாசலில் ராஜகோபுரம் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. அறநிலையத் துறை சார்பில் ராஜகோபுரம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ராஜகோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான வேலைகளை தொடங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.