spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

- Advertisement -

-குச்சனூர் கோவிந்தராஜன்-

இறைவனால் படைத்து காக்கப்படும் இப்பூமி பல சிறப்புகளைக் கொண்டது . பூமியிலும் மிகச் சிறப்பு உடையது பாரதம் . பூமியின் பிற பகுதிகளில் பிறப்பதை விட பாரதத்தில் பிறப்பதே பெருமை தருவதாகும் .

புண்ணிய பூமியாம் பாரதத்தின் அமைந்துள்ள கோயில்கள் பழமையும் புனிதத்துவம் மிக்கவை . புராணங்களோடும் இறைவனோடும் நெருங்கிய தொடர்புடைய இக்கோயில்களுக்கு செல்வதால் நமக்கு மன அமைதியும் வாழ்வில் உயர்வும் கிடைக்கும். இறைவனின் அருள் பெற்றவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களில் இறைத்தன்மை மிகுந்து இருக்கும் .

இத்தகைய கோயில்களில் செய்யப்படும் வழிபாடுகள் உடனடி பலனை தரும் சக்தி மிக்கவை தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் இறைவனே உருவாக்கும்படி கட்டளையிட்டு அடியார்கலாளும் அரசர்களாலும் கட்டப்பட்டவை. இக்கோயில்களின் சிறப்புகளையும் புனிதத்தையும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. உலகைப் படைத்து அருளிய இறைவன் தன் பணிக்கு உதவும் மக்களின் தேவைகளை உடனே நிறைவேற்றவும் பல தேவர்களையும் படைத்தான்.

அப்படி இறைவன் படைத்தவர்களில் தனித்தன்மையும் ஈசன் என்ற பட்டமும் பெற்று மக்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தந்து வாழ்க்கையை வளமாகவும் நலமாகவும் நேர்மை உடையதாகவும் அமைத்துக் கொடுக்கும் சனீஸ்வரனுக்கு பாரதத்தில் சில இடங்களில் மட்டுமே தனி கோயில்கள் அமைந்துள்ளன. சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு உடையதாகவும் பகவானின் பூரண அருள் நிறைந்ததாகும் சுயம்புவாய் தனித்தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ள கோயில் குச்சனூரில் அமைந்துள்ளது .

வயல்கள் தோட்டங்கள் தோப்புகள் வாய்க்கால் ஆற்றங்கரை என அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்து எழில் கொஞ்சும் இவ்வூரைக் கண்ட தேவர்கள் பூமியிலேயே வாழ்ந்து விடலாம் என்று எண்ணும்படியான சிறப்புமிக்கது குச்சனூர் . குச்சனூர் சனிபகவான் எப்படி கோயில் கொள்ள வந்தார் என்பதை தினகரன் மான்மியம் எனும் நூல் விளக்குகிறது .

தினகரமான்மியம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தினகரன் மான்மியம் என்னும் நூலில் சனிபகவான் எப்படி எதற்காக இங்கு கோயில் கொண்டார் என்ற விவரம் சொல்லப்பட்டுள்ளது . மணி நகரம் எனும் நகரைத் தலைநகராக் கொண்டு குலிங்க நாட்டை தினகரன் எனும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான் .

இயற்கையின் அத்தனை வளங்களையும் கொண்டதாக அமைந்து இருந்த இந்நாட்டை ஆண்ட அரசனின் கீழ் வாழ்ந்த மக்கள் எந்த குறையும் இல்லாமல் நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்தனர் . ஆனால் அரசனான தினகரனுக்கும் அரசியான வந்துரு வைக்கும் மட்டும் மனக் குறை ஒன்று வெகு நாளாய் நீடித்திருந்தது .

புத்திரன் இல்லாவிட்டால் புத் எனும் நரகத்தை அடைந்து விடுவோமே என்ற கவலையை விட தனக்குப் பின் தன் மக்களாகிய , மக்களை வழிநடத்த நல் மகன் வேண்டுமே என்று கவலைப்பட்டனர் . மன்னனின் நிலைகண்டு வருந்தி மக்களும் தெய்வத்திடம் வேண்டினர் . மக்கள் மன்னனுக்காக வேண்டுவதையும் அரசனின் அற வழிப்பட்ட ஆட்சியையும் நேரில் காண தேவ மங்கையர் தினகரன் அரசவைக்கு வந்தனர் .

அரசனின் வரவேற்பினை ஏற்ற தேவ மங்கையர் அரசன் வழங்கிய பரிசுகளை ஏற்க மறுத்தனர் . பிள்ளை இல்லாதவரிடம் பொருட்கள் பெறுவதை வேதம் ஏற்கவில்லை என்பதை எடுத்துக் கூறினர். பெரிதும் வேதனை அடைந்த அரசன் தனக்கு புத்திரப்பேறு கிடைக்க சிறந்த வழியைக் கூறுமாறு வேண்டினார் . அரசனின் அன்பில் கட்டுண்ட தேவ மங்கையர் தலைநகரில் உள்ள பிள்ளைகள் அனைவரையும் எடுத்து வளர்க்க வேண்டும் அப்படி வளர்க்கும்போது பிராமண பிள்ளை ஒருவன் வந்து சேர்வான் பிள்ளையைக் கண்டு உச்சிமுகர்ந்து அணைக்கும் போது உன் அரசிக்கு பால் சுரக்கும் அதன்பின் புத்திர பாக்கியம் ஏற்படும் என்று கூறி தேவருலகம் திரும்பினர் .

அரசன் உடனே மிகவும் மகிழ்ந்து நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தான் . அத்துடன் வேத பண்டிதர்களுக்கு எல்லாம் பரிசுப் பொருட்களை கொடுத்து மகிழ்வித்தார் . பின்னர் நகரில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தன் அரண்மனைக்கு வரவழைத்து மகிழ்வோடு வளர்த்து வந்தான் . சிலமாதங்களில் ஒரு பிராமணர் தன் மனைவியோடும் குழந்தையோடும் அரசரைத் தேடி வந்தார் . அவர் கையில் குழந்தை இருப்பதை கண்டு பெருமகிழ்வுடன் வரவேற்ற அரசன் தங்களுக்கு உதவும் பாக்கியத்தைத் தாருங்கள் , தாங்கள் கேட்கும் எதையும் செய்ய காத்திருக்கிறேன் என்றார் .

அரசனின் உபசரிப்பை ஏற்று மகிழ்ந்த பிராமணர் குழந்தையை வளர்க்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை எனவே தாங்கள் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதை வேண்டவே வந்தோம் என்றார் . பாலைவனத்தில் பருக பால் பெற்றவன் போல் பெரிதும் மகிழ்ந்த அரசன் வேதியர்க்கு பொன்னை அள்ளிக் கொடுத்து அனுப்பிவைத்தான் . வேதியரிடம் பெற்ற குழந்தையை தன் மனைவி அரசி விந்துறுவையிடம் கொடுத்தான் . குழந்தையை அள்ளி அணைத்த நொடியில் அவளுக்கு பால் சுரந்த பாலை குழந்தைக்குக் கொடுத்து மகிழ்ந்தாள். இப்பிள்ளையே தன் வாழ்க்கையை விளங்க வைக்க வந்த பிள்ளை என்பதை உணர்ந்த அரசனும் அரசியும் பெரிதும் மகிழ்ந்தனர் .

மிகுந்த அன்போடும் ஆசையோடும் பிள்ளையை வளர்த்து வந்த காலத்தில் அரசி கருவுற்றாள் . பிராமணனின் குழந்தைக்கு சந்திரவதனன் என்றும் அரசிக்கு பிறந்த குழந்தைக்கு சாதகன் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்த அரசனும் அரசியும் இருவரையும் இரு கண்களாய் எண்ணி வளர்த்தான் . இருவரும் கலைகளைக் கற்று தேர்ச்சி பெற்றனர் . தனக்கெனப் பிள்ளை பிறந்த போதும் அரசன் பிராமண பிள்ளைக்கு முடிசூடினான் .

பிராமண பிள்ளையான சந்திரவதனன் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் ஒருநாள் தந்தையின் ஜாதகத்தைப் பார்த்த போது தந்தையை சனிபகவான் பிடிக்க இருப்பதை அறிந்தான் . பல சாஸ்திர விற்பன்னர்களுடன் விவாதித்தான் பெரும் துன்பம் தந்தைக்கு வரப்போவதை அறிந்த சந்திரவதனன் அதை மாற்ற எண்ணி சனிபகவானை மிகுந்த கட்டுப்பாடுடன் தன் உடலை வருத்தி வழிபட்டான் .

பக்தர்கள் மேல் மிகுந்த அன்பு கொண்ட சனி பகவான் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் . தன் தந்தையை பிடிக்காது இருக்க வேண்டும் என்றான் . தர்மத்தின்படி நடக்கும் நான் அதில் தவறு செய்யமாட்டேன் உனக்காக ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை மாதங்கள் வேண்டுமானால் பிடிக்கிறேன் என்றார் . சந்திரவதனன் மகிழ்ந்தாலும் இதையும் மாற்ற எண்ணினான் வரம் தந்த பகவான் மறைந்தார். தந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட சந்திரவதனன் மீண்டும் சனி பகவானை நோக்கி பூஜைகள் செய்து அவர் அருளைப் பெற எண்ணி கடுமையான பூஜைகளை செய்ய அரண்மனை சரியாக இருக்காது என்று எண்ணி அவன் ஓரிரவில் அரண்மனையை விட்டு காட்டுக்குள் புகுந்தான் .

காட்டில் நெடுந்தொலைவு பயணித்த சந்திரவதனன் இயற்கை எழில் சூழ்ந்த செண்பக மரங்கள் நிறைந்த சுரபி நதியின் கரையை பூஜை செய்ய சரியான இடம் என்று நினைத்து அங்கேயே பூஜையைத் தொடர்ந்தான் . சந்திரவதனன் தொடர் பூஜைகளில் மிக மகிழ்ந்த சனீஸ்வர பகவான் மீண்டும் தோன்றி வேண்டிய வரத்தை கேட்கும் படி பணித்தார் . தந்தையை பிடிக்காமல் தன்னை பிடிக்குமாறு வேண்டினான் . தனக்கென கேட்காமல் வளர்த்த தந்தையின் நலனை வேண்டிய பாலகனின் உயர் குணத்தை எண்ணி மகிழ்ந்த பகவான் மேலும் இரக்கம் கொண்டார். ஏழரை நாளிகை மட்டும் உன்னை பிடிப்பேன் .

அவ்வேளையில் பெரும் பழிச்சொல் வரும், உயிர் துறக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்தார். ஆனாலும் சந்திரவதனன் தந்தைக்காக பெரும் துன்பத்தை ஏற்ப தாய் வாக்களித்தான் . தன்னோடு உறங்கிக்கொண்டிருந்த அண்ணனை காணாது தவித்த சாதகன் அண்ணனைத் தேடி காட்டிற்குள் புகுந்தான் . விடிந்தபோது இரண்டு பிள்ளைகளையும் காணாது தவித்த அரசன் சந்திரவதனன் பிள்ளைகளை தேடி வர காவலர்களை அனுப்பினான் .

சந்திரவதனனைக் காணப் புறப்பட்ட சாதகன் வழிதவறி காட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தான் . இரண்டு பிள்ளைகளையும் தேடிய காவலர்கள் சந்திரவதனன் பூஜை செய்யும் இடத்தை அடைந்தனர் . அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது சந்திரவதனன் சாதகனைக் கொன்று அவன் உறுப்புக்களை எல்லாம் தனித்தனியாக வைத்து பூஜை செய்து கொண்டிருந்தான் . இதைக் கண்ட காவலர்கள் உடனே அரசனிடம் தெரிவிப்பதற்காக ஓடிச்சென்றனர் . செய்தி கேட்ட அரசன் மிகுந்த கோபம் கொண்டான்.

ஊரார் பிள்ளையை தன் பிள்ளையாய் வளர்த்த போதும் அவன் ஊறு செய்தானே என்றெண்ணி மிக வருத்தமும் கோபமும் கொண்டான். உடனே சந்திரவதனன் இழுத்து வந்து மரண தண்டனை கொடுக்குமாறு ஆணையிட்டான் . அரசனின் ஆணையை ஏற்ற காவலர்கள் அச்செயலை செய்வதற்காக சந்திரவதனனை அடைந்தனர். சந்திரவதனனை பலவாறு கூறி வருமாறு அழைத்தனர்.

பூஜையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்த சந்திரவதனன் வருவதாகத் தெரியவில்லை , உடனே காவலர்கள் அப்படியே அவனை தூக்கிக்கொண்டு தண்டனை கொடுக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கே சந்திரவதனனை வெட்டுவதற்கு உயர்த்திய நொடியில் சாதகன் வந்து நின்றான். எதற்காக இந்த தண்டனை கொடுக்கப்படுகிறதோ அதன் காரணமே இல்லாது போனது எண்ணிய காவலர்கள் திகைத்தனர்.

அரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அப்போது அரசன் பெரும் குழப்பத்தில் இருந்தான் அச்சமயத்தில் தோன்றிய சனி பகவான் அனைத்து செயல்களுக்கும் நானே காரணம் என்று நடந்தவற்றையெல்லாம் விளக்கி கூறினார். பின்னர் சனிபகவானே சந்திரவதனுக்கு மீண்டும் இளவரசனாய் முடிசூட்டி வைத்தார்.

கோயில் கட்டுதல்

பின்னர் சந்திரன் வதனன் பூஜித்த இடத்திலேயே தனக்கு கோயில் கட்டுமாறு அரசனுக்கு ஆணையிட்டார் . சந்திரவதனன் பூஜித்த இடம் மிகுந்த தெய்வீகத் தன்மை உடைய இடம் . எனவே அவ்விடத்திலேயே நான் இருந்து என்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் நல்ல பலன்களைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிப்பேன் என்றும் கூறினார். பெரிதும் மகிழ்ந்த அரசன் அவ்விடத்தை நோக்கி சென்றார். அங்கிருந்து மறைந்த சனீஸ்வர பகவான் சந்திரவதனன் பூஜித்த இடத்தில் சுயம்புவாக தோன்றி னார் .

தரையைப் பிளந்துகொண்டு முக்கோண வடிவிலான ஓர் லிங்கம் போல் சனீஸ்வர பகவான் அங்கு காட்சி அளித்தார் . சனி பகவான் சுயம்புவாக தோன்றியதைக் கண்டு மகிழ்ந்த அரசனும் மற்றவரும் சனிபகவான் கட்டளையிட்டபடியே அங்கு சிறு கோயிலை கட்டினர். குச்சிப் புற்களால் வேயப்பட்ட அக்கோவில் மிகுந்த அழகாக்
காட்சியளித்தது . குச்சிகளால் கோயில்கொண்ட பகவானை குச்சன் என்று மக்கள் அழைத்தனர் . அதனால் குச்சன் குடிகொண்ட ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் ஏற்பட்டது. செண்பக மரங்கள் சூழ்ந்த இந்த ஊருக்கு செண்பகநல்லூர் என்ற பெயரும் உள்ளது.

சனி பகவான் திருமேனியில் விபூதி பட்டையும் ,திருமண் காப்பும் , அழகுற இருந்தது . ஆறு கண்களும் நான்கு கரங்களும் கொண்டதாக அமைந்த இத் திருமேனி காட்டும் குறியீடு என்னவென்றால் முப்பெரும் கடவுள்களின் அம்சமும் திருமேனியில் அடங்கி உள்ளது என்பததையே காட்டுகிறது. மூன்று தெய்வங்களின் அம்சமும் கொண்ட சனிபகவானை வணங்கினால் நமது துயரெல்லாம் தொலைந்து போகும் என்பதில் ஐயமில்லை . இக்கோயில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது.

பகவான் கோயில் கொண்டுள்ள சன்னதிக்கு பின்புறம் விடத்தலை என்ற ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தினுடைய இலையானது கடுகை விட மிகச் சிறியதாக காட்சியளிக்கிறது . இவ்விலையை நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு நோயில் இருந்து விடுதலை கிடைக்கும் . குறிப்பாக வயிற்று நோய்களுக்கு அருமருந்தாகும்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளிலும் இங்கு பெரும் திருவிழா கொண்டாடப்படும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சனிக்கிழமைகளில் பகவானை தரிசித்து அருள் பெறுவர். ஆடி மாதம் மூன்றாம் சனிக்கிழமை இறைவனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

(மறுநாள்) மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வருடத்தில் ஒரு நாள் மட்டும் இறைவனின் உற்சவமூர்த்தி தேரில் வீற்றிருந்து நகரில் வலம் வருவார் . சனிபகவானுக்கு அமைந்துள்ள கோயில்களிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளி காட்சி தரும் கோயில் இது மட்டுமே.

கோயில் அமைப்பும் வழிபாடும்

இராஜவாய்க்கால் என்றும் சுரபி நதி என்றும் போற்றப்படும் நதியின் கரையில் (தற்போது வாய்க்காலாக மாறிவிட்டது) அமைந்துள்ள இக் கோயிலுக்கு வருவோர் நதியில் நீராடி கொடிக்கம்பம் வருவர். அதனருகில் உப்பு, எள் போன்றவற்றை இட்டு பிரார்த்தனை செய்வர். அடுத்து உள்ள காக்காய் மண்டபத்தில் காக்காய் உருவங்களை வைத்து வழிபடுவர். அருகில் எள் விளக்கேற்றி தோஷங்களை நீக்குமாறு ப்ரார்த்தனை செய்வர். பின்பு மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்புரியும் சுயம்புவான சனீஸ்வர பகவானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றுவர்.

வேண்டும் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றித் தரும் சனிபகவான் அருள் பெறுவோம். இக்கோவில் தேனி நகரிலிருந்து இருபத்தி மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் சின்னமனூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு செல்ல விரும்புவோர் மதுரை வரை ரயிலில் பயணித்து பின்பு பேருந்து பயணமாக இவ்வூரை அடையலாம். சுயம்பு உருவமாய் காட்சி தரும் சனீஸ்வர பகவான் நமக்கு நல்லதையே தர காத்திருக்கிறார் சென்று அருள் பெறுவோம். குச்சனூரில் அழகான அக்ரஹாரம் அமைந்துள்ளது அருகில் படிக்கட்டுகளுடன் கூடிய வாய்க்கால் ஓடுகிறது.

அங்கு குளித்து விட்டு கரைமேல் ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத ஶ்ரீநிவாஸர் அருள் புரிகிறார் 500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனிபகவான் கோயிலை அடைந்துவிடலாம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 வரை மாலை 4 மணி முதல் 10 மணி வரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe