
சபரிமலையில் பக்தர்கள் கோஷத்தால் ஒலி மாசு ஏற்படுவதாக, கேரள வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு கேரள வனத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
சரண கோஷத்தால் ஒலி மாசா? – இணையதளத்தில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு மந்திரி உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவில்
கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மாதாந்திர பூஜைகளின்போது ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.
சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, ‘சுவாமியே சரணம் ஐயப்பா…..’ என்ற சரண கோஷம் முழங்க நடந்து செல்வார்கள்.
சபரிமலை கோவில் இருக்கும் பகுதி புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இதனால் இந்த வனப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகமாக இருப்பதாலும், அவர்கள் சரணகோஷம் எழுப்புவதாலும், சபரிமலையில் ஒலி மாசு ஏற்படுவதாக சில இணையதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி ராஜு கூறியதாவது:-

சபரிமலையில் பக்தர்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், ஒலி மாசு ஏற்படுவதாகவும் கேரள வனத்துறை மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவலில் உண்மை கிடையாது.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் புலிகள் சரணாலயம் குறித்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வு பற்றி கேரள வனத்துறை ஆராய்ந்து அறிக்கை அளித்து உள்ளது. அதைத்தான் திரித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



